அலைபாயும் கூந்தலை பராமரிக்க.....
நீண்ட கூந்தலோடு ஒரு பெண் நடந்து சென்றால், திரும்பிப் பார்க்காதவர்கள் யார்? தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்தி இலையை குளக்கரையில் கசக்கி, தலையில் தேய்த்துக் குளித்தபோதெல்லாம் நன்கு வளர்ந்த கூந்தல், விலை உயர்ந்த எண்ணெய் ஷாம்பூவில் உதிர்ந்து போவதேன்? தூசு, மாசுக்களிடம் இருந்து காப்பாற்றி, தலைமுடியைப் பராமரிப்பது எப்படி? உதிரும் கூந்தலைப்பார்த்துப் பதறுவது எப்போது தீரும்?
கூந்தல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? எப்படிப் பராமரிப்பது? எந்த ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம்? முடிக்கு எண்ணெய் தடவலாமா? தேவை இல்லையா?
சுத்தம் சுகாதாரம் முக்கியம்
வாரம் இருமுறை செம்பருத்தி, சீயக்காய், பயத்தம் பருப்பு இவற்றைக் சேர்த்து அரைத்த சீயக்காய் பயன்படுத்தி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். தலையில் எண்ணெய் தடவி, ஷாம்பூவால் அலசும் பழக்கம்தான் இன்று பலரிடமும். இதனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கான பலனே இல்லாமல் போய்விடும். தலையில் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் நன்றாக ஊறினால்தான், எண்ணெய் சருமத்தினுள் பாய்ந்து, உடலைக் குளிர்ச்சியாக்கும். வடித்த கஞ்சியில் அரைத்த சீயக்காயைப் போட்டு கலந்து குளிக்கலாம். இதன் மூலம் தலையின் ஸ்கால்ப் பகுதியும் வறட்சியாகாமல் இருக்கும்.
குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்கும் வழிகள்...
குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன. ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளின் தலையில் எண்ணெய் காண்பிப்பது இல்லை. எண்ணெய் தேயத்தால் சருமம் மென்மையும், பளபளப்பும் கூடி, உடல் புத்துணர்ச்சி பெறும். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும்.
பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாக்க வேண்டும். இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவிய பின் தலைவாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.
ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம். வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும். இதனால், முடி அடர்த்தியாக வளரும்.
பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டைப் பின்னல் போடுவதால், நீளமும் அடர்த்தியும் அதிகரிக்கும்.
ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம். ஒரு முறை தேங்காய் எண்ணெய் தடவினால், பயத்தமாவு தேய்த்துக் குளிப்பாட்டலாம். அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மாவுகொண்டு குளிப்பாட்டலாம். பயத்த மாவு எண்ணெய் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும். கடலை மாவு சுத்தமாக்கும். தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டும்.
குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது. இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.
மொட்டை அடித்தால், முடி நன்றாக வளரும். ஆனால், சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைப்படும்.
இரண்டு வயதில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு தலையில் வியர்வை சுரப்பதால், வியர்க்குரு ஏற்பட்டு முடி வளர்ச்சி பாதிக்கும். இதற்கு, கடலை மாவு, பயத்த மாவுடன் பூலாங்கிழங்கை அரைத்துக் குளிப்பாட்டலாம். பன்னீர் ரோஸ், மல்லிகை, முல்லை, ஜாதி போன்ற பூக்களைத் தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீரைக் கடைசியாக விடலாம். இதனால் தலை சுத்தமாகவும் வாசனையாகவும் இருக்கும்.
நீண்ட கூந்தலுக்கான ரகசியம்
தேவையானவை : சீயக்காய் ஒரு கிலோ, செம்பருத்திப்பூ 50, பூலாங்கிழங்கு 100 கிராம், காயவைத்த எலுமிச்சைத் தோல் 25, காயவைத்த நெல்லிக்காய் 50, பாசிப்பருப்பு கால் கிலோ, மரிக்கொழுந்துக் குச்சிகள் 20, கரிசலாங்கண்ணி இலை 3 கப்.
