இன்றைக்கும் நம்மூரில் பலபேர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏஜென்டின் நெருக்கடி தாங்காமல்தான் எடுக்கிறார்கள்! அப்படி எடுத்துவிட்டு அந்த பாலிசி பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லாமல் தொடர்ந்து பிரீமியம் கட்டி வருவார்கள்..
அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நெருக்கடியில் அவசரத்தில் நமக்கு பிடித்தம் இல்லாத ஒரு பாலிசியை எடுத்துவிட்டால் அதை கேன்சல் செய்ய முடியாதா? அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா? கவலையே வேண்டாம், அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது!
இதற்காகவே 'ஃப்ரீ லுக் பிரீயட்' என்றொரு வசதி இருக்கிறது. அதன்படி ஒருவர், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்து, அது பிடிக்கவில்லை என்றால் பாலிசிப் பத்திரத்தை பதினைந்து நாட்களுக்குள் திரும்பக் கொடுத்து, கட்டிய பிரீமியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்! இருப்பினும் கட்டிய முழு பிரிமீயத்தையும் திரும்பத் தரமாட்டார்கள். முத்திரைக் கட்டணம், மருத்துவ பரிசோதனைக்கான செலவு போன்றவற்றைக் கழித்துக் கொண்டு மீதி தொகையைத்தான் தருவார்கள்.
உதாரணத்துக்கு, மருத்துவப் பரிசோதனை தேவைப்படாத 30 வயதுக்காரர் ஒருவர், ஐந்து லட்ச ரூபாய் கவரேஜுக்கு (20 ஆண்டு) ஆண்டு பிரீமியம் 1,615 ரூபாய் கட்டிவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த பாலிசியை 15 நாட்கள் கழித்து அவர் திரும்ப ஒப்படைக்கிறார் என்றால், அந்த 15 நாட்களுக்கான லைஃப் கவரேஜுக்கான பிரீமியம் 135 ரூபாய் மற்றும் தபால் செலவு 15 ரூபாய், ஆக மொத்தம் 150 ரூபாயைக் கழித்துவிட்டு மீதியை தருவார்கள். ஆனால் ரொக்கமாகத் தரமாட்டார்கள், காசோலையாக வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
இந்த வசதியை முழு அளவில் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. ஏஜென்ட் எந்த தேதியில் பாலிசிதாரர் கையில் கொடுக்கிறாரோ, அந்த தேதியி லிருந்து 'ஃப்ரீ லுக் பிரீயட்'க்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிடும். ஒரு பாலிசியை முழுமையாகப் படித்து, அதன் லாப நஷ்டத்தை அறிந்து கொள்ள இந்த பதினைந்து நாட்கள் அவகாசம் போதுமானது. இனியாவது பாலிசியை எடுத்துவிட்டு வருத்தப்படுவதை விட்டுவிட்டு, இந்த வசதியைத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்வோமே!
எல்லோருக்கும் ஒருவழி என்றால் இடும்பனுக்கு வேறுவழி என்ற கதையாக சில ஏஜென்டுகள், எடுத்த பாலிசி பிடிக்கவில்லை என்று எங்கே 'ஃப்ரீ லுக் பிரீயட்' வசதியைப் பயன்படுத்தி கேன்சல் செய்துவிடுவார்களோ என்று பயந்து, பாலிசி எடுத்து பதினைந்து நாட்கள் வரை பத்திரத்தை நம் கண்ணிலேயே காட்ட மாட்டார்கள்!
இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் பாலிசி பத்திரத்தை நேரடியாக கொடுக்காமல் ஏன் இப்படி ஏஜென்டுகள் மூலம் கொடுக்கிறார் கள் என்று சேலத்தைச் சேர்ந்த முதன்மை ஆயுள் காப்பீடு ஆலோசகர் ஜே. அருள்சிவத்திடம் கேட்டோம். ''ஏஜென்டுகளுக்கும் பாலிசிதாரர்களுக்கும் இடையே நல்லதொரு உறவை வளர்க்கவே இப்படி செய்கிறோம். தவிர, பாலிசிகளை தபாலில் அனுப்புவது பாதுகாப்பானதல்ல என்பதாலும், நேரில் கொண்டு கொடுக்கச் சொல்கிறோம். மற்றபடி, இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது.'' என்றார்.
ஏஜென்டுகள் இப்படி கால தாமதம் செய்தாலும், என்றைக்கு அவரிடமிருந்து பெற்றுக் கொள் கிறோம் என்பதற்கான ஒரு ஆதாரத்தை வைத்துக் கொண்டால், அன்றிலிருந்து பதினைந்து நாட்கள் அவகாசம் நமக்கு கிடைக்கும்.
இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைவிட இன்ஷூரன்ஸ் நிறுவனமே பாலிசி பத்திரத்தை நேரடியாக பாலிசிதாரர்களுக்கு அனுப்ப ஐ.ஆர்.டி.ஏ. உத்தரவு போட்டால் மட்டுமே இந்த பிரச்னை தீரும்.
-சி.சரவணன்
வரிச் சலுகையா? வரி ஏய்ப்பா?! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற கதையாக சில கில்லாடிப் பேர்வழிகள் இந்த 'ஃப்ரீ லுக் பிரீயட்' வசதியைப் பயன்படுத்தி வருமான வரி விஷயத்தில் லாபம் பார்த்து விடுகிறார்கள்! எப்படி என்றால் மார்ச் மாதக் கடைசி வாரத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிக தொகைக்கு சிங்கிள் பிரீமிய பாலிசி ஒன்றை எடுத்துவிட வேண்டியது... பின்னர் அந்த ஆதாரத்தைக் காட்டி, வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்ள வேண்டியது. பிறகு ஏப்ரல் மாதம் பிறந்ததுமே பாலிசியை கேன்சல் பண்ணிவிட்டு கட்டிய பிரீமியத்தை திருப்பி வாங்கி விடுகிறார்கள்! இப்படி ஐம்பது நூறு செலவில் ஐயாயிரம் பத்தாயிரம் என வரிச் சலுகை பெற்று விடுகிறார்கள்! இந்த கில்லாடி வேலைக்கு சில ஏஜென்டுகளும் உடந்தையாக இருப்பதாக புகார்கள் வரவும், எந்த ஏஜென்ட் விற்ற பாலிசிகள் திரும்ப வருகிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறதாம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள். தவிர, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஒன் டைம் பிரீமியம் பாலிசிகள் வரிச் சலுகை பெறத் தகுதி கொண்டவைதானா என ஒன்றுக்கு மூன்று முறை விசாரிக்கவும் வருமான வரித் துறை முடிவு செய்திருக்கிறதாம்! |