நேற்று சாதாரணமாக சைக்கிளில் சென்ற ஒருவர் இன்று காரில் வந்து இறங்குகிறார். எப்படி இவருக்கு இவ்வளவு செல்வம் சேர்ந்தது என குழம்பிப்போவோம். விபரமறிந்தவர்கள் சொல்வார்கள் அவர், 'எவருக்கோ பினாமியாக இருக்கிறார்' என்று. இப்படி 'இவர் அவருக்கு பினாமி, அவர் இவருக்கு பினாமி' என பினாமிகள் பற்றி பல கிசுகிசுக்கள் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் நம் காதுகளுக்கு வரத்தான் செய்கிறது.
அண்மை காலத்தில் இந்தியாவில் இதுபோன்ற பினாமிகள் அதிகரித்து விட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் இதனால் ஏற்படுவதால் இந்த போக்கைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவியாய் தவிக்கிறது.
பினாமிக்கு 'இரவல் பெயர்' என்று தமிழில் அர்த்தம் சொல்லலாம். 'பெயர் இல்லாதது' என்று உருது மொழி சொல்கிறது. இந்த பெயர் இல்லாததுதான் இந்த பாடு படுத்துகிறது இந்தியாவை.
யார் பினாமி?
ஒருவர் தன்னுடைய பெயரால் சொத்து வாங்குவதையோ, வணிகம் செய்வதையோ குறைத்துக் கொண்டு, மனைவி, மகள் போன்ற மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாமல் வேறொருவர் பெயரில் செய்யும்போது அந்த இன்னொரு நபர் பினாமியாகி விடுகிறார். அசையும் பொருளாக இருந்தாலும் சரி, அசையா பொருளாக இருந்தாலும் சரி, இப்படி இன்னொருவர் பெயரில் வாங்கினாலே அது பினாமி எல்லைக்குள் வந்துவிடும்.
ஆரம்ப காலத்தில், பாசத்தை வெளிக்காட்டும் விதமாக மனைவி, பிள்ளைகள் பெயரில் குடும்பத் தலைவர் சொத்துக்கள் வாங்குவது நடந்தது. அதாவது, மிகவும் நம்பகமான குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்துகள் வாங்குவார்கள்.
அதன்பிறகு கடன்காரர்களை ஏமாற்ற, வரி ஏய்ப்பு செய்ய, லஞ்சம், ஊழல் மூலம் சம்பாதித்ததை கணக்கில் காட்டாமல் மறைக்க, கோர்ட்டில் திவால் நோட்டீஸ் கொடுக்க என பல காரணங்களால் குடும்ப உறவு அல்லாத ஆட்களின் பெயரில் சொத்து வாங்குவது அதிகரித்தது. இப்படி குடும்ப உறவு இல்லாத மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதுதான் பினாமி சொத்து ஆகும்.
இப்படி பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி, பினாமிக்கும் சொத்தை வாங்கிக் கொடுத்தவருக்கும் இடையே பிரச்னை வந்துவிட்டால் என்ன ஆகும்? சொத்து யார் கைக்கு போய்விடும்? 1988-ம் வருடத்துக்கு முன்பு வரை சொத்தை வாங்கிக் கொடுத்தவருக்குதான் உரிமை போய்ச் சேர்ந்தது. ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம்...
பிரபு என்கிற நபர், வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க தன் நண்பரான சுரேஷ் பெயரில் பினாமியாக சொத்தை பதிவு செய்தார். இடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், பிரபு வாங்கிக் கொடுத்த சொத்தை, சுரேஷ் தர முடியாது என்று சொல்லி விட்டார். பிரபு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சுரேஷ் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்பதை நிரூபித்தார். விளைவு, பிரபு வசம் சொத்து வந்தது. அதாவது, சொத்தை வாங்க யார் பணம் கொடுத்தார்களோ அவர்களே உண்மையான உரிமையாளர் என்றானது. இதேபோல், மனைவி பெயரில் கணவர் சொத்து வாங்கியிருந்தாலும், மனைவி தான் இஷ்டப்பட்டவர்களுக்கு அந்த சொத்தை கொடுக்க முடியாத நிலைதான் இருந்தது. அதாவது, அப்பாவின் பணத்தில் அம்மா பெயரில் சொத்து வாங்கப்பட்டிருந்ததால், அதை குறிப்பிட்டு எங்களுக்கும் சொத்தில் உரிமை இருக்கிறது என தாய் மீது வழக்கு தொடர்வதும் அதிகரித்தன.
1988-க்கு முன்பு வரை பினாமி சொத்துகளை முறைப்படுத்த சரியான எந்தச் சட்டமும் இல்லாததால் இப்படி பல பிரச்னைகள் எழுந்தன.
பினாமி தடுப்புச் சட்டம்
அத்துமீறி செயல்படுபவர்களையும், சட்ட விரோதமாக சம்பாதிப்ப வர்களையும் கட்டுப்படுத்தும் விதமாக 1988-ம் ஆண்டு, 'பினாமி சொத்து தடுப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்டது.
