Sunday, September 28, 2014

திறமை + அதிர்ஷ்டம் = வெற்றி !

மைக்கேல் ஜே. மவ்பௌஸின் எழுதிய 'தி சக்சஸ் ஈக்யுவேஷன்'. நாம் செய்யும் வியாபாரம், முதலீடு, விளையாட்டு போன்ற விஷயங் களில் நம்முடைய திறமையையும் அதிர்ஷ்டத்தையும் வெளிக்கொண்டு வருவது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம் இது.
'திறமையும் அதிர்ஷ்டமும் நம்முடைய கையிலேயே இருக்கிறது. ஆனால், ஓர் இடியாப்ப சிக்கலுக்குள்ளே  இருக்கிறது. அந்தச் சிக்கல்களைப் பிரித்தெடுத்தால், நம்முடைய திறமையும் அதிர்ஷ்டமும் நமக்கு முழுமையாக உதவும்' என்பதைச் சொல்லும் புத்தகம் இது.
''இன்றைக்கு இந்தப் புத்தகத்தை நான் எழுதி நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் ஒரு குப்பைத் தொட்டிதான்'' என எடுத்த எடுப்பிலேயே அசத்துகிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல். அவர் படித்து முடித்தவுடன் ஒரு பெரிய இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் நிறுவனத்தில் வேலைக்குப் போவதற்கு விண்ணப்பித்து இருக்கிறார். முதல் சுற்று நேர்காணல் முடிந்து ஒரு இருபது பேரை தேர்வு செய்தனராம். அதன்பின்னர் இன்னமும் இரண்டு சுற்று இருக்கிறது. அதில் முதலில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று உங்களை நேர்காணல் செய்யும். அதன்பின் நீங்கள் வேலை செய்யப்போகும் டிவிஷனின் சீனியர் ஒருவர் உங்களை சரியாகப் பத்து நிமிடம் மட்டும் நேர்காணல் செய்வார். அவர் செய்யும் நேர்காணல் தான் கடைசி நேர்காணல். அதில் தேர்ச்சி பெற்றால்தான் வேலை. இல்லாவிட்டால் இல்லை என்று சொன்னார்களாம் அந்த நிறுவனத்தினர்.
undefined
ஆறுபேர் நேர்காணலை முடித்துவிட்டு,  அடுத்த நேர்காணலுக்கு மிகப் பெரிய அறையில் மிகப் பெரிய மேஜையின் பின்னால் அமர்ந்திருந்த நபரின் முன்னால் போய் நின்றாராம் ஆசிரியர். மேஜையின் கீழே இருந்த இடைவெளியில் ஒரு குப்பைத்தொட்டி இருந்ததாம். அதில் வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் என்ற புரொஃபஷனல் ஃபுட்பால் டீமின் லோகோ போட்டிருந்ததாம்.
''அட, நீங்கள் ஃபுட்பால் பிரியரா? இந்த டீமின் லோகோ போட்ட குப்பைத் தொட்டியை வாங்கி வைத்திருக்கிறீர் களே! வாழ்க உங்கள் ஃபுட்பால் ஆதரவு'' என்றாராம் ஆசிரியர். இப்படி ஆரம்பித்த பேச்சுவார்த்தை கறாராக சொன்ன பத்து நிமிடங்களைத் தாண்டி பதினைந்து நிமிடம் வரை சென்றதாம். ஒட்டுமொத்த டிஸ்கஷனுமே ஒன்றும் அறிவுப்பூர்வமானதாக இல்லை. ஆனால், இருவருக்கும் பொதுவாய் பிடித்த விஷயங்கள் ஒன்றாக இருக்கவே, வேலையும் கிடைத்ததாம்.
''ஒரு குப்பைத்தொட்டி என் கேரியரை அமைக்க எப்படி அதிர்ஷ்டவசமாக உதவியது பார்த்தீர் களா? நம்முடைய வெற்றிகள் எல்லாமே நம்முடைய திறமை மற்றும் அதிர்ஷ்டத்தின் கூட்டணியாலேயே அமைகிறது'' என்று சொல்கிறார் ஆசிரியர்.
மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், முதல் பகுதியில் திறமை மற்றும் அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதற் கான வரையறைகளைத் தந்துள்ளார் ஆசிரியர்.
இரண்டாவது பகுதியில் அதிர்ஷ்டத்தையும் திறமையையும் கணக்கிட உதவும் சில கருவிகளையும்,  மூன்றாவது பகுதியில் அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும் தருணங்களில் திறமையை வளர்த்து / வைத்து வெற்றி பெறுவது எப்படி என்பது பற்றியும், அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் திறமையை எப்படி சரியான விகிதாசாரத்தில் உபயோகிக்க வேண்டும் என்பது பற்றியும் சொல்லியுள்ளார் ஆசிரியர்.
அதிர்ஷ்டம் என்பது என்ன? ''ஒரு சூழலில் நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ நடக்கும் சில நிகழ்வுகள் நமக்கு சாதகமாக நடந்தால் அதிர்ஷ்டம். பாதகமாக நடந்தால் துரதிர்ஷ்டம்'' என்று சொல்லும் ஆசிரியர், இதற்கு தரும் விளக்கம் சுவாரஸ்யமானது. ''மாணவர்களை நூறு கேள்விகளையும் அதன் விடைகளையும் படித்துக்கொண்டு வரச்சொன்ன ஆசிரியர், அதிலிருந்து இருபது கேள்விகளைத் தேர்ந்தெடுத்து தேர்வில் கேட்கிறார். அதில் 80 கேள்வி களை மட்டுமே படித்துவந்த ஒரு மாணவனுக்கு அவன் படித்த 80-ல் இருந்தே அந்த இருபது கேள்விகளும் கேட்கப்பட்டு, அவை அத்தனைக்கும் பதில் எழுதி நூற்றுக்கு நூறு வாங்கினால் அதுதான் முழு அதிர்ஷ்டம்'' என்கிறார்.
''கடுமையாக முயற்சித்து திறமையை வளர்க்கும்போது அதிர்ஷ்டமும் அதிகரிக்கிறது. அதிர்ஷ்டத்தைப் பெற அது செல்லும் வழியில் நாம் இருக்க வேண்டும். உங்களுக்கு லாட்டரியில் பரிசு விழவேண்டுமென்றால் நீங்கள் முதலில் லாட்டரி சீட்டு வாங்க வேண்டுமில்லையா?'' என்று கேட்கிறார். 
''ஐந்து இன்டர்வியூகளுக்குச் சென்றுவிட்டு வேலை கிடைக்காமல் இனி நமக்கு வேலை கிடைக்காது என்று முடிவு செய்து உதவாக்கரையாய் திரிகிறார் ஒருவர். ஐந்தில் வேலை கிடைக்காத போதும், தொடர்ந்து இன்டர்வியூக்களுக்கு சென்று பத்தாவது இன்டர்வியூவில் வேலையைப் பெறுகிறார் இன்னொருவர். துரத்திப்பிடித்து வேலையை வாங்கியது அதிர்ஷ்டம் அல்ல. விடாமுயற்சி, பொறுமை, மனத்திடம் என்ற மூன்றையும் கொண்டவர் இவர் என்றே சொல்ல வேண்டும் இல்லையா? இவை மூன்றும் திறமையை வளர்க்க தேவைப்படும் விஷயமல்லவா'' என்று கேட்கிறார் அவர்.

