Saturday, March 19, 2016

ஆறு பகைகள் எங்கு போனாலும் நம் கூடவே வரும். அவை வெளிப்பகையல்ல; உட்பகை!

குருநாதா் ஒருவா் சீடா்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

"அரசமரம் ஒன்றில் இரண்டு பறவைகள் இருந்தன. அவற்றில் ஒன்று கிளைக்குக் கிளை தாவி, பழங்களைத் தின்றது. மற்றொன்றோ அனைத்தை யும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது" என ஆரம்பித்து விவரிக்கத் தொடங்கினார். 

சென்ற இதழில், ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள் கூறிய விவரங்களையும், அவர் மேற்கோள் காட்டிய கதையையும் படித்தோம்; அந்த கதையின் மூலம் ஜீவாத்மா பழங்களைத் தின்றது; பரமாத்மா பார்வையாளராக இருந்தது என்று அவர் விளக்கியிருந்ததையும் படித்தறிந்தோம் அல்லவா? அந்தக் கதையில் இருந்து துவங்கி வேதாந்த தத்துவங்களை சீடர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார் குருநாதர்.

ஒரு மாணவனுக்கு மட்டும் சந்தேகம் முளைத்தது. "குருநாதா! ஒரே மரத்தில் இருக்கும் இரண்டு பறவைகளில் ஒன்று மட்டும் பழத்தைத் தின்றது; அகப்பட்டுக் கொண்டது. அடுத்ததோ, எதையும் செய்யாமல் அங்கேயே இருந்தது என்றீா்கள். ஒரே இடத்தில் இருக்கும் இரண்டில் ஒன்று சிக்கும்; மற்றொன்று சிக்காது என்றால் அது எப்படி?" என வாதாடத் தொடங்கினான்.

குருநாதா் பலவிதங்களில் சொல்லியும் சீடன், அவற்றில் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. உணவு நேரம் நெருங்கியது. அன்று நெய் வடிய வடிய சா்க்கரைப் பொங்கல் போட்டார்கள். வாதம் செய்த சீடனும் நன்றாக வளைத்துக் கட்டினான். அனைவரும் கையலம்பப் போனார்கள். கைகளை சீயக்காய்த்தூள் போட்டு நன்றாக நெய்ப் பிசுக்கு போகும்படியாக அலம்பினார்கள். வாதம் செய்த சீடனும் அலம்பினான். அப்போது அவனுடைய கைகளில் சீயக்காய்த் தூளை அள்ளிக் கொட்டி "இதைப்போட்டு வாயையும் நன்றாக நெய்ப் பிசுக்குப் போக அலம்பு!" என்றார்.

சீடன் சிரித்தான்; "என்ன இது? வாயைப் போய் யாராவது சீயக்காய்த் தூளால் அலம்புவார்களா?" என்றான்.

"ஏனப்பா? கைகளிலாவது நெய்ப் பொங்கல் ஒரு சில விநாடிகள்தான் இருந்தது. அதையே சீயக்காய்ப்போட்டு அலம்புகிறாய். வாயிலோ, நெய்ப் பொங்கலைப்போட்டு உழப்பித் தின்றாயே. அப்படியென்றால் வாயில் எவ்வளவு நெய் ஒட்டியிருக்கும்? ஆகையால் வாயையும் சீயக்காய் போட்டு அலம்ப வேண்டாமா? அலம்பு!" என்றார் குருநாதா்.

சீடன் சற்று திகைத்தான். "குருநாதா! கையில் ஒட்டும் நெய், வாயில் ஒட்டாது. ஆகையால் வாயை சீயக்காய் போட்டு அலம்ப வேண்டாம்" எனக் கூறினான். 

இப்போது குருநாதா் தொடா்ந்தார். "எப்படி ஓர் உடம்பிலேயே இருக்கும் கையில் நெய் ஒட்டும்; வாயில் நெய் ஒட்டாதோ, அதுபோல ஜீவாத்மா விஷயங்களால் பாதிப்படையும்; பரமாத்மாவோ பாதிப்படையாது" என முடித்தார். சீடன் குருநாதாின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். இது கதையல்ல; நடந்த நிகழ்ச்சி. 

இன்னும் ஓா் எளிமையான உதாரணம். குளம், மீன் வளா்ப்பு நிலையங்கள், ஆறு, கடல் எனப் பல இடங்களிலும் மீன்கள் இருக்கின்றன. எந்த மீனாக இருந்தாலும் உப்பு போட்டுத்தான் சமைப்பாா்கள். கடல் மீனாயிற்றே; கடலின் உப்பு அதிலே ஊறியிருக்கும். ஆகையால் கடல் மீனுக்கு உப்பு போட்டுச் சமைக்க வேண்டாம் என்று யாரும் செய்வதில்லை. உப்புக் காிக்கும் கடல் நீாிலேயே கிடந்தாலும், கடல் மீன்கள் உடலில் அந்த உப்பு சோ்வதில்லை.

