'நாங்கள் சண்டையே போடாத ஜோடி தெரியுமா?' என்று எந்த ஜோடியாவது பெருமை அடித்தால் நம்பாதீர்கள். சண்டை என்றால் இந்த ஜோடி குடுமிப்பிடி, அடிதடி மற்றும் வாக்குவாதம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு எல்லாம் நிகழ வேண்டிய அவசியமில்லை. பேச்சற்ற இடைவெளியே, சண்டையின் ஒரு வடிவம் தான்.
வெவ்வேறு சூழலில் வாழ்ந்தவர்கள் வாழ்வில் இணையும் போது, தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை தான் சரி என்றும், தாங்கள் பேசுவதெல்லாம் நியாயம் என்றும், தாங்கள் செய்வதெல்லாம் அணுவளவும் முறையானவை என்றும் நம்புகின்றனர். இப்படி இருவருமே நம்பும் போது, இவை மோதலில் (கருத்தளவிலாவது) முடிவதில் வியப்பு இல்லை.
மிகப் பிரியமாக இருக்கும் ஜோடிக்குள் கூட, 'முன்பு போல் நீ (ங்கள்) அன்பாக இல்லை...' என்று மனக்குமுறலை வெளிப்படுத்தி, அங்குல அளவிலாவது இதய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொள்ள தான் செய்கின்றனர்.
ஜோடிகளுள் பரிதாபகரமான ஜோடி, சண்டை போட்டு கொள்கிற இந்த ஜோடி தான். அதுவும், இது சபைக்கு வருகிற போது மோசமானதாகவும், தெருவிற்கு வரும் போது கண்றாவியாகவும் ஆகிப் போகிறது.
நம் வாழ்வின் இன்ப, துன்பங்களை நிர்ணயிப்பவர்களுள் முதலாவது இடம் பிடிப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள் அல்லர்; நம் வாழ்க்கை துணையும், நம் குடும்ப உறுப்பினர்களும் தான்.
ஒன்றைச் சேர்த்துச் சொல்லட்டுமா? எது நமக்கு இன்பத்தை வழங்குகிறதோ, அதுதான் நம் துன்பத்தை நிர்ணயிக்கிறது.
பணமும், பதவியும் இனிமை தருகிறது என்று எண்ணுகிறோமே, இவை தான், நம் துன்பத்தையும் நிர்ணயிக்கின்றன.
பணமும், பதவியும் இனிமை தருகிறது என்று எண்ணுகிறோமே, இவை தான், நம் துன்பத்தையும் நிர்ணயிக்கின்றன.
இந்த உண்மையின் அடிப்படையில், நம் மகிழ்வை நிர்ணயிக்கிற வாழ்க்கைத் துணையை, நாம் சீண்டத் தான் வேண்டுமா?
'என் உணர்வை போல தான், அவள் (அவர்) உணர்வும், அதற்கு மதிப்பும், முக்கியத்துவமும் தருவேன்...' என்ற முடிவிற்கு இருவரும் வர வேண்டும்.
'என் உணர்வை போல தான், அவள் (அவர்) உணர்வும், அதற்கு மதிப்பும், முக்கியத்துவமும் தருவேன்...' என்ற முடிவிற்கு இருவரும் வர வேண்டும்.
ஒவ்வொரு கணவனுக்குள்ளும், ஒவ்வொரு மனைவிக்குள்ளும் இனிய பக்கம் ஒன்று உண்டு. 'ஏன் நாம் உணர தவறி விட்டோம்...' என்று சண்டை போடும் ஜோடிகள், தங்களுக்குள் கேள்வி கேட்கட்டும்; அருமையான விடை கிடைக்கும்.
விட்டுக் கொடுப்பதையும், சுய கவுரவத்தையும் முடிச்சுப் போட்டுக் கொள்கின்றனர் பலர். அவசியமில்லை; விட்டுக் கொடுப்பவர்களே இறுதிச் சிரிப்பு சிரிக்க முடியும்.
கணவன் - மனைவி இருவரும் நல்ல மூடில் இருக்கும் போது, 'ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றவர் அமைதியாக வேண்டும்...' என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பேசிக் கொள்ளுங்கள். இது, பிரமாதமாக வேலை செய்யும்.
விட்டுக் கொடுப்பதும், நியாயமோ, தவறோ, வாழ்க்கை துணைவியின் உணர்வுகளை மதிப்பதும், அவ்வப்போது நம் தரப்பிலிருந்து பறக்க விடப்பட வேண்டிய சமாதான புறாக்கள். இது, நன்கு வேலை செய்யும். தேன் கூட்டிலிருந்து தேனைப் பிழிந்தெடுப்பதும், தேனீயால் கடிபடுவதும் நம் கையில் இருக்கிறது.
லேனா தமிழ்வாணன்