Tuesday, September 9, 2014

'என்னது... சூப்ல கூடவா சூனியம் வெக்கிறானுங்கோ...?!

மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும்கூட தற்போது மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன சூப் கடைகள். இதன் அலாதி சுவை சுண்டியிழுப்பதால், சுற்றிச் சுற்றி வருகின்றன குழந்தைகள்! 'சூப் குடிப்பது ஆரோக்கியம்' என்கிற பிரசாரத்தால் படையெடுக்கின்றனர் பெரியவர்கள்!

''வீட்டுல செய்யுற சூப், கஷாயம் மாதிரி இருக்கும். ஆனா, கடைகள்ல குடிக்கிற சூப், சூப்பர்! சூப் குடிச்சா ஸ்ட்ரெங்த் கிடைக்கும்னுதான் ஆரம்பத்தில் சூப் கடைகளில் பைக்கை நிறுத்த ஆரம்பிச்சேன். இப்போ நான் கிட்டத்தட்ட அடிமை ஆயிட்டேன்னு நினைக்கிறேன். யெஸ்... ஐயாம் எ சூப் பாய்!'' என்று சொல்லிச் சிரிக்கிறார், திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்திரமௌலி. இப்படி பலதரப்பினரின் ஓட்டுகளும் ஒட்டுமொத்தமாக விழ ஆரம்பித்திருப்பதால்... வேகவேகமாக சூடுபிடித்து வருகிறது சூப் டிரெண்ட்!

ஆனால், ''ஆரோக்கியம் என்று நினைத்து குடித்துக்கொண்டிருக்கும் இந்த சூப் வகைகளில், உண்மை யாகவே ஆரோக்கியம் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பாக,  பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சூப்களில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட் கள், ஆரோக்கியத்தைவிட, எதிர் விளைவுகளையே அதிகம் தருவதாக இருக்கின்றன'' என்று அதிர்ச்சியூட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி.

'என்னது... சூப்ல கூடவா சூனியம் வெக்கிறானுங்கோ...?!' என்று அதிர்கிறீர்களா, கிருஷ்ணமூர்த்தி சொல்வதைத் தொடர்ந்து படியுங்கள்!

''நம் பாரம்பரிய சமையலில் ஒன்று ரசம். இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப். நம்முடைய மிளகு ரசத்துக்கு இணையான சத்து உள்ள சூப், எதுவுமே இல்லை என்பதே உண்மை. மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததுதான் சூப் கலாசாரம், இன்று, இது  ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஸ்டார் ஹோட்டல்களில், சாப்பிட ஆரம்பிப் பதற்கு முன்பாக 'ஸ்டார்ட்டர்' என்கிற வகையில் சூப் பரிமாறப்படுகிறது. ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் சூப்கள், உடலுக்கு நல்லது. சூப், நம் உடம்பில் உள்ள என்சைம்களைத் தூண்டுவதால், செரி மானம் சரிவர நடக்கும். அசிடிட்டியைக் குறைக்கும், பசியைத் தூண்டும். இதுதான் ஹோட்டல்களில் இதை ஸ்டார்ட்டர் என்கிற வகையில் பரிமாறக் காரணம்.

ஆனால், 'அந்தக் கடையில் சூப் டேஸ்ட்டா இருக்கும்', 'இந்தக் கடையில் 10 வெரைட்டி சூப் கிடைக்கும்' என்று தேடித்தேடிக் குடிப்பவர்களுக்கு, நல்ல பலன் கிடைக்காது. காரணம், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் சூப்களில் சுவையூட்டிகள் மற்றும் மோனோசோடியம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் சுவை அதிகமாகும்... அதேசமயம், சத்துக்கள் போதுமான அளவுக்கு  இருக்காது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். ஏற்கெனவே ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடம்பில் உப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு அந்த பாதிப்பு அதிகமாகக்கூடும். எனவே, மோனோசோடியம் கலந்த சூப்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்'' என்றவர், வீட்டில் தயாரிக்கும் சூப்பின் சிறப்புகளையும் குறிப்பிட்டார்.

