கடன் வாங்கி வீட்டைக் கட்டி முடித்திருந்தாள் என் தோழி.
வீட்டுக்கு வந்த உறவினர்கள், நண்பர்களில் சிலர், வாஸ்து சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள் போல... ''வாசலுக்கு முன்னாடி கிரில் கேட் போடக் கூடாது. உள்ளே நுழையும்போது தலைக்கு மேல் லாஃப்ட் வருவது போல கட்டக் கூடாது. கதவை இடதுபுறம் தள்ளுவது போல அமைக்கக் கூடாது'' என்றெல்லாம் சொல்ல... தோழி, கடுமையான பீதிக்கு உள்ளானாள்.
அதைக் கேட்டதிலிருந்து, அவளுடைய முகமே சரியில்லை. இதைக் கவனித்த தோழியின் கணவர், வந்தவர்கள் எல்லாம் சென்றபிறகு, ''தாலி கட்டியபின் குலம், கோத்திரம் பார்க்கக் கூடாது. கட்டிய வீட்டுக்கு வாஸ்து பார்க்கக் கூடாது'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதுடன், 'நல்ல மனம் இருந்தால், எந்த தீய சக்தியும் நம்மை நெருங்காது' என்று தோழிக்குப் புரியவைத்தார்.
'உறவுகள்... நட்புகள்...' என்று சொல்லிக் கொள்பவர்களே... எப்போதுதான் போக்கை மாற்றிக் கொள்வீர்களோ!