நீல நிறமாக மாறும் குளிர்பான, 'கேன்!'
வர்ஜின் கோலா என்ற குளிர்பான நிறுவனம், ஏப்., 1, 1996ல், பிரிட்டிஷ் நாளிதழ்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அது... 'உங்கள் பாதுகாப்பிற்காக, புதியதொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். தயாரித்த குறிப்பிட்ட நாட்களுக்கு பின், எங்கள் குளிர்பானம், அது வைக்கப்பட்டுள்ள, 'கேனில்' உள்ள உலோகத்துடன் செயல்பட்டு, அதை நீல நிறமாக்கி விடும். எனவே, நீல நிறமாக காணப்படும், காலாவதியான, 'கேன்'களை நீங்கள் தவிர்த்து விடலாம்...' என்று வெளியிட்டிருந்தது. இத்தொழில்நுட்பத்தை பலரும் சிலாகித்தனர். பிறகுதான்
அது, ஏப்ரல் முட்டாளாக்கும் அறிவிப்பு என்பது தெரிய வந்தது.
துண்டாடப்பட்ட பெல்ஜியம்!
துண்டாடப்பட்ட பெல்ஜியம்!
லண்டன், 'டைம்ஸ்' நாளிதழில், ஏப்., 1, 1992ல் வெளியான செய்தி, உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. 'பெல்ஜியம் நாடு இரண்டாகப் பிரிக்கப்படும். டச்சு மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ள வடக்கு பெல்ஜியம், நெதர்லாந்துடனும். பிரான்ஸ் மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ள தெற்கு பெல்ஜியம், பிரான்சுடனும் இணைக்கப்படும்...' என, முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டதுடன், 'இப்படி பெல்ஜியத்தை துண்டாடுவது தவறு...' என்று தலையங்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் சூடாக, 'டிவி'யில் கருத்துகளை தெரிவிக்க துவங்கினர். இவர்களில் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒருவர்!
பின்னர், ஏப்.,1 என்ற உண்மையை அறிந்து, அசடு வழிந்தனர்.
வகுப்பில் வெளியான அந்தரங்கம்!
அமெரிக்காவில் உள்ள அக்வினாஸ் கல்லூரியில், பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய ஸ்டீபன் பரோஸ், மிகவும் கண்டிப்பானவர். 'தன் வகுப்புகளில் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது...' என்றும், 'ஏதாவது இன்கமிங் கால் வந்தால், உடனே அதை ஸ்பீக்கரில் போட்டாக வேண்டும்...' என்றும் கூறினார். இதனால், மாணவர்கள் மொபைல் போனை வகுப்பில் பயன்படுத்த மாட்டார்கள் என்பது அவரது எண்ணம்.
ஒருநாள், மாணவி ஒருத்தியின் மொபைல் போன் ஒலிக்க, விதிப்படி, அதை ஸ்பீக்கர் மோடில் போட்டு, 'ஹலோ...' என்றாள் அந்த மாணவி. மறுமுனையில் ஒரு ஆண் குரல், 'நான் கெவின் கருத்தரிப்பு மையத்தின் ஊழியன்; உங்கள் ரத்தப் பரிசோதனை ரிசல்ட்டில், நீங்கள் கருத்தரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது; பாராட்டுகள்...' என்றார்.
இதைக் கேட்டதும், வெலவெலத்து விட்டார் பேராசிரியர். 'மாணவியின் அந்தரங்க விஷயத்தை வகுப்பு முழுவதும் தெரிய செய்து விட்டோமே...' என்று நினைத்து, மாணவியிடம் மன்னிப்பு கேட்டார்.
'பரவாயில்லை சார்... இது நான் எதிர்பார்த்த செய்தி தான். என் குழந்தைக்கு பெயரை கூட தேர்ந்தெடுத்து விட்டேன். அது, 'ஏப்ரல் பூல்!' என்றாள்.
இந்நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, 'யூ - ட்யூப்'பில் வெளியிடப்பட்டு, லட்சக்கணக்கானவர்களால் பார்த்து, ரசிக்கப்பட்டது.
மழையில் நனையாமல், திறந்த காரில் பயணம்!