செய்முறை: இவற்றை வெயிலில் காய வைத்து மில்லில்கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, அரைத்த சீயக்காய்த்தூளை வெறும் தண்ணீரில் மட்டும் கலந்து தலைக்குத் தேய்த்து அலசுங்கள்.
பலன்கள்: பூலான்கிழங்கு, ஷாம்பு தேய்ப்பதன் பலனைத்தரும், எலுமிச்சையால் பொடுகு நீங்கும், பாசிப்பருப்பு, மரிக்கொழுந்து கூந்தல் வாசத்தை மேம்படுத்தும், கரிசலாங்கண்ணி முடியைக் கருப்பாக்கும். கூந்தல் கருகருவெனச் செழிப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.
நல்லெண்ணெய் உடல் சூட்டைக் குறைப்பதுடன் முடியின் பொலிவுக்கும் உதவும். இயற்கையான சாயத்திற்கும் குளிர்ச்சிக்கும் மருதாணி மிகவும் நல்லது. தலைக்குக் குளிக்கும் போது, உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து ,வடைகளாகத் தட்டி, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைத் தினமும் தலையில் தடவிவந்தால், முடி உதிர்வது குறையும். கருமையாக வளரத் தொடங்கும்.
வாரம் ஒரு முறை நெல்லிமுள்ளியை தயிரில் ஊறவைத்து அரைத்து, தலையில் பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம். இதனால் உடல் குளிர்ச்சியடைந்து மன அழுத்தம் நீங்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வசம்பை தீயில் சுட்டு, காய்ச்சிய எண்ணெயில்போட்டு, தடவிவந்தால் பேன், பொடுகு வராது.
உடல் சூடு அதிகம் இருந்தால் முடி உதிர்வதுடன் வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கும். கூடவே, கண் எரிச்சலும், உடல் சோர்வும் இருக்கும்.
பஞ்சகல்பம், உடல் சூட்டினைப் போக்கும். கடுக்காய், நெல்லிக்காய், வேப்பங்கொட்டை மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து, இதனுடன் வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் தலா 10 கிராம் சேர்த்து, இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பால் சேர்த்து அரைத்து, அதைத் தலையில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து அலசலாம்.
கருகரு கூந்தலுக்கு
பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை நான்கையும் சம அளவு எடுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சிவைத்துக்கொண்டு, தினமும் தேய்த்துவர, செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலரவைத்து, பொடித்துக்கொள்ளவும். இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்கு தேய்த்துக் குளியுங்கள். தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக மாறும்.
100 கிராம் ஆவாரம் பூ, வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரைக் கிலோ மூன்றையும் மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலையை அலசிவர, கருகருவெனக் கூந்தல் பிரகாசிக்கும்.
பேரீச்சம்பழம் 100 கிராம் எடுத்து கொட்டையுடன் தட்டி, அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு இறக்குங்கள். மறுநாள், ஊறிய பேரீச்சம்பழத்தை அரைத்து, சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெயை சில சொட்டுகள் தலையில் தேய்த்து மசாஜ் செய்தால், கருமையாகக் கூந்தல் வளரும்.
ஒரு கொத்துக் கறிவேப்பிலையை, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து, புளித்த மோரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அலச, கூந்தல் கருகருவென மாறும்.
சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து இந்த விழுதை பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால், வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும்.
முடிப் பிளவுகளை தடுக்கும் வழிகள்
கூந்தலை டிரிம் செய்யுங்கள். கூந்தலின் அடிப்பகுதியான நுனி பிளவு படுவது சகஜம். ஆனால் முடிப்பிளவு இருந்தால், முடி வளர்வது பாதிக்கப் படும். ஆதலால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை டிரிம் செய்து கொள்வது அவசியம். லீவ் இன் (leave in) கண்டிஷனர் என்று சொல்லக் கூடிய கூந்தல்சீரத்தைத் தொடர்ந்து பயன்படுத் துகையில், பிளவுகள் ஏற்படாது.
பப்பாளி மாஸ்க்
மசித்த பப்பாளி பழத்துடன் 2 ஸ்பூன் யோகர்ட் கலந்து, தலை மற்றும் கூந்தலில் தடவி ஷவர் கேப்பை போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவால் அலசுங்கள்.
