'பட்... பட்.. படார்... படார்...' - காதைப் பிளக்கும் சரவெடிச் சத்தம், விசில், கூச்சல், ஆரவாரம் ஒரு பக்கம். ''யோவ்... மீசை..! இந்தா புடி லட்டு... உமக்கு பல்லு போனா என்ன? பக்குவமா மென்னு சாப்பிடு'' என்று இனிப்பு விநியோகம் மறுபக்கம்... அந்த கிராமத்துக்குள் நான் நுழைந்தபோது, இப்படி திடீர் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் கிராமத்தினர். கைகளையே பல்லக்காக்கி, சுரேஷைத் தூக்கி வட்டமடித்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.
தலையும் புரியாமல், வாலும் புரியாமல் விழிபிதுங்கி நின்றேன்.
''டேய், மாப்பிள்ளை... நம்ம சுரேஷ§ பத்தாங் கிளாஸ்ல டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்திருக்கான்யா'' என்று உறவுக்காரர் ஒருவர் உரக்கச் சொன்னபோதுதான், திடீர் தீபாவளிக்கான காரணம் புரிந்தது.
பத்திரிகையாளர்கள் வட்டமடித்துக் கொண்டிருக்க, அன்று சுரேஷ§க்கு மட்டுமல்ல... பெருமையின் உச்சத்தில் இருந்த அந்தக் கிராமத்தின் ரவிக்கை போடாத பல்லு விழுந்த பாட்டிக்குக்கூட கழுத்தருகே காலர் முளைத்திருந்தது. எல்லோரும் சுரேஷ் கழுத்தில் மாலை போட்டுக் கொண்டிருக்க... சுரேஷின் அப்பா, அவன் கழுத்தில் மாட்டியதோ... ஸ்டெதாஸ்கோப்! அடுத்த நிமிடமே 'டாக்டர் சுரேஷ்'... 'டாக்டர் சுரேஷ்' என ஆரவாரம். அன்றிலிருந்து நண்பர்கள் மத்தியில் அவன் 'டாக்டர் சுரேஷ்'!
''இதே வேகத்தோட ப்ளஸ் டூ பரீட்சையிலயும் நல்ல மார்க் எடுக்கணும்டா'' என வாழ்த்திவிட்டு வந்தேன்.
ஆண்டுகள் சில கரைய... 'ஊரே எதிர்பார்த்தது போல, சுரேஷ் டாக்டராக மாறி, நோயாளிகளைக் குணப்படுத்திக் கொண்டிருப்பான்' என நான் நினைத்திருக்க... கிரீஸ் கறை படிந்த துண்டு கழுத்தில், விதம்விதமா ஸ்க்ரூ டிரைவர் கையில் என லாரி டிரைவரிடம் திட்டு வாங்கும் 'கிளீனர் சுரேஷ்' என அவன் மாறிக் கிடந்ததைப் பார்த்தபோது... அதிராமல் எப்படி இருக்க முடியும்?
பதினாறு வயதிலேயே அவனுக்குள் நுழைந்த காதல், ஊரின் டாக்டர் கனவுக்கு கல்லறை எழுப்பிவிட்டது. அவன் சொன்ன அந்தக் காதல் (!) கதையை உங்களிடம் பகிர நினைக்கும்போதே மனம் படபடக்கிறது.
அன்று அவனுக்குப் பிறந்த நாள்...
''சுரேஷ்... இந்த காப்பரீட்சையில நீதான்பா முதல் மார்க்'' - ப்ளஸ் ஒன் படிக்கும் அவனை, வகுப்பாசிரியர் பாராட்டியதும், சக தோழர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சுரேஷ் மட்டும் எதையோ பறி கொடுத்தவனாக சோகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆளாளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை, எதன் மீதும் ஆர்வம் காட்டாதவன், அவள் கொடுத்த பரிசைப் பார்த்ததும் உயிர் துடிக்க துள்ளிக் குதித்தான்.
அவள்... துளசி. ரெட்டை ஜடை, கை நிறைய வளையல்கள், காதில் ஊஞ்சலாடும் ஜிமிக்கி, அடிதோறும் ஜதி சொல்லும் கொலுசு... என அன்று அவள் சுரேஷ§க்கு ரொம்பவே வித்தியாசமாகத் தெரிந்தாள். இப்படி அவன் வியந்து போகும் அளவுக்கு அவள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? சுரேஷ் தொலைத்த ராசியான பேனா. அது துளசியின் கையில் கிடைக்க, அதையே அவள், அவனுக்குப் பரிசாக கொடுத்த அந்தக் கணத்தில்... அவனுடைய இதயம், அவளிடம் முழுமையாகத் தொலைகிறது. பேனாவில் ஊற்றிய மை... 'துளசி... துளசி... துளசி...' என எழுதியே தீர்கிறது தினமும். ஒருநாள், துளசியிடம் காதலை வெளிப்படையாகச் சொன்னபோது, அவளும் ஏற்றுக் கொண்டாள்.