உலகப்புகழ் பெற்ற மோட்டார் கம்பெனியான பி.எம்.டபிள்யூ, ஏப்., 1, 1983ல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது... 'எங்கள் பொறியாளர் ஹெர்ப்லோன் என்பவர், மிக வித்தியாசமான ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். இதை காரில் பொருத்திவிட்டால், காரின் மேற்பகுதியை திறந்து வைத்தபடி பயணம் செய்யலாம்... மழையிலும் கூட! அப்பகுதியின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் காற்றை சுழன்றடிக்க செய்யும். இதன்மூலம் நீர் காருக்குள் வருவது தடுக்கப்படுகிறது...' என்றது.
அன்று, பிரிட்டன் முழுவதும் இதுதான் பேச்சு. 'மேலும் விவரங்களுக்கு, மிஸ் ஏப்ரல் ஒர்ஸ்ட் என்பவரை தொடர்பு கொள்ளுங்கள்...' என்ற வாக்கியத்தை படித்தும் கூட, பலருக்கும் சந்தேகம் வராதது தான் வியப்பு!
தொலைக்காட்சி மூலம் பரவும் வாசனை!
ஏப்., 1, 1965ல் லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், பி.பி.சி., 'டிவி'க்கு பேட்டி அளித்தார். அதில், 'ஸ்மெல்லோ விஷன்' என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளேன். இதன் மூலம் வாசனைகளை, காற்றலைகளில் பரவ வைக்க முடியும். 'டிவி' ஸ்டுடியோவில் தோன்றும் வாசனைகளை, நேயர்கள் அவரவர் வீட்டிலிருந்தே நுகர முடியும்...' என்றவர், ஒரு 'டெமோ'வும் செய்து காட்டினார்.
'டிவி' அரங்கில் உள்ள கருவியின் மீது, முதலில் வறுத்த காபிக் கொட்டையையும், பின் வெங்காயத்தையும் வைத்து, 'உங்களுக்கு இவற்றின் வாசனை தெரிகிறதா?' என்று கேட்டார்.
பல நேயர்கள், 'அந்த வாசனைகளை தெளிவாக நுகர முடிகிறது...' என்று தொலைபேசியில் தெரிவித்தனர். இன்னும் சிலர், 'வெங்காய நெடியால் தங்கள் கண்களில் கண்ணீர் சுரந்தது...' என்றும் குறிப்பிட்டு, அதிர வைத்தனர்.
சோவியத் கால்பந்து குழுவில் மாரடோனா!
ரஷ்யாவில் இயங்கிய, 'ஸ்பார்டக் மாஸ்கோ' என்ற பிரபல கால்பந்து குழு, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், ஏப்., 1, 1988ல், 'இஸ்வெஸ்டியா' என்ற சோவியத் நாளிதழ், 'உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரரான மாரடோனா, 'ஸ்பார்டக் மாஸ்கோ' குழுவில் சேர இருக்கிறார். இதற்காக, அவருக்கு, ஆண்டுக்கு, 60 லட்சம் டாலர்களை, கட்டணமாக அளிக்கப் பேச்சு வார்த்தை நடக்கிறது...' என்று, செய்தி வெளியிட்டது.
வாசகர்கள் சிலரிடம் இச்செய்தி குறித்து நம்பகத் தன்மை ஏற்பட்டாலும் கூட, இது பரவலாக நம்பப்பட்டது. காரணம், அதுவரை, சோவியத் நாளிதழ்கள், தன் வாசகர்களை ஏப்ரல் முட்டாளாக்கும் எந்த நிகழ்விலும் ஈடுபட்டதில்லை. அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்தான், சோவியத் தலைவர் கோர்பசேவ், 'க்ளாஸ்நோஸ்ட்' என்ற அரசின் கொள்கையை வெளியிட்டிருந்தார். இதற்கு, 'வெளிப்படைத்தன்மை' என்று பெயர். அந்த தைரியத்தில் தான், நாளிதழ் இப்படி தன் வாசகர்களை முட்டாளாக்கியது.
ஓடினார்... ஓடினார்... வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடினார்!