வைட்டமின் இ மாத்திரைகள்வைட்டமின் இ எண்ணெய் நிறைந்த மாத்திரைகளை இளஞ்சூடான நீரில் போட்டு, அதை கரைத்து பிளவுகள் ஏற்பட்ட அடி முடியில் தடவிவர, பிளவுகள் வராது.
எண்ணெய் கலவை மாஸ்க்பாதாம் மற்றும் தேங்காய் எண்ணெயை சமஅளவில் கலந்து, நுனிமுடியில் தடவிக்கொள்வதால் பிளவுகள் ஏற்படாது.
பொடுகுத் தொல்லையை போக்க
தேங்காய் எண்ணெயுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் அதைக் கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு மாவுடன் சாதம் வடித்த நீர் கலந்து அலசிடுங்கள்.
பாதாம் எண்ணெயுடன் நெல்லிகாய் சாற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் தடவலாம்.
ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து கூந்தலில் பூசி,15 நிமிடங்கள் வரை சூடான துண்டை போர்த்தி ஆன்டி டான்ட்ரஃப் (Anti dandruff) ஷாம்பூவால் அலசலாம்.
கைப்பிடி அளவில் நெல்லிக்காய்களை ஊறவைத்து, அதனுடன் பால் கலந்து மையாக அரைத்து, கூந்தலில் பூசி அலசலாம்.
பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், தலையில் கட்டிகள் தோன்றும். இதற்கு வெப்பாலை தைலம் தேய்த்துக் குளிக்கலாம். மேலும், அருகம்புல், அதிமதுரம் இரண்டையும் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்
எண்ணெய் தடவலாமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். எண்ணெய் தடவுவது நல்லது. ஆனால் அந்த எண்ணெய் கலப்படம் இல்லாததாக இருத்தல் அவசியம். தேங்காய்ப் பாலை எடுத்து அவற்றை அடுப்பில் கொதிக்கவிடவும். இறுதியில் கிடைக்கும் திரவமே தூயத் தேங்காய் எண்ணெய். இதைத் தடவிவர கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சத்தாக மாறுகிறது. எண்ணெய் காய்ச்சும் போது, இறுதியில் தேங்கும் கசடை, தூக்கி எறியாமல் ஹேர் பேக்குடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மென்மையானக் கூந்தலைப் பெற
810 செம்பருத்தி இலைகளை 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து அதைப் பசையாக மாற்றிக்கொள்ளவும். ஜெல் போல கூந்தல் முழுவதும் தடவிய பின், 1 மணி நேரம் கழித்து, கூந்தலை மிதமான ஷாம்பூவால் அலசவும். பளபளப்பான, மெண்மையான கூந்தலாக மாறியதைப் பார்க்கலாம்.
பட்டுப் போன்ற கூந்தலுக்கு
பழுத்த அவகேடோ பாதி, தேன் 2 ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன், முட்டை ஒன்று, வாழைப்பழம் பாதி, நெல்லிப் பொடி ஒன்று டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை கலந்து பேட்ஸ்டாக்கி கூந்தலில் பூசி, ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள்.
எண்ணெய்க் கூந்தல்
தினமும் தலைக்குக் குளிக்கலாம். ஷாம்பூ, கண்டிஷனரை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். கற்றாழையை நடுவில் கட்செய்து அதில் வெந்தயத்தைக் கொட்டி, பிறகு நூலில் அதைக் கட்டி ஒருநாள் இரவு அப்படியே விட்டுவிடவும். அடுத்தநாள் கற்றாழையின் சதைப் பகுதியையும், வெந்தயத்தையும் எடுத்து முட்டை, வைட்டமின் இ எண்ணெய் கலந்து, தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம்.
குளிர்காலத்தில் ஏன் கூந்தல் வறட்சியடைகிறது?
வானிலை மாறி குளிர்த்தன்மை அதிகமாகும் போது கூந்தல் வறட்சியடைகிறது. கூந்தலை பாதுகாக்கக்கூடிய மாஸ்க்கைப் போட்டால் கூந்தல் குளிர்காலத்திலிருந்து காப்பாற்றப்படும். இழந்த பொலிவை திரும்பப் பெறும்.