''வீட்டில் தயாரிக்கப்படும் சூப்பில் உள்ள பலன்கள் பற்பல. சூப்பில் குறைந்த அளவு கலோரி இருப்பதால், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள், இருமல், ஜலதோஷம், சுவாசக் குழாய் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிகவும் நன்மை தரவல்லது சூப். சூப்பில் மூன்று வகை உண்டு. கிளியர் சூப் (clear soup), திக் சூப் (thick soup) மற்றும் தீசிஸ் சூப் (thesis soup). தாது உப்புகள் அதிகம் இருக்கும் கிளியர் சூப், உடல்நலக் குறைவால் திட உணவு சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்தைத் தரவல்லது. அதிக விட்டமின்களும் சுவையும் கொண்ட திக் மற்றும் தீசிஸ் சூப்களை அனைவரும் சாப்பிடலாம்.

பொதுவாக சூப் சாப்பிட ஏற்ற நேரம், காலை 11 மணி. அப்போதுதான், இந்த சூப் நம் உடலில் வேலை செய்து, செரிமானத்தைத் தூண்டி அடுத்த வேளைக்கான உணவு எடுத்துக்கொள்ள நம்மை தயார்படுத்தும். பிடித்த சூப்பையே தொடர்ந்து சாப்பிடாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப் எடுத்துக்கொள்வது, எல்லாச் சத்துக்களும் கிடைக்க வைக்கும். இன்று பலரும் 'நடைபயிற்சி' செல்லும் போதோ, சென்று திரும்பும் போதோ ரோட்டோரத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு சூப்பை வாங்கிச் சாப்பிடு கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் தண்ணீரே நம் உடலுக்கு அதிகம் தேவைப் படும். நடைபயிற்சியின் போது வியர்வையாக உட லில் இருந்து வெளியேறிய தண்ணீரை, அதிகமான தண் ணீர் எடுத்துக் கொள்வதன் மூலமே ஈடுசெய்ய வேண் டும்'' என்ற கிருஷ்ணமூர்த்தி,

''வீட்டில் சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்படும், சுவையூட்டிகள் கலக்காத, எண்ணெய் அதிகம் சேர்க் காத சூப்கள் அளவில்லா ஆரோக்கியம் தரவல்லவை. கடைகளில் வாங்கிக் குடிக் கும் சூப்கள், அதற்கு நேர் மாறானவை. இதேபோல சூப் பவுடர்களை வாங்கி தயாரிக்கப்படும் சூப்களும் ஆபத்தானவையே. இவற்றில் கலர் மற்றும் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படு வதால், உடல்நலத்துக்கு தீங்கையே தரும். அதுவும் கண்டகண்ட கடைகளில் சூப் வாங்கிக் குடிப்பது ஆபத்தானது. வெளியில் சூப் சாப்பிட ஆசைப்படுபவர் களை, வீட்டில் சூப் பருக வைக்கும் பழக்கத்துக்கு கொண்டு வருவது நல்லது!'' என்று சொன்னார்!

சரி, இதைப் பற்றி சூப் கடை வைத்திருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

சென்னை, பம்மலில்  சூப் கடை வைத்திருக்கும் தாண்டவராயனிடம் கேட்ட போது, ''வாடிக்கையா சூப் குடிக்கிறவங்களோட எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாயிட்டே வருது. சென்னையில் மட்டும் எனக்கு 20 கடைகள் இருக்கு. எல்லா கடைகளிலும் அதிகம் விற்பனை ஆகுறது, காளான் சூப், வெஜ் சூப் இது ரெண்டும்தான்.

சூப் கடைகள்ல சுவைக் காக சில பொருட்களைச் சேர்க்கறது உண்மைதான். ஆனா, என்னோட கடை யில நூத்துக்கு நூறு நேரடியான சூப்தான் விற்பனை செய்றேன். மோனோ சோடியம்ங்கிற பொருளைத்தான் சூப்புல சேர்க்கிறாங்க. இது பலவிதமான உணவுப் பொருளை சமைக்கறதுக்காக ஹோட்டல்கள்ல பயன்படுத்துற பிரபலமான ஒரு பொருள்தான். இது உடம்புக்கு தீமை தரும்ங்கிறது உண்மைதான். அதனாலதான் இதை நாங்க சேர்க்கிறதில்லை'' என்று சொன்ன தாண்டவராயன், இந்த மோனோசோடியம் கலக்கப்பட்டிருக்கும் சூப்பை கண்டுபிடிக்க ஒரு வழியும் சொன்னார்.

