Friday, March 25, 2016

இவ்வளவு நாளும் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே



அப்பழுக்கில்லாத அழகுக்குச் சொந்தக்காரி, குடும்பத்தில் அவள் ஒரு இடைநில்லாப் பேருந்து, தடையில்லா மின்சாரம், பழுதுபடாத இயந்திரம், வேண்டாததை எல்லாம் வாங்கிக் கொள்ளும் குப்பைத் தொட்டி, கணவனின் கைப்பாவை, வாலிபத்தைத் தொலைத்த வஞ்சிக்கொடி-- இத்தகு அடையாளங்களைக் கொண்ட பெண்ணை, கடவுள் படைத்துக் கொண்டிருந்தார். ஆறு நாட்கள் தொடர்ந்து வேலை செய்தும் படைப்பு முடிந்தபாடில்லை.அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்து கடவுளைக் கேட்டது.

'ஆண்டவா இவளைப் படைப்பதற்காக நீங்கள் ஏன் இவ்வளவு நேரம் செலவழித்து சிரமப்படுகிறீர்?'கடவுள் பதில் சொன்னார்.


'நீ என்ன இவளை சாமானியப் படைப்பு என்று கருதி விட்டாயா? இவள் உடம்பில் நான் மாற்றக் கூடிய இருநுாறு பாகங்களைப் பொருத்த வேண்டும்; வெறும் தண்ணீரைக் குடித்துக் கொண்டும், எல்லோரும் சாப்பிட்ட பின் இருக்கும் மிச்சம் மீதியைத் தின்றும், இவள் உயிர் வாழ்பவளாக இருக்க வேண்டும்.ஒரே சமயத்தில் நாலு பிள்ளைகளை மடியில் கிடத்திக் கொள்பவளாகவும், ஒரே ஒரு பாச முத்தத்தினால் முழங்கால் சிராய்ப்பிலிருந்து நொறுங்கிய உள்ளம் வரைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவளாகவும் இருக்க வேண்டும். ஆனால் அத்தனையும் செய்வதற்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்க வேண்டும்'


உழைப்பாளி :'என்ன! இரண்டே கைகளை வைத்துக் கொண்டு இத்தனை வேலைகளா? அப்படிப்பட்ட அபூர்வப் படைப்பை உருவாக்க இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளுங்களேன்; ஏன் இந்த அவசரம்' எனத் தேவதை வினவ, கடவுள் சொன்னார்.'அதெல்லாம் முடியாது. என் மனதுக்கு மிகவும் பிடித்த இந்த அற்புதமான படைப்பை இன்று எப்படியும் முடித்துத்தான் தீருவேன். அவற்றைப் பற்றி மேலும் கூறட்டுமா... கேள்! அவள் தனக்கு உடம்புக்கு  சரியில்லை என்று சொல்லிப் படுக்கவே மாட்டாள். தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் தர்மவதி, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தொடர்ந்து உழைக்கும் உழைப்பாளி' 'அப்படியா? அந்த அதிசயப் பெண்ணை நான் தொட்டுப் பார்க்கலாமா?' எனக் கேட்டது தேவதை.


'என்ன இவள் இவ்வளவு மிருதுவாக இருக்கிறாளே


'பெரும் சக்தி அவள்' ஆமாம். இவள் மிருதுவானவள் மட்டுமல்ல. மிகுந்த வலிமையானவள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அவளுடைய சக்தியை உன்னால நினைத்துப் பார்க்கவே முடியாது'


'அது சரி, அவளுக்குச் சிந்திக்கும் திறன் உண்டா?'


'சிந்திக்கும் திறன் மட்டுமல்ல. எல்லா விஷயங்களையும் தீர அலசிப் பார்க்கும் தன்மையும், தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறமையும் கொண்டவள்'


தேவதையின் கண்ணில் திடீரென்று ஏதோ பட்டது. பெண் உருவத்தின் கன்னத்தைத் தொட சில்லென்று ஈரம்.


'அடடா, இங்கு பாருங்கள், உள்ளிருந்து ஏதோ ஈரம் கசிகிறதே''அது ஈரக் கசிவு அல்ல தேவதையே. அது தான் கண்ணீர்த்துளி''கண்ணீர் துளியா? அது எதற்காக?''அந்தக் கண்ணீர் தான் அவளுடைய மொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு. சுகம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம், தனிமை, துயரம், அன்பு, பெருமை, வெறுப்பு, அச்சம், உளைச்சல்இது போல் இன்னும் எத்தனை? எத்தனை? அத்தனையும் அந்தக் கண்ணீர்த்துளிதான் வெளிப்படுத்துகிறது' பெண்ணின் இயல்புகள்


 'இறைவா, நீங்கள் உண்மையிலேயே மகாமேதை. ஒன்றைக் கூட விடாமல் ஒரு பெண்ணின் அத்தனை இயல்புகளையும் இப்படித் துல்லியமாக வெளிக்கொணர்ந்து விட்டீர்கள். உமது படைப்பில் பெண் ஒரு அட்சய பாத்திரம். பிரமிக்கத்தக்க அதிசயம்' என்றது தேவதை.'ஆம்! ஆம்! பெண் சக்தி மிகப் பெரியது. எத்தனை சுமைகள், எத்தனை துன்பங்கள் எத்தகைய உழைப்பு அத்தனையையும் தான் சுமந்து கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிறருக்கு கொடுக்கிறாள். அவளால் மட்டுமே அழ வேண்டிய நேரத்தில் கூட அருமையாகப் பாட முடியும். அவளால் மட்டுமே சந்தோஷம் பொங்கும் வேளையில் கண்ணீர் சிந்த முடியும். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக, அவள் பட்டினி இருக்க முடியும். அவளால் மட்டுமே ஒரு சின்ன அணைப்பு, செல்லப் பேச்சு, ஒரு குட்டி முத்தம், கொடுத்து ரணமாகிப் போன உள்ளங்களுக்கு மருந்திட முடியும். அவளால் மட்டுமே உற்றார், உறவினர், தோழர், தோழியர், அனைவரது சக துக்கங்களிலும் பங்கு கொண்டு, சுகத்தை இரட்டிப்பாக்கி, துயரங்களைக் குறைக்க முடியும்.


தன் குழந்தைகளின் சாதனைகளுக்காக சகல சவுகரியங்களையும் விட்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்து, அவர்களை ஊக்கப்படுத்த அவளால் மட்டுந்தான் முடியும். ஐயோ! என்னால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லையே! என்று உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் போதே, தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அவளால் மட்டுமே வாழ்க்கையை எதிர் நோக்க முடியும்'


கடவுள், பெண்ணின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போக, தேவதை கடைசியாக ஒன்று கேட்டது.'ஆமாம், இவளிடம் குறை எதுவுமே இல்லையா?' என்று.


'இறைவன் சொன்னார் உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்த, வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்கும்  இப்பெண்ணிடத்திலும் ஒரு குறையுண்டு' அது தான் என்ன?' ஆவலுடன் தேவதை வினவ, ஆண்டவன் சிரித்துக் கொண்டே சொன்னார். 'தன்னிடமிருக்கும் அற்புத ஆற்றலை அவள் அடிக்கடி மறந்து விடுகிறாள்' தேவதை திகைத்துச் சொன்னது.'இவ்வளவு நாளும் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே'

'

'