அடுத்தபடியாக திறமையைப் பற்றி விவரிக்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர். ''திறமை என்பது அறிவை செயலாக்குவது. திறமையை வளர்ப்பது கடின உழைப்பால் மட்டுமே முடியும். திறமையை வளர்ப்பதில் அதிர்ஷ்டம் என்பது இருக்கலாம் அல்லது இல்லாது போகலாம். திறமையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, வெற்றிக்கான வாய்ப்பும் அதிகரிக்கவே செய்யும்'' என்று சொல்லும் ஆசிரியர் இதற்கோர் உதாரணத்தைச் சொல்கிறார்.
''நீங்கள் டைப் செய்கிறீர்கள். தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து டைப்பிங் ஸ்பீடை அதிகரிக்கிறீர்கள். அதிகமான ஸ்பீடும் தப்புகள் குறைவதும் பயிற்சியால் வருவதேயன்றி அதிர்ஷ்டத்தால் வருவதல்ல. அதேசமயம் அதிர்ஷ்டத்தை சார்ந்த ஒரு விஷயத்தில் என்னதான் திறமையை வளர்த்தெடுத்து வைத்திருந்தாலும் வெற்றிக்கு எந்தவிதமான கேரன்டியும் கிடையாது'' என்கிறார் ஆசிரியர்.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ''ஒரு கோட்டின் ஒரு எல்லையில் அதிர்ஷ்டமும், மறுஎல்லையில் திறமையும் உள்ளது; இரண்டும் சேர்ந்து பல்வேறு விகிதாசாரங்களில் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தருகிறது'' என்கிறார் ஆசிரியர். (பார்க்க மேலே உள்ள படம்)
இறுதியாக ஆசிரியர், ''அதிர்ஷ்டத்தையும் திறமையையும் இணைக்கும் இணைப்புக்கோட்டில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். பிறர் சொல்லும் பின்னூட்டங்களை (ஃபீட்பேக்) கேட்டு ஆராய்ந்து செயல்படுங்கள். திறமையை வளர்ப்பதற் கான திட்டங்களை எப்போதுமே கைவசம் வைத்திருங்கள். உங்களுடைய எல்லைகளை தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்'' என பல்வேறு கருத்துக்களை  உதாரணங் களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
அதிர்ஷ்டம் வேண்டும் என்பவர் களும், திறமையை வளர்க்கவேண்டும் என்று நினைப்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.



.