''சூப் குடிக்கும்போது நாக்கு சுறுசுறுனு இருக்கும், சுவை கூடுதலா இருக்கும். காரமான சூப் குடிச்சாலும் கொஞ்சம் இனிக்கிற மாதிரியே இருக்கும். இதெல்லாம் இருந்தா, அந்த சூப்புல மோனோசோடியம் கட்டாயம் சேர்த்து இருக்காங்கனு தெரிஞ்சுக்கலாம். இதன் பின்விளைவுகளை சொல்ல முடியாது. அதனால, வீடா இருந்தாலும், கடையா இருந்தாலும் தரமான சூப்பா சாப்பிட்டா... பிரச்னையே இருக்காது'' என்று வார்த்தைகளில் அக்கறை கோத்தார்.

சூப் பிரியர்களே... சூதனமாக இருந்துகொள்ளுங்கள்!


யாருக்கு என்ன சூப்?

டி.பி நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பலவீனமாக உள்ள வர்கள், தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டன் சூப்; கை, கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு நெஞ்சு எலும்பு சூப்; பிறந்து ஆறு மாதமே ஆன குழந்தைக்கு வெஜ் பாயில் சூப்; கீரைகளைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு, கீரை சூப் மற்றும் தக்காளி சூப்; எடை குறைவாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, மட்டன், சிக்கன் சூப். நார்மலாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, வெஜ் சூப் என கொடுக்கலாம். தக்காளி சூப்பில் தாது உப்புகள் அதிகம், இது நோய் எதிர்ப்பு சக்தி தரவல்லது. மட்டன் சூப்பில், இரும்புச் சத்து, பி 12 போன்ற சத்துகள் கிடைக்கும். சிக்கன் சூப்பில் புரதம், கொழுப்புச் சத்து அதிகம் கிடைக்கும். அசைவ சூப்களை தொடர்ந்து குடிக்கக்கூடாது. இது கொழுப்புச் சத்தை அதிகரிக்கச் செய்து, வேறு பிரச்னைகளுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

சாலையோர சூப்... ஜாக்கிரதை!

சூப் தயாரிப்பு முறையில் இருக்கும் அபாயங்கள் பற்றிப் பேசிய, சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் வேல்முருகன், ''தெருவோரக்கடைகளில் விற்கப் படும் சூப், விலை குறைவாக இருக்கிறது எனும்போதே அதன் தரம் சந்தேகத்துக்கு உள்ளாகிறது. ஃப்ரெஷ் காய்கறிகள் அல்லாது, விலை குறைவாகக் கிடைக்கும் மலிவு விலைக்காய்கறிகளையே இவ்வகை சூப் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சுவையூட்டிகளின் மாயத்தால் அதெல்லாம் நமக்குத் தெரியாது. சைவமே இப்படி என்றால், அசைவ சூப் பற்றி சொல்லவும் வேண்டுமா? மலிவு விலை மட்டன், சிக்கனில் செய்த சூப்தான் கப்களில் ஊற்றி நம் கரங்களில் தரப்படும். அந்த மாமிசத்தை அவர்கள் எந்த நீரில் சுத் தம் செய்திருப்பார்கள், எந்தளவுக்கு கழிவு நீக்கியிருப்பார்கள், என்ன தரத்தில் சமைத்திருப்பார்கள் என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவிர, ரோட்டோரங்களில் உள்ள கடைகள் என்றால், சாலையில் பறக்கும் தூசு மொத்தமும் சூப்புக்  குள் தான் தஞ்சம் புகும். கூடவே, இங்கே பயன்படுத்தப்படும் பாத் திரங்கள், கப்புகள், குவளைகளில் ஈக்கள் மொய்க்கும்பட்சத்தில், அது வேறுவிதமான பிரச்னைகளை உண்டு பண்ணும்'' என்று எச்சரிக்கிறார்.