அடுத்த தலைமுறையையும் தாக்கும் மது அரக்கன்!
சமீபத்தில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்தேன். அன்றைய தினம், எட்டு வயது மதிக்கத்தக்க கிராமத்து சிறுவன் ஒருவன், வயிற்றுவலியால் துடித்துக் கொண்டிருந்தான்; அவனது அலறல் சத்தம் மருத்துவமனையை அதிர செய்தது. அப்போது அங்கு வந்த மருத்துவர் அவனை பரிசோதனை செய்ததில், அவனது குடல்வால் பாதித்திருப்பதை அறிந்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்ல கூறினார்.
முதலில், அவனுக்கு மயக்க ஊசி போடப்பட்டது. ஆனால், மயக்க ஊசியின் மருந்து, அச்சிறுவனின் உடம்பில் உள்வாங்கியும், மயக்க நிலை நீடிக்கவில்லை. அவனுக்கு சட்டென்று நினைவு திரும்பியதில், உச்சகட்ட வலியால் துடிதுடித்து அழுதான். இதைக் கண்ட மருத்துவர் செய்வதறியாது திகைத்தார். பின் நிதானித்து, ரத்த பரிசோதனை ரிப்போர்ட்டை மறுபரிசீலனை செய்ததில், அவனுடைய ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததால், அச்சிறுவனுக்கு மயக்கம் வரவில்லை என்பது புரிந்தது.
மருத்துவர், அச்சிறுவனை நோக்கி, 'நீ தண்ணி அடிப்பியா... உண்மையைச் சொல்லு...' என, கண்டிப்புடன் கேட்டார். அவன், 'இல்லை...' என்று மறுத்தான்.
மருத்துவர், அவனது தாயாரிடம் பக்குவமாக விசாரித்ததில், சிறுவனின் தாய், தன் மகனுக்கு குடிப்பழக்கம் இல்லை என்றும், தன் கணவர்தான் நிரந்தர குடிகாரர் என்று, கண்ணீர் மல்க புலம்பினாள்.
குடிகார தந்தையின் ரத்த மரபணுக்கள் தான் அவனது பிறப்பு. அதாவது, இச்சிறுவனின் ரத்தமும், ஆல்கஹாலின் தன்மையை பெற்று விட்டது. இந்த உண்மையை அவர்களிடம் விளக்கி, சிகிச்சையை தொடர்ந்தார்.
மருத்துவரின் விடாமுயற்சியால், அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
ஒருவனுடைய குடிப்பழக்கம், அவனை மட்டுமல்லாமல், அவன் சந்ததிகளையும் பாதிப்படைய வைக்கிறது.
இளைஞர்களே... தீமையை தரும் மதுவை அருந்தாதீர்கள்; மதுவை விலக்கி, உங்கள் வாழ்க்கையையும், சந்ததிகளின் ஆரோக்கியத்தையும் காப்பாற்றுங்கள்!
(Source: Dinalmalar, 21/09/2014)