வெள்ளம் !
திடீரென்று வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தண்ணீரில் மிதக்க, எல்லோரும் இங்கும் அங்குமாக ஓடினார்கள். குட்டீஸ் எல்லாம் தண்ணீரில் தத்தளிக்க, அவர்களை ஒரு பக்கமாக இழுத்து உட்கார வைத்தவள், ''இதுக்குதான் சொன்னேன், ஏரி ஓரமா வீட்டைக் கட்டாதீங்கன்னு... இப்பப் பாருங்க எல்லாம் நாசம்!'' என்று கத்த, ''சரி, என்ன செய்றது... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுது. கவலைய விடு. எல்லாரையும் கூட்டிக்க, வேற இடத்துக்குப் போயிடுவோம்'' என்று பெருசு சொல்ல, குடும்பம் குடும்பமாக வேறு இடத்தில் புற்று வைக்கக் கிளம்பியது அந்த எறும்புக் கூட்டம்.
கனகு!
பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கிற வேலை கனகசாமிக்கு. எது நடக்கிறதோ இல்லையோ... அந்தந்த வேளைக்கு டான் என்று மணி அடித்துவிடுவார் கனகு. அன்றும் வழக்கம்போல வீட்டில் இருந்து கிளம்பிய கனகுக்கு, பெரிய கவலை ஒன்று வாட்டி எடுத்தது. 'ச்சே! இன்னிக்கு மணி அடிக்க முடியாதே... இப்படி ஆயிடுச்சே..!' என்று புலம்பித் தள்ளினார். 'நேத்து எல்லாம் நல்லா அடிக்க முடிஞ்சதே. காலைல இப்படி ஆயிடுச்சே... ஹூம்! இன்னிக்கு ஃபுல்லா மணி அடிக்காமலே ஓட்டியாகணும்...' என்று பள்ளிக்கூடத்தை நெருங்கிய கனகு, 'சரி, ஸ்கூல் டயம் ஆயிடுச்சு... ஃபர்ஸ்ட் பெல்லை அடிச்சுட்டு வந்து, நம்ம சைக்கிள் பெல்லுல என்ன ரிப்பேர்னு கவனிப்போம்' என்று ஓடினார்.
பிஸி !
காலையில் எழுந்ததில் இருந்து செல்விக்கு எதுவுமே நடக்கவில்லை. கிச்சனில் தலைக்கு மேல் வேலை இருந்தது. வேலைக்கு ஆள் வைத்தும் சரியாக வருவது கிடையாது. அன்றும் மட்டம் போட்டுவிட்டதால் அந்த வேலைகளும் அப்படியே கிடந்தது. நேற்றுதான் கடைசிப் பரீட்சை முடிந்து லீவு ஆரம்பித்துவிட்டதால், ஆளுக்கு ஒரு பக்கம் இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். தினம் பாக்கெட் பால் கொண்டுவந்து போடுபவன் இன்னும் காணாமல், காபியும் லேட். அப்பா ஒரு பக்கம் டென்ஷன். அவரை சமாளிக்க முடியாமல் வீடே சூடாக இருந்தது. எழுந்து இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் 'உச்சா' விடக்கூட கூட்டிட்டுப் போகலை, பிரஷ் பண்ணி விடலை, மம்மு கொடுக்கலை என்ற கடுப்பில் உர்ர்ரென்று இருந்தாள் இரண்டு வயது செல்வி.
ரகசியம் ?!
பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைந்தான் கார்த்திக். 'யாரும் பார்த்துவிடக் கூடாது... யார் கண்ணுலயாவது பட்டோம், அவ்வளவுதான்! உடனே சொல்லிடுவாங்க' என்று பதைபதைத்தான். ஆனால், அது சாத்தியமே இல்லை என்பதையும் கார்த்திக் உணர்ந்திருந்தான். 'பட்டப் பகலில் நாம் இப்படி வந்தால், யார் கண்ணில்தான் விழ மாட்டோம்' என்று நினைக்கும்போதே... முதல் ஆளாக கணேசன் பார்த்துவிட்டான். உடனே கத்தினான், ''ஹே... மொட்டை!''
சிக்கல் !
பரீட்சை ஹாலில் எல்லோரும் அமைதியாக எழுதிக்கொண்டிருந்தார்கள். முரளிக்கு கை துறுதுறு என்றிருந்தது. கேட்கப்பட்டிருந்த கேள்விகள் எல்லாவற்றையுமே எழுதிவிட முடியும் என்று தோன்றியது. 'அடடா... இந்தச் சமயம் பார்த்து எடுக்க வரமாட்டேங்குதே' என பரபரத்தான். எடுக்க முயன்றான் முரளி. முடியவில்லை. 'ச்சே! எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருக்கோம். கேள்விகளும் சூப்பரா வந்திருக்கு... இப்ப போயி காலை வாருதே' என்று தவித்தான். வியர்த்துப் போனது. கண்காணிப்பாளர் சற்று தள்ளி நின்றிருந்தார். 'எல்லாரும் எழுத ஆரம்பிச்சுட்டாங்க... நாம இன்னும் ஒரு பிட்டுக் கூட எழுத ஆரம்பிக்கலை' என படபடத்த முரளி, மீண்டும் அதை எடுக்க முயற்சித்தான். எதேச்சையாகத் திரும்பிய கண்காணிப்பாளர், முரளியைப் பார்த்துவிட்டார். மடமடவென அவன் அருகில் வந்து நின்றார். ''எல்லாரும் எழுத ஆரம்பிச்சுட்டாங்க... என்ன பண்றே நீ?'' என்றவர், முரளியிடமிருந்து பென்சில் பாக்ஸை வாங்கினார். திறக்க முடியாமல் ஸ்ட்ரக் ஆகியிருந்த பாக்ஸை கஷ்டப்பட்டுத் திறந்து, பேனாவை எடுத்துக் கொடுத்தார்.
அடி !
ப்ளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த அண்ணனை அடித்தாள் சுவேதா. ''போடீ இங்கிருந்து'' என டென்ஷனானான். அங்கிருந்து ஓடி, பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவை நெருங்கி ஓர் அடி வைத்தாள். நிமிர்ந்து பார்த்தவர், ''ஓகே!'' என்றார். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியின் கன்னத்தில் அடித்தாள். ''ஒழுங்கா அடிம்மா!'' என்றாள் பாட்டி. அங்கே வந்து அமர்ந்த தாத்தாவையும் விடவில்லை... முதுகில் ஓர் அடி கொடுத்தாள். ''அடிச்சியா... நகரு!'' என்று திரும்பிப் பார்த்தார் தாத்தா. அப்போது, கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் அம்மா. ''கைலே சூடா டீ இருக்கு... கிட்டே வந்துடாதே!'' என்று அவள் கத்தியதையும் பொருட்படுத்தாமல் அம்மாவை நெருங்கி, அவள் காலில் ஓர் அடி போட்டாள் சுவேதா. சமாளித்து நின்ற அம்மா, ''எத்தனை அடி அடிப்பே? அங்கே பாரு அப்பாகிட்டே'' என்று கை நீட்டினாள்.
அப்பா தன்னைத் தானே ஒரு அடி போட்டுக் கொண்டு, ''அடிச்சுட்டேன் சுவேதா... ஒரு பக்கம் அமைதியா உட்காரு'' என்ற அப்பா நொந்து கொண்டார், ''நல்லா அடிக்கிறே கொசுவை!''