Sunday, July 21, 2013

கடன் அட்டையில்,(Credit Card) உள்ள பிரச்னைகள்

கடன் அட்டையில்,(Credit Card) உள்ள பிரச்னைகள் என்ன, எவ்வாறு விழிப்போடு இருக்கவேண்டும்.

என்னென்ன பிரச்னை?

கடன் அட்டை சம்பந்தப்பட்ட பொதுவான பிரச்னைகளைப் பட்டியலிடுவோம்.

1. சேர்க்கைக் கட்டணம் (Membership fee), ஆண்டுக் கட்டணம்(Annual fee) ஆகியவை விலக்கு அளிக்கப்பட்டதாக தவறாகப் புரிந்துகொள்ளுதல்.

2. காலதாமதக் கட்டணம் (Late payment fee) நிதிக் கட்டணம் (Finance charge) ஆகியவற்றை தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது.

3. முன்னறிவிப்பின்றி கடன் அட்டையை அப்கிரேடு செய்வது.

4. உங்களுக்குத் தெரியாமலேயே கடன் அட்டை உங்கள் பேரில் வழங்குவது.

5. தொலைபேசி மூலம் கடன் அட்டையின் தொகையை தவணை மூலம் (Dial an EMI) கேட்டு அதனை வழங்காமல் இருப்பது அல்லது தவணை மூலம் கிடைத்ததாக தவறாகப் புரிந்துகொண்டிருப்பது.

6. தொலைபேசி மூலம் வங்கியானது உங்களை தொடர்புகொண்டு (Cash-on-call), கடன் வழங்குவது.

7. பணம் செலுத்தத் தவறினால் வங்கிகள் வசூலிக்கும் முறையில் குறைபாடு இருப்பது.

8. கடன் தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரும், உங்கள் பெயரை சிபில் எனும் அமைப்பிற்கு வங்கியானது பரிந்துரைப்பது.


நீங்கள் செய்யவேண்டியவை!

1. கடன் அட்டை வெளியிடுதல், பயன் படுத்துதல் தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகளைப் பற்றி தெரிந்து, புரிந்து கொள்ளுங்கள்.

2. சேர்க்கைக் கட்டணம், ஆண்டு கட்டணம், பணம் எடுத்தலுக்கான கட்டணம், வட்டி, நிதிக் கட்டணம், காலதாமதக் கட்டணம், சேவைக் கட்டணம், வரி போன்றவற்றை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

3. பில் தேதி, பணம் செலுத்த கடைசி நாள், இலவசக் கடன் காலம், அதைக் கணக்கிடும் முறை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

4. அட்டையைப் பயன்படுத்துவதில், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்ற இயலாதபோது விளையும் நிதிப் பாதிப்புகளையும் பொறுப்புகளையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தவறினால் பாதிக்கப்படுவது நீங்கள்தான். செலுத்தவேண்டிய கட்டணங்களைக் குறிப்பிட்ட காலத்தில் கட்டத் தவறினால் அல்லது செலுத்தவேண்டிய தொகை முழுவதுமாகச் செலுத்தப்படாவிட்டால், இலவசக் கடன் காலம் பொருந்தாதிருக்கும்போது செலுத்தவேண்டிய தொகை குறிப்பிட்ட தேதியில் செலுத்தப்படாவிட்டால், காப்பீடு இழப்பு நேரிடும்போது, தனிநபர் அடையாள எண் உள்ளிட்ட அந்தரங்கத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும்போது, அதற்கான விதிமுறைகளையும், நிபந்தனைகளையும்பின்பற்றவேண்டும்.

5. கடன் அட்டை தொலைந்துபோனால், திருடப்பட்டால், ஒப்புதல் அளிக்கப்படாத பயன்பாடு போன்ற சந்தர்ப்பங்களில் விளையும் பாதிப்புகள் பொறுப்புகள் பற்றி தெரிந்து, புரிந்துகொள்ளுங்கள்.

6. உங்களுக்குத் தேவையான, உங்களுக்குக் கட்டுப்படியாகும் அட்டை வகையைத் தேர்ந்தெடுங்கள். தேவையில்லாமல் கடன் அட்டையைப் பெற்றுக்கொண்டு சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

7. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் தங்களிடமிருந்து கடன் பெற்றவர்களின் கடன் பற்றிய தகவல்களையும் விவரங்களையும் 'சிபில்' (CIBIL) எனும் அமைப்புக்கு அளிக்கின்றன. உங்களின் கடன் திருப்பிச் செலுத்துதலில் முரண்பாடுகள் இருப்பின் சிபில் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனால் வருங்காலத்தில் உங்களின் கடன் பெறும் வாய்ப்பு பாதிப்படையும்.

கவனிக்க!

1. கடன் வழங்குவது பற்றிய கோரிக்கைகள் மற்றும் கடன் அல்லது கடன் அட்டையில் தரவேண்டிய கடன் நிலுவைகளை ஃபைசல் செய்வது வங்கி குறைதீர்ப்பாளர் திட்டத்திற்கு அப்பாற்பட்டது.

2. ஆண்டு கட்டணம் தவறாமல் வருடந்தோறும் கட்டவேண்டும்.

3. முழுமையான பில் தொகையை முடிந்தவரையில் கட்டிவிடுங்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் கட்டத் தவறினால் அந்தத் தொகைக்கு வட்டி கட்டவேண்டியிருக்கும். அவ்வட்டி விகிதமானது மிகவும் அதிகம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

4. உங்களுடைய தனிநபர் அடையாள எண்ணை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

5. கடன் அட்டையைப் பயன்படுத்தி, ஏ.டி.எம்-லிருந்து பணம் எடுத்தால், அதற்கும் கட்டணம் உண்டு என்பதை மறக்காதீர்கள்.