Friday, December 18, 2009

பிரம்மத்தை தேடு

பிரம்மத்தை தேடு

 

கங்கைக்கரை பகுதி. மெல்லிய தேவலோக இசை போன்ற பாடல் காற்றில் கசிந்து வந்தது.

ஒளிரும் தேகமும் ஞானம் ததும்பும் முகமுடன் பிரம்ம ஞானி அமர்ந்திருந்தார். அவரின் ஆசனத்தை சுற்றி சிஷ்யர்களும் பொதுமக்களும் ஆனந்தமயமான நிலையில் இருந்தனர்.

இறைநாமத்தை சங்கீதமாக ஒரு குழு இசைத்துக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் மெளன சாட்சியாக ரசித்துக்கொண்டிருந்தாள் கங்கை. தேவலோகத்திலிருக்கும் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு அங்கு வந்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு தெய்வீக சூழ்நிலையை அங்கு காண முடிந்தது.

தன்முன்னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார். எதிரில் பட்டுவேஷ்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் ஒருவர் வணங்கி நின்றார். கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்கள் நிறைந்து வழிந்தது.

பணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து " உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே. உங்களிடம் எத்தனையோ முறை பிரம்ம ஞானத்தை உபதேசிக்க கேட்டேன் ஆனால் நீங்கள் மனம் இளகவில்லை. என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள்" எனக்கேட்டார்.


ஞான குரு மெல்ல எழுந்து தனது காவி துணியில் அனைத்து செல்வங்களையும் போட சொன்னார். அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாக கட்டி, தலைக்கு மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் கங்கையில் எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பணக்காரர் கங்கை நீரில் பாய்ந்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார்.


கங்கையின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள். அதுவரை கண்களை மூடி அமர்ந்த்திருந்த சிஷ்யர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர்.

குழப்பம் கொண்ட சிஷ்யர்கள் குருவிடம் கேட்டார்கள், "குருதேவா என்ன நடக்கிறது? அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்?"


தனது ஆசனத்தில் அமந்த ஞான குரு புன்புறுவலுடன் சிஷ்யர்களை பார்த்து கூறினார்...

"
அவர் பிரம்ம ஞானத்தை தேடுகிறார்"


நம்மில் பலர் ஆன்மீக உயர்வு நிலையை பணத்தை வழங்குவதன் மூலம் பெறலாம் என எண்ணுகிறார்கள். செல்வந்தருக்கு விலைமதிக்க முடியாத செல்வம் பிரம்ம ஞானத்திற்கு ஈடாக தெரிந்ததால் குருவும் அது பணக்காரனின் பிரம்ம ஞானம் என குறிப்பிடுகிறார்.

கடவுளைப் பார்க்க கோவிலில் "சிறப்பு" நுழைவாயில் வழியாக செல்லுவதிலிந்து ஆரம்பிக்கிறது நமது ஆணவ செருக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.