வறண்ட கூந்தல்
சுற்றுச்சூழல் மாசுபடுதல், வீரியம் நிறைந்த கெமிக்கல்கள், உடல்நலக் குறைபாடுகள், டை பயன்படுத்துதல், கெமிக்கல் சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், நீச்சல் குளம் பயன்படுத்துதல், சூரியக் கதிர்களின் தாக்குதல், வெந்நீர் ஊற்றுதல், அதிகத் தாதுக்கள்கொண்ட மோசமான நீர் போன்றவற்றால், கூந்தல் வறட்சியாகும்.
2 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் உடன் 67 கறிவேப்பிலைகளைப் போட்டு சூடுசெய்யவும். இந்த எண்ணெய் ஆறிய பின் ஸ்கால்ப்பிலும், கூந்தலிலும் பூசி, 15 நிமிடங்கள் வரை இளஞ்சூடான துண்டை கூந்தலின் மேல் சுற்றிவைத்த பின்னர், கூந்தலை அலசலாம்.
50 கிராம் வெந்தயத்தை இரவில் ஊறவைத்துவிட்டு மறுநாள் பசையாக அரைத்துக்கொள்ளவும் அதில் 4 ஸ்பூன் யோகர்ட், 5 துளிகள் ஆலிவ் எண்ணெய், 1 ஸ்பூன் தேன் கலந்து கூந்தலில் பூசி, 45 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பூவால் கூந்தலை அலசவும். வாரம் இருமுறை செய்யலாம்.
குளிர்கால ஹேர் மாஸ்க்
முழு முட்டையை உடைத்து அதை நன்கு அடித்து கூந்தல் முழுவதும் பூசி 40 நிமிடங்கள் கழித்து, கூந்தலை அலசவும். முட்டையில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளதால், கூந்தலுக்குச் சிறந்த ஹேர் பேக்காக அமையும்
ஒரு பவுளில் ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றிக் கொள்ளுங்கள் ,பஞ்சால் வினிகரை தொட்டு ஸ்கால்பிலும் கூந்தலிலும் பூசி, பின் 510 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசுங்கள்.
கேரட்1, அவகேடோபாதி, வெந்தயம் மற்றும் கற்றாழை ஊறவைத்தது, முட்டை 2, செலரி ஆகியவற்றை மையாகக் கலந்து கூந்தலில் பூசி 1 மணி நேரம் கழித்து அலசலாம்
ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மூலிகை எண்ணெய் 1டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் 1டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சூடு செய்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 100 முறை சீப்பால் வார வேண்டும்.
ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்
10 விரல்களின் நுனியால் மண்டையை மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்திடுங்கள். மசாஜ் செய்யும்போத, முன்னந்தலையிலிருந்து பின்னந்தலைவரை மசாஜ் செய்யவும்.
ப்ளாஸ்டிக் சீப், நகங்கள் ஆகியவை ஸ்கால்ப்பை சேதப்படுத்தும். மர சீப்பால் கூந்தலை அழுத்தி வார, ரத்த ஒட்டம் சீராகப் பாயும்
டீ ட்ரீ எண்ணெயை (Tea Tree oil) ஸ்கால்ப்பில் பூசி மசாஜ் செய்யலாம்
தலையணையின் உறை சாட்டின் (satin) துணி வகையாக இருக்கலாம். அதுபோல கூந்தலைப் போர்த்தும் ஸ்கார்ப் (Scarf) சாட்டினாக இருப்பது நல்லது. ஏனெனில் மற்ற துணி வகைகள் கூந்தலில் இருக்கும் ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும்.
5 நிமிடங்களுக்கு மேல் கூந்தலை ஹீட்டரால் காயவைக்கக்கூடாது. அவசர அவசரமாக கூந்தலை வாரி, சிக்கு எடுக்கக் கூடாது
ஸ்கால்ப் ஈரமாக இருக்கையில் கூந்தலை சீப்பால் வாருவது தவறு. முள்ளங்கி, சோயா பீன்ஸ், புரோகோலி, ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்னைகள் வராது.
