''எனக்கு மட்டும் ஏன்தான் கடவுள் இத்தனை கஷ்டத்தைக் கொடுக்கிறானோ தெரியலை. இத்தனைக்கும் நான் போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. இருந்தாலும், வாழ்க்கைல நிம்மதிங்கறதே இல்லாம போச்சு!'' என்று அங்கலாய்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணியும் இந்த ரகம்தான். சுண்டுவிரலில் காயம் பட்டால்கூட, தெருமுக்குப் பிள்ளையாரை அர்ச்சிக்க ஆரம்பித்துவிடுவாள்.
''ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா... கடந்த அஞ்சு வருஷமா ஒருநாள் விடாம, தினமும் சாயந்திரம் விளக்கு வச்சா, தெருக்கோடி பிள்ளையார் கோயிலுக்கு நான் போகாம இருந்ததே இல்லை. தினமும் உண்டியல்ல அஞ்சு ரூபாய் காயின் ஒண்ணு போட்டுட்டுத்தான் வருவேன். வீட்டுச் செலவுக்காக மாமா கொடுக்கற ரூபாய்ல பிள்ளையாருக்குன்னே நூத்தம்பது ரூபா எடுத்து வச்சுடுவேன். ஆனாலும், அந்தப் பிள்ளையாருக்கு என்மேல கொஞ்சம்கூட கருணையே இல்லை!''
''ஏன், என்னாச்சு?''
''வர்ற சங்கடஹர சதுர்த்திக்கு கொழுக்கட்டை பண்ணலாம்னு மாவு அரைச்சு வச்சேன். நேத்து ராத்திரி எலி ஒண்ணு எப்படியோ சமையலறைக்குள்ளே வந்து அத்தனை மாவையும் குதறி வச்சுட்டுப் போயிட்டுது. ம்... எனக்கு மட்டும் ஏன்தான் இந்த விநாயகப் பெருமான் இத்தனை கஷ்டத்தைக் கொடுக்கிறானோ..!''
இப்படி கொழுக்கட்டை மாவில் ஆரம்பித்து, வீட்டில் பழைய துடைப்பக்கட்டை காணாமல் போனாலோ, காரில் போகும்போது பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்துபோனாலோ... இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட, 'எனக்கு மட்டும் ஆண்டவன் ஏன்தான் இப்படி அடுக்கடுக்கா கஷ்டங்களைக் கொடுக்க றானோ?' என்று புலம்ப ஆரம்பித்துவிடுவாள்.
அந்தப் பெண்மணிக்கு போன வாரம் அவரே எதிர்பாராத விதமாக, ஐம்பது லட்சம் ரூபாய் சுளையாக வந்தது. அவருடைய தாத்தா சம்பாதித்து, பேத்திக்கு என எப்போதோ எழுதி வைத்த சொத்து. அது பற்றி அவர் வாயைத் திறக்க வேண்டுமே? மூச்!
போகட்டும்... 'எனக்கு மட்டும் ஆண்டவன் ஏன்தான் இத்தனை பெரிய ஆனந்தத்தைக் கொடுக்கறானோ?' என்று புதிய பல்லவியாவது பாடுவார் என்று எதிர்பார்த்தேன். ஊஹூம்!
அதுசரி, சுகத்தையும் துக்கத்தையும் சமமாகப் பாவிக்கவேண்டும் என்று கீதையில் பகவான் நமக்கா சொன்னார்? அர்ஜுனனுக்குதானே?