'சுவாமி, உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கும்போது, கால்களுக்கு மட்டும் ஏன் இத்தனைக் கரிசனம் காட்டச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அன்பர் ஒருவர்.
அவரே தொடர்ந்து... ''அலுவலகத்திலோ வீட்டிலோ ஏதேனும் வேலை செய்யும் போதெல்லாம் கைகளைத்தான் பயன்படுத்து கிறோம். மின்விசிறிக்குக் கீழே அமர்ந்து செய்கிற வேலையாக இருந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பல ஏரியாக்களில் அலைவதாக இருந்தாலும் சரி... கால்களுக்குப் பெரிய வேலை எதுவுமே இல்லியே?! கண்கள் கவனமாகப் பார்க்கின்றன; முன்னேயும் பின்னேயும் பக்கவாட்டிலும் வருகிற மற்ற வாகனங்களுக்குத் தக்கபடி வண்டியைச் செலுத்தவேண்டும் என எந்நேரமும் புத்தி விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மனம், புத்தி, கண்கள் ஆகியன ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்துடன் பணியாற்றுகின்றன. அதேபோல், வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்டுவதற்குத் தோதாக, நம் முதுகு நிமிர்ந்தும் வளைந்தும் செயல்பட்டபடி இருக்கிறது. கைகள் ஹேண்டில்பாரைப் பற்றியிருக்கின்றன. அப்படியிருக்க... கால்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தவேண்டும்? இத்தனைக் கரிசனம் எதற்காக?'' என்றார்.
உடனே அங்கிருந்த மற்ற அன்பர்கள், அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர். கைகளை உயர்த்திச் சிரிப்பை நிறுத்தினேன். ''ஏன் சிரிக்கிறீர்கள்? அவரது சந்தேகம் நியாயமானது! நீங்கள் இப்படிச் சிரித்தால், உங்களில் வேறு சிலரின் இதுபோன்ற சந்தேகங்கள் கேட்கப்படாமலே போகலாம்; விடைகள், வினாக்களுக்காக ஏங்கித் தவிக்கும்'' என்று சொல்லிவிட்டு, அந்த அன்பரைப் பார்த்தேன்.
''நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். ''ஆமாம்'' என்றார். ''நிம்மதியாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ''ஆமாம்'' என்றார். ''சரி, மிகப் பெரிய சந்தோஷமும் நிம்மதியும் எப்போது, எதனால் கிடைப்பதாக உணர்கிறீர்கள்?'' என்று கேட்டேன். சற்றே யோசித்தவர், ''ஆபீஸ் செல்வதற்குப் புதிதாக பைக் வாங்கினேன். இப்போது ஆபீஸ் சென்று வருவது சுலபமாக, சுகமாக இருக்கிறது, சுவாமி!'' என்றார். தொடர்ந்து, ''என் மகன் ஆசைப் பட்டபடி, அவனை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறேன். இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்?'' என்றார். பிறகு அவரே, ''என் மனைவிக்குச் சமீபத்தில் தங்க வளையல் வாங்கித் தந்தேன். அவளது முகத்தில் அப்படியரு பிரகாசம்!'' என்று வெட்கத்துடன் தெரிவித்தார். ''அவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?'' என்று புன்சிரிப்புடன் கேட்டேன்.
''கிராமத்தில் உள்ள என் அப்பாவின் குடை, கிழிந்து, கம்பிகள் உடைந்துவிட்டன. அதேபோல், அம்மாவின் மூக்குக்கண்ணாடி வளைந்தும் நெளிந்துமாக, கீழே குனிகிறபோதெல்லாம் விழுந்துவிடுகின்றன. போன மாதம் ஊருக்குச் சென்றபோது, அப்பாவுக்கு குடையும் அம்மாவுக்கு ஒரு மூக்குக் கண்ணாடியும் வாங்கிக் கொடுத்தேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் மனதின் பூரிப்புக்கும் நிறைவுக்கும் அளவே இல்லை'' என்று சொல்லும்போது அந்த அன்பரின் கண்கள் கலங்கியிருந்தன.