இளநரை
இளைய தலைமுறையினரை பாடாய்ப்படுத்தும் மிகப் பெரிய பிரச்னை... நரை. கெமிக்கல் கலந்த ஹேர் டை, கலரிங், ஷாம்பூ என இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, கூந்தலை சேதப்படுத்த வேண்டாம்.
இயற்கையான முறையில் மருதாணி அரைத்துப் பூசினால், அது சிவப்பாகத் தெரியும் என பலர் விரும்ப மாட்டார்கள். அவர்கள் ப்ளாக் ஹென்னாவைத் தயாரித்துப் பயன்படுத்தினால் இயற்கையான கூந்தலை போலவே இருக்கும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. வீட்டிலேயே செய்வதும் எளிது.
பிளாக் ஹென்னா
தேவையானவை: ஹென்னா ஒரு கப், சூடான பிளாக் காபி பேஸ்ட்டாக மாற்றுவதற்குத் தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு ஒரு பழம், ஆப்பிள் சிடர் வினிகர் 2 ஸ்பூன், முட்டை மஞ்சள் கரு 1 (விரும்பினால்) ப்ளைன் யோகர்ட் 2 அல்லது 4 ஸ்பூன் இண்டிகோ (அவுரிப் பொடி அல்லது அவுரி இலை) சிறிதளவு
செய்முறை: ஹென்னா பொடியுடன், சூடான பிளாக் காபி கலந்து பேஸ்ட்டாக்கிக்கொள்ளுங்கள். பிறகு எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, 6 மணி நேரம் ஊறவையுங்கள். எப்போது பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு முன் முட்டையின் மஞ்சள் கரு, யோகர்டையும் ஹென்னாவில் கலந்து கூந்தலில் பூசுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசி நன்கு உலர்த்துங்கள். இண்டிகோவை வெந்நீரில் காய்ச்சி அதைத் திக்கான பேஸ்ட்டாக மாற்றி, அதைக் கூந்தலில் பூசுங்கள். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். கருகரு கூந்தல், மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.
டார்க் பிரவுன் ஹென்னா
தேவையானவை: ஹென்னா ஒரு கப், பட்டைப் பொடி கால் கப், சூடான பிளாக் காபி , பேஸ்டாக மாற்றுவதற்குத் தேவையான அளவு , எலுமிச்சைச் சாறு ஒரு பழம், ஆப்பிள் சிடர் வினிகர் 2 ஸ்பூன் , முட்டை மஞ்சள் கரு 1 (விரும்பினால்) , ப்ளைன் யோகர்ட் 2 முதல் 4 ஸ்பூன் , இண்டிகோ (அவுரிப் பொடி அல்லது அவுரி இலை) சிறிதளவு
செய்முறை: ஹென்னா பொடியுடன், பட்டைப் பொடியைக் கலந்து சூடான பிளாக் காபியும், திராட்சை சாறும் கலந்து, பேஸ்ட்டாக மாற்ற வேண்டும். பிறகு, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து 6 மணி நேரம் ஊறவையுங்கள். பயன்படுத்துவற்கு முன்பு, இண்டிகோவை தண்ணீரில் பேஸ்ட்டாகக் கலந்து ஹென்னா பொடியுடன் கலந்துவைக்கவும். பிறகு முட்டை மஞ்சள் கரு, யோகர்ட்டை ஹென்னாவில் கலந்து, உடனே கூந்தலில் பூசிவிடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். டார்க் ப்ரவுன் கூந்தலுடன் வலம் வரலாம்.
கூந்தலுக்கு ஆதாரம் புரதம்
90 சதவிகிதம் முடிகள் வளரும் நிலையில் இருக்கும், 10 விகிதம் முடிகள் உறங்கிக் கொண்டிருக்கும். ஓய்வு நிலையைக் கடந்த பின், முடிகள் உதிரத் தொடங்கும். புது முடிகளும் வளரும். அதாவது 50100 முடிகள் வரை உதிர்ந்தால், அது இயல்புதான். புரதம் என்பது அமினோ அமிலங்கள் நிறைந்தவை. முடி, புரதத்தால்தான் உருவாகிறது. முடி வளர்வதற்கு அமினோ அமிலங்களும், புரதமும் அவசியம்.
