நம்பாதவர்களுக்கு...
தொலைக்காட்சிகளிலும் பத்திரிகை களிலும், அவ்வப்போது சிலர் பேட்டி கொடுப்பதைப் பார்த்திருப்பீர்களே!
'பேங்க்லேர்ந்து பத்துலட்ச ரூபா பணத்தோட வெளியில வந்தேன் சார்! அத வண்டியில வச்சிட்டு, சாவியப் போட்டு திருப்பினேன். அப்ப ஒரு ஆள் வந்து, 'சார்! கீழ கெடக்குற இருபது ரூபா உங்களுதா பாருங்க'ன்னு சொன்னான். இருபது ரூபா கீழ கெடந்துச்சு. குனிஞ்சு அத எடுத்துக்கிட்டு நிமிர்ந்து பார்த்தா, பத்து லட்ச ரூபாயோட இருந்த என் 'பேக்'கைக் காணோம் சார்!' என்று கண்ணீர் வழிய பேட்டி வந்திருக்கும்.
இருபது ரூபாய் மீது ஆசை கொண்ட மனித மனம், பத்து லட்சத்தை இழந்துவிட்டு பதறுகிறது. இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க எண்ணியதன் விளைவு அது.
இப்படி காசுபணம் போய் விட்டால், எப்படியாவது திரும்பப் பெற்று விட முடியும். ஆனால்... காலம்..? போய்விட்டால், திரும்பப் பெற முடியாதது அது. அதன் மூலம் கிடைக்க வேண்டிய அனுபவப் பாடங்களும் போய்விடும். சிறியதற்கு ஆசைப்பட்டு பெரியதை இழந்துவிடக் கூடாது.
இன்று பல நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பழகி வரும் ஓர் அழுத்தமான வசனம் (பஞ்ச் டயலாக்), 'பேப்பர் போட்டுட்டேன்' என்பது.
ஓர் ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக் கிறது என்பதற்காக, பல நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, வேறு ஒரு நிறுவனத்துக்குப் போகும்போது... சர்வீஸ் தொடர்பற்றுப் போகிறது.
அதைவிட, இன்னும் ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்கும் என்றால், அங்கிருந்தும் புறப்படத் தயாராகிவிடுவோம். பல நேரங்களில், வேலை முடிந்தவுடன் 'ஆட் குறைப்பு' என்ற பெயரில், புதிதாக வந்தவர்கள் அதாவது ஆயிரம் ரூபாய் அதிகம் கிடைக்கும் என்று வந்தவர்கள், வெளியேற்றப்படுவார்கள்.
ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்கும் என்று வெளியே வந்த பலர், அன்றாட செலவுகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறியதற்கு ஆசைப்பட்டு பெரியதை இழந்து விடக் கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை பழந்தமிழ்ப் பாடல் ஒன்று கவிதையாக விவரிக்கிறது.
வேடன் ஒருவன் கூரான அம்பை ஏவி, ஒரு யானையைக் கொன்றான். அதேநேரம், ஒரு நாகப் பாம்பு வேடனைக் கொத்த, வேடன் பாம்பின் மீது விழுந்து இறந்தான்; பாம்பும் இறந்தது. ஆக மொத்தத்தில் யானை, வேடன், பாம்பு என மூன்று உடல்கள் அங்கே மூச்சின்றி கிடந்தன. அந்த நேரம் பார்த்து... அந்தப் பக்கமாக வந்த ஒரு நரி, இறந்து கிடந்த மூன்று உடல்களை யும் பார்த்தது. அதற்கு ஆனந்தம் தாங்கவில்லை.
'ஆகா! யானையை மூன்று மாதங்கள் வரை வைத்துத் தின்னலாம். வேடனை மூன்று நாட்கள் வைத்துத் தின்னலாம். பாம்போ, ஒரு நாளுக்கு இரையாகும்...' என்று சொல்லிக் கொண்டே நரி நெருங்கியது. அப்போது அதன் கண்களில், இறந்து கிடந்த வேடனின் கையில் இருந்த வில் தென்பட்டது. வில்லில் இருந்த நாண் கயிறு பளபளத்து, நரியின் ஆசையைச் சுண்டி இழுத்தது. அந்த நாண் கயிறு மிருகங்களின் நரம்பால் ஆனது. அதைப் பார்த்த நரி, நாக்கில் நீர் சொட்ட, 'இந்த நரம்பினாலான நாண் கயிற்றை முதலில் கடித்துச் சுவைத்து விட்டு, யானை முதலானவைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று நினைத்தபடி, நாண் கயிற்றைக் கடித்தது. அவ்வளவுதான்! விபரீதம் விளைந்தது. நாண் கயிறு துண்டானதும், 'படீ'ரென்று நிமிர்ந்தது வில். அதன் கனமான பகுதி தலையில் தாக்க, நரியின் தலை துண்டாகிப்போய் விழுந்தது.
சிறியதற்கு ஆசைப்பட்டதன் விளைவு!
இந்தக் கதையைச் சொல்லி, அற்ப சந்தோஷத்தின் விளைவை உணர்த்தி, எச்சரிக்கும் பாடல்...
கரி ஒரு திங்கள் ஆறு
கானவன் மூன்று நாளும்
இரிதலைப் புற்றில் நாகம்
இன்று உணும் இரை ஈதென்று
வருதலை வேடன் கையில்
விற்குதை நரம்பைக் கவ்வி
நரியனார் பட்ட பாடு
நாளையே படுவர் தாமே.
(விவேகசிந்தாமணி 92ம் பாடல்)