அதன் முக்கிய ஷரத்துகள் வருமாறு:
* பினாமி சொத்தை வாங்குவதோ விற்பதோ சட்ட விரோதம்.
* சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, யாரிடம் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர்.
* பினாமி பெயரில் சொத்து பரிமாற்றம் செய்தவர்கள் மீது குற்ற வியல் வழக்கு தொடரப்படும்.
* குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறைத் தண்டனை.
* பினாமி பெயரில் வாங்கப் பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன். எனவே, அது என் சொத்து என உரிமை கோரி கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.
* பினாமி சொத்து பறிமுதல் செய்யப்படும்.
விதி விலக்குகள்
இந்தச் சட்டத்தில் விதி விலக்குகளும் இருக்கின்றன. அதாவது, கணவன் தன் மனைவி பெயரிலோ, தந்தை தன் திருமணம் ஆகாத மகள் பெயரிலோ சொத்து வாங்கினால் அது பினாமி தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்படாது.
அதே நேரத்தில், தந்தை, மகன் பெயரில் சொத்து வாங்கும்போது அது பினாமியாக கருதப்படும். இதேபோல், இந்துக் கூட்டுக் குடும்பத்தில் குடும்பத் தலைவர் மற்றவர்களுக்காக சொத்து வாங்குவது பினாமி சொத்தாக கருதப்படாது. பலர் பலன் அடையும் டிரஸ்ட் பெயரில் வாங்கப்படும் சொத்துகளும் பினாமி சொத்து அல்ல என்று தெளிவுப்படுத்தப்பட்டது.
ஆனாலும், ஒருவர் பெயரில் ஒரு சொத்து வாங்கப்பட்டாலும், அதற்கான வருமான ஆதாரம் இல்லை என்றால் அது பினாமி சொத்தாகத்தான் கருதமுடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இப்படியான சட்டம் கொண்டு வந்த பின்னும் அதை முறையாக அமல்படுத்த விதிகள் எதுவும் இல்லை என்பதால் பினாமிகள் எல்லாம் உண்மையான உரிமையாளர்கள் போலவே நடந்து கொள்வதோடு, அதனை தங்களின் சொத்தாக கருதி அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், வாங்கிக் கொடுத்தவர்கள் திடீர் என இறந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்னையில் சிக்கி ஜெயிலுக்குப் போய்விட்டாலோ பினாமிகளுக்கு கொண்டாட்டம்தான். ஐந்து பைசா கூட போடாமல், அவர்கள் பெயரில் வாங்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாம் அவர்களுக்கே அவர்களுக்குதானே!
இது ஒருபுறமிருக்க பல இடங்களில் சொத்து வாங்கிக் கொடுத்தவர்களும் பினாமி சொத்தின் பலனை அனுபவிப்பதால் சட்டம் தன்னுடைய கடமையைச் செய்ய முடியாத நிலையில்தான் உள்ளது.
சட்டத் திருத்தம்..!
இந்த நிலையில் தற்போது பினாமி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் முக்கியமான சட்டத் திருத்தம் என்பதால் அது எப்படியிருக்கும் என்பது குறித்து வழக்கறிஞர் என். ரமேஷிடம் கேட்டோம்.
''பழைய சட்டத்தில் பினாமி சொத்து குறித்து யாரிடம் புகார் கொடுப்பது, யார் புகார் கொடுப்பது, விசாரணை வழி முறைகள் என்ன என்பது போன்ற எதுவும் தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது. மேலும், சொத்தை பறிமுதல் செய்வது தொடர்பான அதிகாரமும் வரையறுக்கப்படவில்லை. இதனால், இதுவரை பினாமி பரிமாற்றம் தொடர்பான சொத்துகள் பறிமுதல் செய்யப்படவோ, குற்ற நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை. இந்தக் குறைபாடுகளை சரிசெய்து, சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது நல்ல விஷயம்தான்.
அதாவது, பினாமி சொத்துகளை சட்டப்படி பறிமுதல் செய்வதற்கான அதிகாரம், வழிமுறைகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம்'' என்றார்.
சொத்து விலை குறையுமா?
இந்நிலையில், சொத்துக்களை வாங்கியதற்கான சரியான வருமான ஆதாரத்தை பினாமிகள் காட்டவில்லை என்றால் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்பதை அரசு எந்த ஒரு பாரபட்சமும் காட்டாமல் அமல்படுத்தினால் நாட்டில் சொத்துக்கள் மீதான பரிவர்த்தனை குறைந்து அதன் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக மும்பையைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி கருத்து தெரிவித்தார்.
முறையாக சம்பாதித்து , முறையாக வரிகட்டி சொத்து சேர்த்தவர்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. பிஸினஸ் மேன்களும், அரசியல்வாதிகளும் பினாமிகள் பெயரில் வாங்கி குவித்திருக்கும் சொத்துகள் என்ன ஆகும்? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் தெரியும்? பொறுத்திருந்துதான் பார்ப்போமே.