யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவன் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
காசியபர் எனும் அந்தணர், கல்வி கேள்விகளில் சிறந்தவர். என்ன காரணத்தாலோ, அவருக்கு பார்வை குறை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், முழுவதுமாகவே தெரியாமல் போனது.
இதனால், பார்வை திரும்ப கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப் பெருமானை சரணடைந்தார். அதிகாலையில் எழுந்து, கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடுவதும், அவன் நாமத்தை பாராயணம் செய்வதுமாக திருச்செந்தூரான் சன்னிதியே கதியென்று கிடந்தார்.
பிரார்த்தனையின் பலனாக, திடீரென்று ஒரு நாள், அவருக்கு மங்கலாகப் பார்வை தெரியத் துவங்கியது. மகிழ்ச்சியில் கூத்தாடினாலும், 'திருச்செந்தூரா... உன் அருளால், என் பார்வை முழுமையாகத் தெரியாதா...' என வேண்டி, கண்ணீர் விட்டார்.
அப்போது, கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அருளாடி, 'காசியபா... என் பக்தனும், இந்நாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருகிறான்; அந்த உத்தம பக்தனின் கை, உன் மீது பட்டதும், உனக்குப் பார்வை முழுமையாகத் தெரியும்...' என்றார்.
அதைக் கேட்டதும், அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அதேசமயம் கலக்கமாகவும் இருந்தது. காரணம், பார்வையற்றவர்களை அரசர் பார்க்க கூடாது என்பது அக்கால சம்பிரதாயம்.
இந்த மனப் போராட்டத்தில் காசியபர் அமர்ந்திருக்க, சிறிது நேரத்தில்,கோவிலுக்கு வந்தார் அரசர் ஜகவீரன். அவரிடம் அருள் வாக்கு பற்றிய தகவல் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், அரசரோ, 'நான் அரசன் என்பதால், அதிகாரம் வேண்டுமானால் என்னிடம் இருக்கலாமே தவிர, அற்புதம் செய்யக் கூடிய அளவிற்கெல்லாம் என்னிடம் சக்தி கிடையாது...' என்று சொல்லி, சாமி தரிசனம் செய்வதில் முனைப்பாக இருந்தார்.
அன்றிரவு, அரசர் ஜகவீரன், கோவிலிலேயே தங்க வேண்டி இருந்ததால், சண்முக விலாச மண்டபத்தில் வந்து அமர்ந்தார். திடீரென்று அவருக்கு என்ன தோன்றியதோ, 'அந்த பார்வையற்றவரை அழைத்து வாருங்கள்...' என்றார்.
அரசு பணியாளர்கள், சம்பிரதாயத்தை எடுத்துச் சொல்லி மறுத்த போதும், பிடிவாதமாக அவரை அழைத்து வரச் சொன்னார் அரசர்.
காசியபரைப் பார்த்ததும், மனம் கசிந்த அரசர், 'நீங்கள் நாளைக் காலை நீராடி, முருகன் சன்னிதிக்கு வாருங்கள்; அவன் திருவருள்படி நடக்கட்டும்...' என்றார்.
மறுநாள் காலையில், 'முருகா... உன் சொற்படி இவருக்குப் பார்வை வராவிட்டால், நான், என் தலையை அறுத்துக் கொண்டு இறப்பேன்...' என்று கூறி, விபூதியை எடுத்து காசியபரின் கண்களில் ஊதி, அவர் கண்களை, தன் கைகளால் மெல்ல வருடினார் அரசர்.
அடுத்த வினாடி, காசியபருக்கு பார்வை திரும்பியது. அனைவரும் அரசரை வாழ்த்த, அவரோ, 'முருகன் எனக்களித்த உயிர்ப்பிச்சை இது; ஆறுமுகனின் அருள் இதை விடப் பெரியது...' எனக் கூறி, அமைதியாக வெளியேறினார்.
அரசரின் கரங்களால், காசியபரின் துயர் தீர்த்த ஆறுமுகன், நம் துயரையும், எவர் மூலமாகவாவது களைவார்.
ஜகவீரன் எனும் அந்த அரசரின் மகன் தான், வீரபாண்டிய கட்டபொம்மன்!