Saturday, September 27, 2014

வெற்றிக்கு கைகொடுக்கும் ATM

ஊர், உலகத்தில் உள்ளவர் களை ஊக்கப்படுத்தும் தொழில் அதிபர்களை / உயர் அதிகாரிகளை யார் ஊக்கப்படுத்துவது? வேறு யாரும் அல்ல. அவர்களே தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கிறார்கள். தங்களின் இலக்கை அடைய அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர்கள் மனதார யோசிக்கும்போது சுய ஊக்கம் ஊற்றெடுத்து சவால்களை மீறி சாதிக்கும் சக்திக்கு உரமிடுகிறது.

வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு ஏடிஎம்மை வைத்துள்ளார்கள். 'எல்லா நேரமும் சுய ஊக்கம்' (Any Time Motivation) என்ற கருவிதான் அது. முதலீடு, சேமிப்பு, வியாபாரம், போட்டிகள், லாப நஷ்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் சந்திக்க வேண்டிய இடையூறுகளையும், தடங்கல்களையும் இந்த ஏடிஎம் துணை யோடு தவிடுபொடி ஆக்கிவிடுகின்றனர்.

நம்முள் நிறுவப்படும் ஏடிஎம் திறந்த மனதை (Open Mind) அடித்தளமாகக் கொண்டிருக்கும். காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்று நாம் மனதார நம்பும்போது பொருளாதாரத் தோல்விகள் நம்மைத் துவண்டுவிடச் செய்ய முடியாது. ஒரு வெற்றிக்கனியை பறிக்கும்போது, அடுத்த வெற்றியை நோக்கி நம் முழுக் கவனத்தைச் செலுத்து வதற்கும், ஒரு தோல்வி அனுபவத்தைப் பெறும்போது நமது அடுத்த முயற்சி நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாவதற்கும் நமக்குள் ஒரு ஏடிஎம் அவசியம் தேவை.

இருபதாம் நூற்றாண்டின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ், பெற்றோர் களால் கைவிடப்பட்டு பிறரால் தத்து எடுக்கப்பட்டு வாழ்க்கை பயணத்தைத் தொடங்கி தொடர் வெற்றிகளைப் பெற்ற ஆப்பிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், 16 வயதில் ஆபீஸ் பையனாக வாழ்க்கையைத் தொடங்கி இந்திய தொழிலதிபர்களில் குறிப்பிட்டதக்கவர் களில் ஒருவராக விளங்கிய திருபாய் அம்பானி, தாவர எண்ணெய் வியாபாரத்தை சிறிய அளவில் நடத்திவந்த தன் தந்தைக்குப்பின் தான்  பொறுப்பேற்றுக் கொண்டு விப்ரோ நிறுவனங்களின் தலைவராக உருவெடுத்த அஜிம் பிரேம்ஜீ போன்ற சாதனையாளர்கள் அனைவரும் பிறர் கண்களுக்குப் புலப்படாத ஏடிஎம் ஒன்றை தங்களுக்குள் கொண்டிருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நமக்குள் இருக்கும் சுய ஊக்கம்தான் 'முயற்சியைக் கைவிட்டுவிடாதே' என்று நமக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்டி கொண்டிருக்கும். வாழ்வில் வெற்றிகள் நிரந்தமானவை அல்ல (Success is not End), தோல்விகள் இறுதியானவை அல்ல (Failure is not Final). எல்லாம் மாறக்கூடியது.

ஒரு கோணத்தில் பார்த்தால், தோல்விகள் என்பது தள்ளிபோடப்பட்ட வெற்றிகளே! (Failures Are Postponed Success).  தோல்வியால் ஏற்படும் மனச்சோர்வை நம்முள் இருக்கும் ஏடிஎம் மூலம் சுய ஊக்கத்தை எப்போது வேண்டுமானாலும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அப்போது மனம் லேசாகும்.

பள்ளியில் படிக்கும்போது தலைசிறந்த மாணவனாகவும், வாழ்க்கையில் தலைசிறந்த சாதனை யாளன் ஆகவும் நாம் இருக்க வேண்டும் என நம்மைச் சுற்றியுள்ளவர்களால் எதிர்பார்க்கப்படுகிறோம். ஆனால், வேலையில், தொழிலில் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை.

நாம் நமக்காக விரும்பி நிர்ணயம் செய்த இலக்கை அடைவதற்கு கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள சுய ஊக்கம் கைகொடுக்கும்.


மனித வாழ்க்கை என்பது கம்ப்யூட்டர் விளையாட்டு அல்ல. வாழ்வில் நாம் எடுக்கும் பல்வேறு முயற்சிகளின் முடிவுகள் நமக்கு முன்கூட்டியே தெரிய வாய்ப்பில்லை. ஆனால், விளைவுகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல், தளராமல் விடாமுயற்சியோடு இலக்கை எட்டுவதற்கு சுய ஊக்கம் ஒன்றே அருமருந்து.

எந்தவிதமான தடைகளும் தடங்கல் களும் நம் முயற்சிகளுக்கிடையே சந்திக்க நேரும்போது நாம் அவைகளுக்குப் பலிகடாக ஆகக் கூடாது. மாறாக, நான் எந்தச் சூழ்நிலையையும்விட பெரியவன் என்று திடமாக நம்ப வேண்டும்.

பிரச்னைகள் இல்லாத தொழில் இல்லை. அதுபோல் தீர்வுகள் இல்லாத பிரச்னைகள் இல்லை. கனவுகளுக்கும் பிரச்னைகளுக்கும் இடையேதான் வாழ்க்கை. இந்தப் பயணத்தை இனிதாக்க நமக்குத் தேவை ஒரு ஏடிஎம்!