புகைப்படம் எடுப்பவரிடம் ஜாக்கிரதை!
சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன்; அங்கு, பலர் மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன், பெண்கள் இருந்த பக்கமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், ஒரு பெரியவர் எழுந்து, 'தம்பி... நிறுத்து...' என, கத்தினார். சத்தம் கேட்டு, மண்டபத்தில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
'இந்த ஆள்... மண்டபத்தில் உள்ள இளம் பெண்களையே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்...' என பெரியவர் கூற, அதற்குள் ஒருவர், அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கி சோதித்தார். மண்டபத்தில் இருந்த அழகான பெண்கள் அனைவரும், அதில் பதிவாகி இருந்தனர்.
அந்த ஆள், பெண் வீட்டை சார்ந்தவரா, பையன் வீட்டை சார்ந்தவரா என, விசாரித்த போது இருதரப்பினருமே அவரை தெரியாது என, சொல்லி விட்டனர். அடுத்த நிமிடம், அவனுடைய மொபைல் போனை உடைத்ததுடன், அவனுக்கும் தர்ம அடி கொடுத்து விரட்டியடித்தனர். 'எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ...' நாளைக்கே, புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்களை, ஆபாசமாக, 'மார்பிங்' செய்து மிரட்டலாம்.
ஆகவே, கல்யாண மண்டபத்தில் மொபைல் போனில் புகைப்படம் எடுப்பவர்களை உடனுக்குடன் விசாரித்து, உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
(Dinamalar, 28-09-2014)