பள்ளி மற்றும் கல்லூரியோடு பாடம் படிப்பது முடிந்து விடுகிறது என்கிற முடிவிற்கு, நம்மில் பலர் வந்து விடுகின்றனர். தமக்கு பாடம் நடத்துபவர்கள், வகுப்பு ஆசிரியரோடு முடிந்து போயினர் என்பது, இவர்களது எண்ணமாக உள்ளது. ஆனால், உலகமே ஒரு பள்ளிக்கூடம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் தான்!
வகுப்புகளில் பாடங்களை கவனிக்க தவறினால், சில பல மதிப்பெண்கள் தான் குறைந்து போகும். ஆனால், உலகம் எனும் வகுப்பறையில், காணும் காட்சிகளே கரும்பலகைகளாகவும், நம்மோடு வாழ்கிற, சந்திக்கிற, கடந்து போகிற மனிதர்களே ஆசிரியர்களாகவும், வாழ்வில் நாம் அடையும் உயரங்களே மதிப்பெண்களாகவும் உள்ளன. இதை உணர முற்பட்டால், கட்டணம் இல்லாமலேயே பல பாடங்கள், இலவசமாக நமக்கு நடத்தப்படுவதை அறிய முடியும்.
இரவில் தூங்கப்போகும் முன், அன்றைய தினம் நடந்த சம்பவங்களை, 'பிளாஷ்பேக்'குகளாய் ஓட்டிப் பாருங்கள்... குறைந்தது, பத்து படிப்பினைகளாவது நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இவற்றை, வகுப்பறையில் கவனம் இல்லாமல், ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபடி, கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் மாணவனைப் போலவே, எதையும் மனதில் பதித்துக் கொள்ளாமல் விட்டு விடுகிற மனிதர்கள், வாழ்க்கையில் நாள்தோறும் நடக்கும் தேர்வுகளில், தோற்றுப் போகின்றனர்.
'யோவ் சாவு கிராக்கி... வீட்ல சொல்லிக்கினு வந்துட்டியா... ஆண்டவன் உனக்கு கண்ணைப் பின்னாலயா வச்சிருக்கான்... வந்திட்டானுங்க பெரிசா வண்டி ஓட்றதுக்கு...' என்று சென்னையில் சிலர் திட்டும் போது, அவர்கள் மீது கோபம் காட்டுவோர் உண்டு. ஆனால், 'நாம் அலட்சியமாக வாகனம் ஓட்டுகிறோம், நம் முழு கவனம் சாலையில் இல்லை...' என்பதை, அவர் அழகுற நமக்கு பாடம் நடத்தி விட்டு செல்கிறார் என்பது பிடிபடுவதில்லை. இதை, மனதில் பதித்து, மறுபாதி தூரத்தையாவது, கவனமாக ஓட்டுகிற அக்கறையும் ஏற்படுவது இல்லை.
ஆசிரியர் கொடுத்த அடிகள் மட்டுமே ஒரு மாணவனின் நினைவில் நிற்கின்றன. அவரது அக்கறையையும், கரிசனத்தையும் புரிந்து கொள்ளாத நம் மாணவ காலத்து அறியாமையை இன்னும் தொடர்ந்தால் அது எப்படி சரியாகும்?
மருத்துவமனைகளில் நம் நண்பர்கள் ஏமாந்த கதைகள், முதலீட்டு விஷயத்தில் பிறர் செய்த தவறுகள், உறவுகளை கையாளத் தெரியாமல், விரிசல்களை உண்டாக்கிக் கொண்ட சம்பவங்கள், அன்பை சரிவர பரிமாறி கொள்ளாமல் சொதப்பலில் முடிந்த நட்புகள், கழற்றிக் கொண்டு விட்ட காதல்கள், பேசத் தெரியாமல் பேசி, மாட்டிக் கொண்ட நிகழ்வுகள் ஆகியவற்றை நாம் தினம் தினம், கடந்து தான் வருகிறோம். ஆனாலும், பிறர் செய்த தவறுகளையே தொடர்ந்து செய்து, வம்பில் மாட்டிக் கொள்வதுடன், விரல்களையும் சுட்டுக் கொள்கிறோம்.
வகுப்பில் கணக்குகளை தவறாகப் போட்டால், நஷ்டம் சொற்பம் தான். ஆனால், வாழ்க்கை கணக்குகள் அப்படி அல்ல. அன்றாடம் நமக்கு பாடம் புகட்டிய வாழ்க்கைச் சம்பவங்களை, ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். (என்னது... உங்களுக்கு அபார நினைவாற்றலா... அப்படியானால் எழுத வேண்டாம்!)
அவ்வப்போது இந்த நினைவுகளை, பதிவுகளை புரட்டிப் பாருங்கள். இந்த, 'ரிவிஷன்' வாழ்க்கை பரிட்சையில் தேர்ச்சி பெற, ரொம்பவும் பயன்படும்!
லேனா தமிழ்வாணன்