சமீபத்தில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தோம்... திருமாங்கல்ய தாரணம் முடிந்த பின், நலங்கு ஆரம்பித்தது. அதில் ஒரு நிகழ்வு. மோதிரத்தை தண்ணீர் குடத்துக்குள் போட்டு, மணமக்களை எடுக்கச் சொல்வது. புரோகிதர் குடத்திற்குள் மோதிரத்தை போட்டார். மணமக்கள் வேகவேகமா கையால் துழாவி, மோதிரத்தை தேட ஆரம்பித்தனர். அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த பெரியவர்களும், இள வயதினரும் மற்றும் குழந்தைகளும் உற்சாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகளின் தாயார் சத்தமாக, 'அம்மாடி... விடாதே... விட்டுடாதே... மோதிரத்தை எடு எடு...' என்று, கத்திக் கொண்டே இருந்தார். மணப்பெண்ணும் போட்டி போட்டு மூன்று முறையும் மோதிரத்தை எடுத்த வெற்றிக் களிப்பில், கைகளை உயர்த்தினார். அவள் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.
அப்போது புரோகிதர், 'கல்யாண பொண்ணெ... நீ ஜெயிச்சுட்டே... சந்தோஷம்...' என்று சொல்லி, மணமகனைப் பார்த்து, 'ஏம்பா மாப்பிள்ளை... நீ விட்டுக் கொடுத்தாயா...' என்றார். 'இல்லை...' என்றான் மணமகன். பின்னர், புரோகிதர் மணமகளின் அம்மாவைப் பார்த்து, 'ஏம்மா... உங்க பெண்ணுக்கிட்டே, வீட்டுக்காரருக்கு விட்டுக் கொடுத்து, அனுசரணையா வாழணும்ன்னு சொல்லித் தர வேண்டிய நீங்களே, 'விட்டுடாதே... பிடி... விடாதே... பிடி...' என சொல்லிக் கொடுப்பதா... பின்விளைவு தெரியாமல், இந்த அம்மாக்கள் இப்படி தூண்டி விடுவதால் தான், பல வீடுகளில் பிரச்னை உண்டாகிறது...' என்றார்.
பின் மணமக்களைப் பார்த்து, 'திருமண சமயத்தில் நடக்கும் நலங்கு, ஊஞ்சல் போன்ற அனைத்தும், உங்கள் இருவருக்கிடையே சங்கோஜத்தை போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது; இதில், வெற்றி - தோல்வி கிடையாது. இன்று உங்களைச் சுற்றி இருக்கும் கூட்டம் அனைத்தும், சில மணி நேரத்தில் கலைந்து விடும்; வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப் போவது நீங்கள் தான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சந்தோஷ வாழ்வு வாழ வேண்டும். இருவரும் கை குலுக்கி, விட்டுக் கொடுத்து வாழ்வோம் என சொல்லுங்கள்...' என்றார்.
மணமக்களும் அவ்வாறே செய்ய, மங்கள அட்சதை தூவி, மனம் நிறைய வாழ்த்தினார் புரோகிதர். நல்லதோர் அறிவுரையை அம்மாக்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும் எடுத்துச் சொன்ன புரோகிதரை அனைவரும் பாராட்டினர்.