காதல் பற்றிய புரிதலோ... வாழ்க்கையைப் பற்றிய தெளிவோ இல்லாத பதினாறு வயது காதல் அவர்களைப் படுத்தியபாடு... அப்பப்பா! டாக்டர் கனவை மறந்து காதலால் கசிந்துருகி நின்றான். காதல் தவிர உலகில் எதுவும் முக்கியமில்லை என்ற முடிவில் பள்ளியை மறந்து... வயல், வரப்பு தோப்புகளில் சுற்றித் திரிந்தனர். ப்ளஸ் டூ தேர்வு முடிவு... ஊரே அவனைத் திட்டி தீர்க்க வைத்தது. ஆம், பத்தாம் வகுப்பில் அத்தனை மதிப்பெண்கள் பெற்றவன், ப்ளஸ் டூ-வில் தேர்ச்சிகூட பெறவில்லை.
ஊரார் கேலிக்கு அஞ்சி, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஊரை விட்டே ஓடிப்போனார்கள். கஞ்சி குடிக்க வழியில்லாமல் நண்பனின் உறவினர் வீட்டில் ஒண்டிப் பிழைக்கும்போது, துளசி கர்ப்பமானாள். அதுவரை காதல் மயக்கத்தில் இருந்தவனை வாழ்க்கை பற்றிய பயம் விரட்டியது. காதல் மனைவியை காப்பாற்றுவதற்காக கிளீனர் வேலையில் சேர்ந்துவிட்டான். அறியாத வயதில் செய்த விடலைக் காதல், டாக்டராக வேண்டியவனை கிளீனர் ஆக்கிவிட்டது.
இதற்கு சுரேஷ், துளசி மட்டுமா காரணம்... பெற்றோர்க்கும் பங்கு இருக்கிறதுதானே?
இன்றைக்கு எத்தனை பெற்றோர், குழந்தைகளுடன் சிநேகம் பாராட்டுகிறார்கள்? காலையில் எழுந்ததும் 'குட் மார்னிங்' ஒரு தரம்... ராத்திரி தூங்கும்போது 'குட் நைட்' ஒரு தரம்... என பிள்ளைகளுடன் பேசுவதே சுருங்கிவிட்ட காலமல்லவா இது! தாங்கள் கடந்து வந்த பாதையை குழந்தை களிடமும்... குழந்தைகள், தாங்கள் கடக்கிற பயணங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்வது, எத்தனை குடும்பத்தில் நடக்கிறது?
இங்கே பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணமாக... இவரைப் பற்றி சொல்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த மனிதர் எனக்குச் சொன்ன பாடங்கள்... என் வாழ்வில் பல தடவை காதல் வந்து போன பிறகும், என்னைச் சரியான பாதையில் பயணிக்க வைத்து, இந்த அளவுக்கு வளர்த்தெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திருந்தாலும்... ஒரு கட்டத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர் அவர். ஒரு நாள் பசி வயிற்றைப் பிடுங்க... கஞ்சிப் பானையைத் திறந்து பார்க் கிறார். அதில் பெருச்சாளி துள்ளிக் கொண்டிருக்கிறது. பசியோ வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கிறது. சட்டென்று பெருச்சாளியின் வாலைப் பிடித்து தூக்கி எறிந்தவர்... கட கடவென கஞ்சியைக் குடித் திருக்கிறார். வாழ்க்கையில் தான், கடந்து வந்த வலியான பாதைகளை எனக்குச் சொல்லி தந்த அந்த மனிதர் வேறு யாருமல்ல... என் அப்பா நல்லுச்சாமி.
பெற்றோர்கள் குடும்ப கௌரவம், அந்தஸ்து என்றெல்லாம் போட்டு வைத்திருக்கும் மாயவலைகளில் இருந்து முதலில் வெளியேற வேண்டும். எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல், நிஜமான நண்பனாகவே பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். உள்ளுக்குள் உங்களின் கௌரவம் லேசாக ஒட்டிக் கொண்டிருந்தாலும், அது எதிர்விளைவையே ஏற்படுத்தும். முழுக்க முழுக்க ஒரு நண்பனாக... தோழியாக... பேசிப் பாருங்கள்... பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாருங்கள்... நிச்சயமாக மாற்றம் நடக்கும்.
- இயக்குநர் சுசீந்திரன்.