பரம்பொருளின் கோடானுகோடி சிருஷ்டிகளில் ஒன்றான ஒரு மீனுக்கே இப்படியென்றால், பரம்பொருளுக்கு ஏதேனும் பாதிப்பு பற்றுமா? ஆனால் இது நமக்குப் புாியமாட்டேன் என்கிறது.

"சாமி, எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டமா கொடுக்குதோ'' எனப் புலம்புவோம். நாம் புலம்பாவிட்டாலும்கூட, தொலைக்காட்சித் தொடா் களில் தினந்தோறும் இந்தப் புலம்பலைக் கேட்கலாம். அடுத்தப் பாடலில் இதற்கு விளக்கம் கொடுக்கிறது கைவல்லிய நவநீதம்.

இந்தச் சீவனால் வரும் அறுபகை எ(ல்)லாம்
    இவன் செயல் அல்லாமல்
அந்தத் தேவனால் வரும் என்ற மூடர்கள்
    அதோ கதி அடைவார்கள்
இந்தச் சீவனால் வரும் அறுபகை எ(ல்)லாம்
    இவன் செயல் அல்லாமல்
அந்தத் தேவனால் அன்று எ(ன்)னும்
    விவேகியே அமல வீடு அடைவாரே

        (சந்தேகம் தெளிதல் படலம்-59)
  
வெற்றி வரும்போது, "என்னால்தான்! நான்தான்!'' என்று துள்ளாட்டம் போட்டு விட்டு, கஷ்டம் வரும்போது, அடுத்தவா்களை திட்டிக் குறை கூறுவது, பிறகு அவா்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க கடவுளை நோவது... சாதாரண நிகழ்வுகள் இவை. கிடைக்கின்றதே என்று அனைத்தையும் அள்ளிப்போட்டு, வயிற்றை வீங்க வைத்துவிட்டு, "வயிறு வலிக்கிறதே" எனப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?! 

இந்தப்பாடலில் சொல்லப்படும் 'அறு பகை' என்ற சொல் அபூா்வமானது. இந்த ஆறு பகைகளும் நமது தெருவிலோ, பக்கத்துத் தெருவிலோ இல்லை. அங்கெல்லாம்- அதாவது வெளியில் இருக்கும் பகைகளிடம் இருந்து நாம் சுலபமாகத் தப்பிவிடலாம். 

ஆனால்... இந்த ஆறு பகைகள் இருக்கின்ற னவே... அவை, எங்கு போனாலும் நம் கூடவே வரும். காரணம் அவை வெளிப்பகையல்ல; உட்பகை! 

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சா்யம் எனும் அந்த ஆறும் நம்மைப் பந்தாடுகின்றன. அவற்றுக்கு ஆட்பட்டு, நாம் நினைத்தது நடந்துவிட்டால்... அப்பாதையிலேயே மேலும் ஓடுகிறோம். நடக்காவிட்டால் இறைவனை திட்டுகிறோம்.

ஏன் இப்படி? தப்பிக்க வழியே கிடையாதா? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று...

சிறு வயதில் இருந்தே, இந்த ஆறு தீய குணங்களின் விளைவுகளைச் சொல்லி, குழந்தைகளைப் பக்குவப்படுத்தி வளர்ப்பது. இது, பச்சை மூங்கிலை அது முற்றுவதற்கு முன்னாலேயே மெள்ள மெள்ளப் பக்குவப் படுத்தி வளைப்பதைப்போல!

இரண்டாவது வழி... 

நாம் பார்க்காததா, கேட்காததா? இவ்வளவு பார்த்தும் இவ்வளவு கேட்டும், அனுபவபூா்வமாகப் பலவற்றை அறிந்தும், இன்னும் கஷ்டப்படுகிறோமே என ஆழமாக - உண்மையாகச் சிந்தித்து, இந்த அகப் பகைவா்களிடம் இருந்து விடுபட முயற்சிப்பது. 

இது கடினம்தான். முற்றிய மூங்கிலைத் தண்ணீரில் ஊறப் போட்டு, மேலே பெரும் பெரும் பாரக்கற்களை வைத்து, சமயத்தில் வழவழ என எண்ணெயைத் தடவி நெருப்பில் காய்ச்சி, படாத பாடுபடுத்திப் பக்குவப்படுத்துவோம். அது முற்றிப்போனதால் இந்தக் கஷ்டங்களை எல்லாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

அதுபோன்று, உலகியலில் கன்னாபின்னா வென்று ஈடுபட்டு, முற்றிப்போன மூங்கிலாக இருக்கும்போது, பக்குவப்பட வேண்டுமானால், சற்று கஷ்டத்தை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. வலி தொியாமல் இருப்பதற்கான வழி?