சில நாட்களுக்கு முன்பு, நண்பனின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவன் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருமே அங்கே கூடியிருந்தார்கள். 'பூவா தலையா போட்டுப் பார்க்கலாம்' என்று கூறிக்கொண்டிருந்தார் நண்பனின் அப்பா. 'கோயிலுக்குப் போய் அம்மனிடத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கலாம்' என்றார் நண்பனின் அம்மா. 'அதெல்லாம் வேணாம்; நான் ரெண்டு விரல்களை நீட்டுறேன். நீங்க எதைத் தொடறீங்கன்னு பார்த்து, அதன்படி முடிவெடுக்கலாம்' என்று ஆலோசனை கூறினாள் நண்பனின் தங்கை.
நண்பன்தான் எல்லோரையும் அடக்கினான். 'இப்படி ஆளாளுக்குப் பேசினால் எனக்குத் தலையும் புரியாது; காலும் புரியாது!'' என்றான். எனக்கும்தான்!
சற்றே ஆசுவாசமான பிறகு, என்னிடம் அந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டான் நண்பன்.
அவன் தனியார் நிறுவனம் ஒன்றில் நான்கு வருட காலமாக வேலை பார்க்கிறான். சென்னையில் வேலை. கணிசமான சம்பளம். மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஆனால், அவன் அந்த வேலையை பிடித்துச் செய்கிறான் என்று சொல்லமுடியாது. 'அறிவுக்கு வேலையே இல்லாமல் இயந்திரம் மாதிரி வேலை செய்வதாக உணர்கிறேன்' என்று அடிக்கடி அவன் கூறுவதுண்டு.
இப்போது வேறொரு பிரபல நிறுவனத்திடமிருந்து அவனுக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்போது வாங்குவதைவிட இரு மடங்கு சம்பளம். சவாலான வேலை. பிரச்னை என்னவென்றால்... அந்தப் பிரபல நிறுவனத்தில் சேர்ந்த பலரையும் 'புரொபேஷன்' முடிந்தவுடன் வெளியேற்றி வருகிறது அந்த நிறுவனம். 'எங்களுக்கு முழுத் திருப்தி தரும் வகையில் வேலை செய்தால்தான் பணியை நிரந்தரமாக்குவோம்' என்று அந்த நிர்வாகம் உறுதியாகக் கூறி வருகிறது.
நண்பனைப் பொறுத்தவரை, இந்தப் புதிய வேலையை தேர்வு செய்தால், தற்போதைய உற்சாகமற்ற வேலையைவிட சுவாரஸ்யமான வேலைதான். ஆனால், இது நிரந்தரமானது என்ற நிச்சயமாகச் சொல்லமுடியாது. அதனால், இதில் என்ன முடிவெடுப்பது என்று நண்பனுக்குப் பெரும் குழப்பம்.
நானும் கொஞ்சம் யோசித்தேன். 'மகாபாரதத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்குத் தீர்வு தரும்னு தோணுது'' என்றேன்.
'தீர்வெல்லாம் அப்புறமா சொல்லலாம். முதல்ல அந்த மகாபாரத சம்பவத்தைச் சொல்லுங்க'' என்று கேட்டாள் நண்பனின் தங்கை. எல்லோருமே ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினர்!
கௌரவர்களுக்கு கவலை நிறைந்த காலகட்டம் அது. பாண்டவர்களையும் தருமரின் ஆட்சியையும் கொண்டாடத் துவங்கியிருந் தார்கள் மக்கள். இப்படியே போனால் கௌரவர்கள் புகழ் இழந்துவிடுவார்கள் என்று துரியோதனனுக்கு பயம் ஏற்பட்டது.
அப்போது வாரணாவத நகரத்தில் சிவபெருமானுக்கு ஒரு பெரும் திருவிழா நடக்க இருந்தது. அதற்குச் செல்ல விரும்பினார்கள் பாண்டவர்கள். இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதி அவர்களை அழிக்கத் திட்டமிட்டான் துரியோதனன்.
புரோசனன் என்ற தன் மந்திரியை அழைத்தான். 'பாண்டவர்கள் தங்குவதற்காக நீ ஒரு மாளிகையை அங்கு எழுப்பு'' என்றான். மந்திரி வியப்புடன் பார்க்க, தன் சதித் திட்டத்தை விளக்கினான் துரியோதனன். அந்த மாளிகை அரக்கு கொண்டு கட்டப்பட வேண்டும். அந்த அரக்கு மாளிகையில் ஆங்காங்கே மெழுகு, குங்கிலியம் போன்ற பொருட்களும் பூசப்பட வேண்டும். அதாவது, சிறிய தீப்பொறியிலேயே அந்த மாளிகை முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிடவேண்டும் என்பதுதான் துரியோதனனின் எண்ணம். அப்படிச் செய்தால்தானே அங்கே தங்கும் பாண்டவர்கள் தீக்கிரையாக முடியும்?
திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட புரோசனன், முன்னதாகவே வாரணாவதம் சென்று, அரக்கு மாளிகையை விரைவிலேயே கட்டி முடித்தான். விதுரருக்கு மட்டும் இந்தச் சதி தெரிய வந்தது. அதை வெளிப்படையாகக் கூறினால் பாண்டவர்களுக்கும், கௌரவர் களுக்கும் இடையே சண்டை வந்துவிடும்; அதேநேரம், மௌனமாக இருந்தால் பாண்டவர்கள் இந்தச் சதியில் சிக்கி இறந்துவிடக்கூடும் என்று எண்ணிய விதுரருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
அதனால், வாரணாவதம் புறப்பட்ட தருமரை தனியே அழைத்து சில வாக்கியங்களைக் கூறினார்.
'எதிரியின் உள்ளத்தை அறிந்துகொண்டால்தான் ஆபத்தைத் தாண்ட முடியும். நெருப்பானது காட்டையும் அழிக்கும்; குளிரையும் போக்கும். ஆக, நெருப்பு என்பது நல்லது- கெட்டது இரண்டுக்கும் பயன்படும். அது எதற்குப் பயன்படுகிறது என்பதைத் தீர்மானிப்பது நாம்தான். நெருப்பு, காட்டை எரித்தாலும்கூட, அங்கு வளைக்குள் வசிக்கும் எலியைத் தீண்டுவதில்லை. முள்ளம்பன்றி சுரங்கத் தில் புகுந்துகொண்டு தீயிலிருந்து தப்பித்துவிடும். நடந்து செல்பவன் நட்சத்திரங்களைக் கொண்டு திசைகளை அறிகிறான்'' என்று பூடகமாகக் கூறினார்.
இதன்மூலம், நடக்க இருப்பதை மட்டுமல்ல, அப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தருமருக்கு மறைமுகமாக உணர்த்திவிட்டார் விதுரர்.
தருமரும் அதைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார். மாளிகைக்குள் நுழைந்தவுடனேயே அரக்கு, மெழுகு போன்றவற்றின் வாசம் புலப்பட்டது. அந்த மாளிகைக்குள் ரகசிய மாக சுரங்கப் பாதை ஒன்றை வெட்டச் செய்தார் தருமர். சில நாட்கள் கடந்தபின், அந்த மாளிகைக்கு புரோசனன் தீ வைத்த போது எச்சரிக்கையோடு விழித்திருந்த பாண்டவர்களும் குந்திதேவியும் சுரங்கம் வழியாகத் தப்பித்தனர்.
'அப்புறம் என்ன நடந்தது?'' - ஆர்வமாகக் கேட்டாள் நண்பனின் தங்கை.
செல்லமாக அவள் தலையில் குட்டினேன். 'மகாபாரதக் கதையை இப்போது நான் சொல்லி முடிக்கமுடியுமா? எதற்காக இந்தக் கதைப் பகுதியைச் சொன்னேன் என்பதுதான் இப்போது முக்கியம். விதுரர் கூறியதிலிருந்து உண்மையைப் புரிந்துகொண்ட தருமன் தன் பயணத்தையே நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அதேநேரம், அரக்கு மாளிகையில் அவர் சும்மாவும் இல்லை; சுரங்கத்தை ஏற்படுத்தினார்.
இப்படித்தான், தேவைப்படும்போது 'ரிஸ்க்' எடுக்கத் தயங்கக் கூடாது; அதேநேரம், அந்தச் செயலில் எதிர்பாராத விளைவு ஏற்பட்டால், அடுத்து என்ன செய்வது என்பதையும் யோசித்து எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இதை Being ready with Plan B என்பார்கள். அதாவது, மாற்றுத் திட்டமும் கைவசம் இருக்க வேண்டும்'' என்றேன்.
'சரி, இதிலிருந்து எனக்கு நீ என்ன சொல்ல வருகிறாய்?'' என்றான் நண்பன்.
நண்பனைவிட அவன் அப்பாவுக்குக் கற்பூர மூளை. 'இன்னுமா தெரியலே? புது நிறுவனத்தில் சேரச் சொல்கிறான். ஒருவேளை, அவர்கள் உன் வேலையை நிரந்தரமாக்கலேன்னா என்ன செய்யலாம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ளச் சொல்கிறான்'' என்றார்.
புதிய நிறுவனத்தில் நண்பன் சேர்ந்தான். தனது முழுத் திறமையைப் பயன்படுத்தி உற்சாகமாக (பணிநீக்கம் செய்தாலும் ப்ளான்- பி இருக்கிறதே!) தன் பணியைச் செய்தான். அங்கு அவன் பணி நிரந்தரமான தும், வெகு சீக்கிரமே மேலும் பல பதவி உயர்வுகளை அங்கு பெற்றதும் தனிக் கதை!