Saturday, January 17, 2015

சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க..

எம்.ராமகிருஷ்ணம ராஜூ, காது, மூக்கு, தொண்டை நிபுணர்
 
பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் படுத்திஎடுத்துவிடும். தூசி இருக்கும் பகுதிக்குச் சென்றால், விடாது தும்மிக்கொண்டே இருப்பார்கள். கேட்டால், ''சைனஸ் பிரச்னைங்க, தீரவே இல்ல'' எனக் கவலையோடு சொல்வார்கள். சைனஸ் பிரச்னை ஏன் வருகிறது? அதை எப்படித் தவிர்ப்பது?

சைனஸ் என்றால் என்ன?

நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.

சைனஸ் பிரச்னை எப்படி வருகிறது?

சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு ( Mucous membarane) வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும். சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு 'சைனசிட்டிஸ்' (Sinusitis) என்று பெயர். மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் 'பாலிப்' (Polyp) எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்னை வருகிறது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்னை வருகிறது.

சைனசிடிஸ் அறிகுறிகள் என்ன?

கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.

தலையைக் கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும்.

அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். சளி, கடுமையான நாற்றத்துடன் இருக்கும்.

மூக்கைத் தொட்டாலே, கடுமையான வலி ஏற்படும்.

இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாகத் தும்மல் வரும்.

பல் வலி, காது வலி ஏற்படும். வாசனை, சுவை உணர்வு குறையும்.

காய்ச்சல் வரலாம், உடல் சோர்வாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.

சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

யூக்லிப்டஸ் எண்ணெயைக் கலந்து, நீராவி பிடிக்கலாம், தைலம் தடவலாம். தும்மலைத் தடுக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரையின் பேரில், குறிப்பிட்ட காலத்துக்கு ஸ்டீராய்டு கலந்த ஸ்ப்ரே பயன்படுத்தலாம். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு கலந்த சொட்டு மருந்துகளை மூக்கினுள் விட வேண்டாம்.

இந்த சிகிச்சைமுறைகளில் சரியாகவில்லை எனில், எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலமாக சைனஸ் பகுதியில் உள்ள திரவம் அப்புறப்படுத்தப்படும். எலும்புப் பகுதி, சதைப் பகுதியில் பிரச்னை இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், உடனே பலன் இருக்காது. தொடர்ந்து, ஓரிரு வருடங்களுக்கு, மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை மருந்துகளைச் சாப்பிடவேண்டும். சைனஸ் பிரச்னை வருவதற்கான அறிகுறி அறிந்து, பிரச்னை பெரிதாகாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்.

சைனஸ் பிரச்னைக்கு எளிய டிப்ஸ்!

பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ளவும்.

படுக்கை, தலையணை, படுக்கையறை ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும். தலையணை உறைகளை அடிக்கடி துவைத்து, மாற்றவும்.

கைக்குட்டைகளைக் கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, துவைத்துப் பயன்படுத்தவும். கைக் குட்டையை அடிக்கடி மாற்றவும்.

நூல் மற்றும் கயிற்றுத் துகள்கள் பரவியிருக்கும் இடங்கள், புகை, ஒட்டடை, சிமென்ட் இருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், செடி, பூக்கள், மரங்கள் இருக்கும் பகுதியில் உலவ வேண்டாம். வீட்டில் கரப்பான் பூச்சி பெருகவிடாமல் தடுக்க வேண்டும்.

அசுத்தமான நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம். குளிர்பானம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளைக் கண்டறிந்து, அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

மூக்குப்பொடி போடுவதையும்,புகை பிடிப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்.