ஒரு ஆலமரத்தின் கதையைப் பார்ப்போம்.
குரு ஒருவர், ஒரு நாள் தன் சீடர்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப் பற்றிய பாடத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், ''குருவே, கடவுளைக் காண முடியுமா?'' என்று கேட்டான்.
''ஏன் முடியாது? சுலபமாகக் காணலாமே!'' என்றார் குரு.
''அப்படியானால், உங்களால் எனக்குக் கடவுளைக் காட்ட முடியுமா?'' என்று மீண்டும் கேட்டான் மாணவன்.
''காட்டுகிறேன். நீ சென்று அந்த ஆலமரத்திலிருந்து ஒரு நல்ல பழத்தை எடுத்துக்கொண்டு வா. ஒரு கத்தியும் எடுத்து வா!'' என்றார் குரு.
மாணவனும் எடுத்து வந்தான். அந்தப் பழத்தைக் காட்டி, ''இது என்ன?'' என்று கேட்டார் குரு.
''ஆலம்பழம்'' என்றான் மாணவன்.
''இதை இரண்டாக வெட்டு!'' என்றார் குரு. மாணவனும் பழத்தை இரண்டாக வெட்டினான். ''இதனுள்ளே என்ன தெரிகிறது?''
''ஒரு சிறிய விதை!''
''இந்த விதையை இரண்டாக வெட்டு! வெட்டினாயா? இப்போது என்ன தெரிகிறது?'' என்று கேட்டார் குரு.
''ஒன்றும் தெரியவில்லையே!'' என்றான் மாணவன்.
''நன்றாக உற்றுப் பார். ஓர் ஆலமரமே தெரியும்!'' என்றார் குரு.
விருட்சத்துக்குள் விதைகளாகவும், விதைக்குள் விருட்சமாகவும் இறைவன் எங்கும் வியாபித்திருப்பதை அந்த மாணவன் புரிந்துகொண்டான்.