ஜப்பானை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர், கிமோ நகஜிமி. இவர் லண்டனில் நடைப்பெற்ற மராத்தன் போட்டியில் கலந்து கொண்டார். இவருக்கு ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த அதிகாரி, 'இது, 26 மைல் கடக்க வேண்டிய போட்டி...' என்பதற்கு பதிலாக, 'இது, 26 நாட்கள் கடக்க வேண்டிய போட்டி...' என்று தவறாக கூறிவிட்டார். இதன் காரணமாக, அவர் இங்கிலாந்தின் எல்லையை தாண்டியும் ஓடினார். அவரை பல இடங்களில் பார்த்ததாக பலரும் குறிப்பிட்டனர்.
மொழி பெயர்ப்பு அதிகாரியோ, 'நான் செய்தது தவறு தான்; ஆனால், ஜப்பானிய மொழியை, சமீபத்தில் தான் கற்றுக் கொண்டேன்...' என்று கையை பிசைந்தார்.
மேற்படி செய்தி, பிரிட்டனின், 'தி டெய்லி மெயில்' என்ற செய்தியில் வெளியானதும், அன்று அந்நாட்டு மக்களிடையே பரபரப்பு செய்தியானது. அது, ஏப்ரல் முட்டாள் செய்தி என்பதை அறியாமல், மொழி பெயர்ப்பு அதிகாரியின் பொறுப்பின்மையை ஆளாளுக்கு திட்டித் தீர்த்தனர்.
குருவிக்கு எத்தனை கால்கள்?
கடந்த, 1980ம் ஆண்டு துவக்கத்தில் டென்மார்க்கின் தேசிய வங்கி ஒரு கரன்சி நோட்டை வெளியிட்டது. அதில், இரண்டு சிட்டுக்குருவிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில், ஒரு சிட்டுக்குருவிக்கு (அது புகைப்படம் எடுக்கப்பட்ட கோணத்தின் காரணமாக) ஒரு கால் தான் இருந்தது.
ஏப்., 1, 1980ல், நாளிதழ் ஒன்று, 'ஒரு காலுடன் உள்ள குருவி அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகள் போலியானவை; அவை செல்லாது என்றாலும், அப்பாவி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இரண்டு கால்கள் கொண்ட குருவிகள் அச்சடிக்கப்பட்ட உண்மையான கரன்சி நோட்டுகளை, அஞ்சல் அலுவலகங்களில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம்...' என்ற தகவலை வெளியிட்டது. இரண்டு விதமான கரன்சி நோட்டுகளின் புகைப்படங்களையும் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, அஞ்சல் அலுவலகங்களில் நீண்ட வரிசை. அதிகாரிகள் அவசர அவசரமாக, 'இங்கு எந்த கரன்சி நோட்டும் தரப்படாது...' என்று அறிவிப்பை தொங்க விட்டனர். பின், நாளிதழின் ஆசிரியரையும், குருவிக்கு கால் வரைந்த கார்ட்டூனிஸ்டையும், காவல்துறையினர் விசாரித்து, எச்சரித்து அனுப்பினர்.
குதிரையின் வாலில் விளக்கு!
இத்தாலியில் உள்ள மிலன் நகரில், ஒரு நாளிதழ், 'மோட்டார் வாகனங்களுடன், குதிரைப் போக்குவரத்தும் இணைந்து இயங்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். எனவே, அடுத்த மாதத்திலிருந்து, குதிரைகளின் பின்புறம் பிரேக் லைட்டும், திரும்புவதை குறிக்கும் லைட்டும் பொருத்தப்பட வேண்டும்...' என்று செய்தி வெளியிட்டது.
இதைப் படித்ததும், தங்கள் குதிரைகளோடு பலர், கார் மெக்கானிக்குகளை அணுகி, 'இது எப்படி சாத்தியம்...' என்றும், 'இதற்கு எவ்வளவு செலவாகும்...' என்றும் விசாரிக்க துவங்கினர். சிலர் மட்டுமே அன்று, ஏப்., 1, 1961 என்பதை புரிந்து, புன்னகைத்தனர்.
ஏப்ரல், 1ம் தேதி வரப்போகிறது என்றால் பிறரை எல்லாம் எப்படி முட்டாள் ஆக்கலாம் என்று தீவிரமாக யோசிப்பவர்கள் உண்டு. மிக வித்தியாசமான, சுவாரசியமாக, பிறரை ஏப்ரல் முட்டாளாக்கிய சில சம்பவங்கள் தான் இவையெல்லாம்!