இறைச்சி, மீன், முட்டை, நட்ஸ், பயிறு வகைகள், சிக்கன், சோயா, பால் ஆகியவற்றில் புரதம் நிறைந்துளது.
கர்ப்பிணிப் பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு...
குழந்தை வயிற்றிலிருக்கும் போது கூந்தல் உதிர்வது இயல்பு. இதற்கு ஊட்டச்சத்துக்களை சமன்படுத்தினாலே போதும், இயற்கையாகக் கூந்தல் வளர்ச்சி பெறும்.
ஜின்க், ஃபோலிக் அமிலங்கள், வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
அடர் பச்சை நிற காய்கறிகள், தோல் நீக்கப்பட்ட இறைச்சி, முழு தானியங்கள், பச்சைப் பட்டாணி, பயறு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
டை பயன்படுத்தல் கூடாது. தேவையெனில் ஹென்னா பயன்படுத்தலாம்.
வாழை மற்றும் மெலான் வகை பழங்களை சாப்பிடுவதால், கூந்தல் நன்கு வளரும்.
ஒரு கப்பில் ஆலிவ் எண்ணெய், ரோஸ்மெரி எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, எலுமிச்சைச் சாறு இவற்றையெல்லாம் தேவையான அளவில் கலந்து கூந்தலில் பூசிவந்தால், இயற்கையாகவே கூந்தல் வலுப் பெறும்.
ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சமஅளவில் எடுத்து, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்துவந்தால் கூந்தல் வலிமை பெறும்.
தேங்காய் பாலை கூந்தலில் பூசி 2030 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பூவால் கூந்தலை அலசலாம்.
வழுக்கை விழுவதைத் தடுக்க...
வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல், முடி முளைக்கச் சாத்தியம் இல்லை. கூடுமானவரையில் வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். இந்தப் பிரச்னையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது பெண்களுக்கும் இது ஏற்படுகிறது. ஆண், பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு.
மிளகு அளவில் தலையில் புழுவெட்டு வர ஆரம்பித்து, திடீர் என்று மண்டை முழுக்கப் பரவி, வழுக்கையை ஏற்படுத்தும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துவிட வேண்டும்.
தலைமுடியில் வேர்க்கால்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச்செய்ய முடியுமா? என்று ஸ்கேன் மூலம் தெரிந்து அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கை விழாமல் தடுக்கலாம். தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக் குளியல் அவசியம்.
தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது. தளர்வான பின்னலும், ஹேர் ஸ்டைலும்தான் நல்லது.
எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன வெங்காயம் மூன்றையும் நெறுநெறுவென அரைத்து, வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால், உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் திறந்து, மறுபடியும் வளரத் தொடங்கும்.
கிராமங்களில் கிடைக்கும் குமுட்டிக்காயை வாங்கி, அதை வெட்டினால் உள்ளுக்குள் ஈரப்பதம் இருக்கும். வழுக்கை விழும் பகுதியின் மேல் அதைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து ஊறியதும் கழுவினால், உதிர்ந்த இடத்தில் முடி வளரும்.
கூந்தலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்
நிறைய கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது. அதிலும் தினம் ஒரு கீரை எனப் பட்டியல் போட்டு சாப்பிடும்போது, இரும்புச்சத்து கிடைத்து, முடி உதிர்தல், வழுக்கை என எதிலும் பாதிப்பு இல்லாமல், செழிப்பாக இருக்கும்.
அத்திப்பழம், பேரீச்சை, நட்ஸ் வகைகள், காய்கறி, பழங்கள் ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்கு பலம் தரும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் முடி வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. கால்சியம் சத்து, எள் மற்றும் பாலில் அதிகம் இருக்கிறது. எள்ளை லேசாக வறுத்து, வெல்லம் சேர்த்து உருண்டையாகப் பிடித்து, குழந்தைகளுக்கு தினமும் கொடுத்துப் பழக்கலாம்.
