பிரார்த்தனைகளுடன் கோயிலுக்குச் சென்றிருந்தோம். அர்ச்சனைக்கு நாங்கள் வாங்கிச் சென்றிருந்த தேங்காய் அழுகலாக இருக்க, அதிர்ந்துவிட்டோம். கற்பூரம் காட்டியபோது அது அணைந்துவிட, அழுகை வராத குறைதான். ஆனால் அர்ச்சகரோ எங்கள் அச்சம் நீக்கும்விதமாக, ''அம்மா! இதெல்லாம் எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளே. மனதில் குழப்பம் வேண்டாம்!'' என்று ஆற்றுப்படுத்தியதுடன், வேறு தேங்காய் வாங்கி வரச்சொல்லி அர்ச்சனை செய்து, பெரிய தீபத் தட்டில் கண் நிறைய கற்பூரம் காட்டி, கையில் பிரசாதமும், மனதில் நிம்மதியும் தந்து அனுப்பி வைத்தார். ஆனாலும் மனதுக்குள் ஒரு நெருடல் இருக்க, குடும்ப ஜோசியரிடம் சென்று நடந்ததைச் சொன்னோம். அவரும் சிரித்துக் கொண்டே, ''தற்செயலாக நடப்பவற்றுக்கு மனதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. கடவுள் தீயவர் அல்ல. எப்போதும் நமக்கு பாதுகாப்பாகவே இருப்பார். இதற்கு மேலும் தெளியவில்லை என்றால் சொல்... ஆயிரம், பத்தாயிரம் ரூபாய்க்குப் பரிகாரம் என்று சொல்லி பணம் பறிக்கிறேன். சரியா?!'' என்றார்.
நல்ல மனிதர்களின் வாக்கே தெய்வம் தரும் நிம்மதி என்று அமைதி ஆனேன்!