மோட்டார் சைக்கிள், கல்லூரிப் படிப்பு, தங்க வளையல் எல்லாமே காஸ்ட்லிதான்! ஆனால், அப்பாவுக்கு வாங்கித் தந்த குடையிலும், அம்மாவின் மூக்குக் கண்ணாடியிலும் அத்தனை நிம்மதியும் சந்தோஷமும் பரவிக் கிடக்கின்றன. பிறந்தது முதல் இன்றைய நாள் வரையிலான நம்முடைய இந்தப் பயணத்துக்கு, அவர்கள்தானே வித்து! வேர்களுக்கு நீருற்றினால் தானே மரத்துக்குத் தெம்பு?!
அப்படித்தான்... மரமென ஓங்கி உயர்ந்து, வளர்ந்து நிற்கிற நமக்கான வேர்கள், நம் கால்கள்!
வஜ்ராசனம் தெரியுமா? இரண்டு தொடைகளும் சேர்ந்த நிலையில், இரண்டு
பாதங்களும் பின்னுக்குச் செல்ல, மண்டியிட்டு அமருங்கள். அதாவது, உங்களுக்குப் பின்பக்கத் தில், வலது கால் பெருவிரலை இடது கால் பெருவிரல்மீது வைத்துக் கொண்டு, குதிகால்களை நன்றாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த உள்ளங்கால்களுக்கு இடையே பிருஷ்டத்தை, அதாவது நமது பின் பாகத்தை வசதியாக வைத்துக்கொண்டு, அமருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் பின்னால், முதுகின் மேல் பகுதிக்குக் கொண்டு வரவும். கட்டைவிரல்கள் தவிர, மீதமுள்ள எட்டு விரல்களும் முதுகை மேலிருந்து கீழாக அழுத்தியபடி, கீழ் முதுகு வரை அழுத்துங்கள். அதாவது, முதுகெலும்பு எனும் பகுதியை எட்டு விரல்களும் தொட்டுக் கொண்டே வரட்டும். கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் ஐந்தைந்து முறை செய்யுங்கள்.
நம்முடைய முதுகை நம்மால் பார்க்கமுடியாது. அதனால் என்ன?! நமது முதுகை, கால்கள் தாங்கிக் கொள்ளும். 'உனக்கு நான், எனக்கு நீ' என்று பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளும். முதுகெலும்பில் தெம்பில்லை எனில், கால்கள் ரொம்ப நேரம் நிற்காது. கால்களுக்கு வலு இல்லையெனில், முதுகெலும்பு நொந்து போகும். சட்டென்று முதுகு வளையும். 'என்னன்னே தெரியலீங்க... பத்து நிமிஷம் நின்னாலே, முதுகு சுருக்குனு பிடிச்சுக்குது' எனப் பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்!
அதுமட்டுமா? அலுவலகத்தில், நீண்ட நேரம் கால்களை அசைக் காமல் வைத்திருந்தபடி உட்கார்ந்திருந்தாலோ அல்லது பைக்கில் எந்த அசைவுமின்றி கால்களை அப்படியே வைத்திருந் தாலோ, பிறகு எங்கேனும் வண்டி நிற்கும்போதோ அல்லது அலுவலக நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ என்ன செய்வீர்கள்?!
கால்களை உதறுவீர்கள்; விரல்களைச் சுருக்கி விரிப்பீர்கள்; தொடைகளில் செல்லமாக அறைந்து கொள்வீர்கள்; ஆடுதசையை மெள்ளப் பிடித்து விடுவீர்கள். முதுகின் பக்கவாட்டுப் பகுதியில் கைகளை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியுமாகத் திரும்புவீர்கள்; பிறகு, பின்னோக்கி முதுகை வளைத்து, அண்ணாந்து பார்த்துவிட்டு, அப்படியே குனிந்து பார்ப்பீர்கள். அப்போது உடலுக்குள் ஒரு பரவசம் ஓடுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
வேர்களில் நீரூற்றினால் செடி, மரமாகும்; கால்களுக்கு கவனிப்பைக் கொடுத்தால், உடலின் எல்லாப் பாகங்களும் செம்மையாகும்!