கறிவேப்பிலையை காய வைத்து பொடித்து, சமையலுக்குப் பயன்படுத்தலாம். சாதத்துடன் பிசைந்து நெய் சேர்த்தும் தரலாம். கறிவேப்பிலையில் புரதமும், இரும்புச் சத்தும் மிக அதிகம். மேலும் இதில் உள்ள பீட்டாக் கரோட்டின் செல்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்வதால் அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளலாம். பேரீச்சை, கறிவேப்பிலை, கீரை போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகள் முடி வளர்ச்சிக்கு நல்லது. வைட்டமின் இ அடங்கிய சோயாபீன்ஸ், சீஸ், பழங்கள் ஆகியவற்றை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது முடி உதிர்வதைத் தடுக்கும்.
புரதச் சத்துள்ள பால், முட்டை, மீன் போன்ற உணவுகள் வைட்டமின் பி நிறைந்த தேங்காய், பால், தக்காளி, ஆரஞ்சு, முளைக்கட்டிய கோதுமை, ஓட்ஸ், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் கூந்தலை மிளிரச்செய்யலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.
முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்:
வைட்டமின் (அ) பயோடின்: செல்களை உற்பத்தி செய்யும். செல்களைப் புதுபிக்கும். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும்.
உணவுகள்: முட்டை, ஈஸ்ட், காலி ஃப்ளவர், ராஸ்பெர்ரி, வாழை, வால்நட், பாதாம்.
வைட்டமின் பி6: டெஸ்டோஸ்டீரான் செயல்பாட்டை சமன்படுத்தும். இதனால் ஏற்படும் தடைகளையும் மாற்றும் வல்லமை வைட்டமின் பி6க்கு உள்ளது.
உணவுகள்: ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகள்.
வைட்டமின் ஏ: கூந்தல் கருப்பாகவும், பளபளப்பாகவும் வளர உதவும். கூந்தலை வலுப்படுத்தி அடர்த்தியாக்கும்.
உணவுகள்: உருளை, கேரட், ஈரல், முட்டை, பால், கீரைகள், உலர் அத்தி, மாம்பழம்.
வைட்டமின் பி12: கூந்தல் உதிர்வதைத் தடுக்கும். உடலில் உள்ள இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்.
உணவுகள்: முட்டை, சீஸ், பால், யோகர்ட்.
வைட்டமின் சி: முடி வளர்ச்சிக்கு உதவும். இளநரையைப் போக்கும். வறட்சியை நீக்கும்.
உணவுகள்: எலுமிச்சை, கொய்யா, ஸ்டாரபெர்ரி.
வைட்டமின் இ: ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் அனைத்துக் கூந்தல் பிரச்னைகளும் தீரும்.
உணவுகள்: பாதாம், மீன், பால், வேர்க்கடலை, கீரைகள், சூரியகாந்தி விதைகள், உலர் மூலிகைகள்.
ஹேர் டிப்ஸ்...
பொடுகு, பேன் தொல்லை இருப்பவர்கள், தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது, சற்று கவனமாக இருக்க வேண்டும். சரியான முறையில் தேய்க்கவில்லை எனில், எளிதில் முடி உடைந்துவிடக்கூடும்.
தலைக்குக் குளித்ததும் துவட்டாமல் ஈரத் தலையுடன் இருப்பது முடிக்கான பாதிப்பை அதிகரிக்கும். துவட்டி, நன்றாகக் காயவைப்பதே முடிக்கான பாதுகாப்பு.
இரவு படுக்கைக்குப் போகும்போது, எண்ணெய் தடவி, தலையை நன்றாக வாரி, சற்றே தளர்வாக பின்னல் போட்டுக்கொள்வது, முடி வளர்ச்சியை அதிகரிக்கச்செய்யும்.
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து மசாஜ்செய்யுங்கள். பிறகு சீயக்காய்போட்டு அலசினால், முடி நன்றாக வளரும்.
தலையில் சீப்புப்போட்டு வாரும்போது, முன் நெற்றியில் படும்படி வாரக் கூடாது. இதனால், முன் நெற்றிப் பகுதியில் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வித்திடுவதுடன், பருக்கள் போல் பொரிப்பொரியாக வரவும் வாய்ப்புகள் அதிகம்.
தலைமுடியை தூக்கி வாராதீர்கள். இதனால், முன் நெற்றி பகுதி பெரிதாகக்கூடும். தழைத்து வாருவது நல்லது.