Sunday, September 9, 2012

எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது

அதிக நேரம் வேலை பார்ப்பவர்களைவிட ஸ்மார்ட்-ஆக வேலை செய்கிறவர்கள்தான் சிறந்தவர்கள். வேலை தேடும்போதும் அதிகம் கஷ்டப்படாமல் எளிதாக வேலை பெற தயாராவதே ஸ்மார்ட் வழி. இதற்கு நாம் என்ன செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது.

''இன்றைய இளைஞர்கள் அத்தனை பேரும் எளிதில் வேலை கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆசை மட்டும் இருந்தால் போதாது; அதற்கான பயிற்சிகளை எடுத்து தயாராக இருக்கவேண்டும். இதில் முக்கியமான விஷயம், சுயபரிசோதனை. தங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை கல்லூரியில் படிக்கும்போதே ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். நாம் எந்த துறையில் வேலைக்குப் போகப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அது சார்ந்த தகவல் திரட்டுவது புத்திசாலித்தனம். அந்த துறையில் எத்தனை உட்பிரிவுகள் இருக்கின்றன, அதில் உங்களின் விருப்பம் என்ன? அந்த துறையின் தற்போதைய வளர்ச்சி, அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து, அதற்கேற்ப முடிவு செய்து வைத்திருந்தால், படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதில் எந்த பெரிய சிக்கலும் இருக்காது.

ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் ரெஸ்யூமே மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். உங்களின் விருப்பம் என்ன, லட்சியங்கள் என்ன, இதுவரை நீங்கள் சாதித்தது என்ன என்பது போன்ற தகவல்களை சுருக்கமாகச் சொல்லலாம்.

இன்று, பெரும்பாலான நிறுவனங்கள் நேர்முகத் தேர்வுக்கு முன் பலவிதமான டெஸ்ட்களை வைக்கின்றன. அதில், முக்கியமான டெஸ்ட், குரூப் டிஸ்கஷன். இது உங்களைத் தேர்வு செய்வதற்கு அல்ல. திறமையற்றவர்களை வடிகட்டுவதற்குதான். இதில் கொடுக்கும் தலைப்புகள் அத்தனையும் மார்க்கெட் சார்ந்ததாக இருக்கும். உங்களின் கருத்துகளை எப்படி ஆரம்பித்து, எப்படி முடிக்கிறீர்கள் என்பதைத் திட்டமிட்டு பேசவேண்டும். அதோடு இதில் உங்களின் மொழித் திறன், உடல் மொழி ஆகியவற்றைக் கவனிப்பார்கள். குழுவாகச் செயல்படும்போது மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கிறீர்கள் என்பதையும் கவனிப்பார்கள். தெரியாத விஷயங்களைப் பேசாமல் இருப்பது புத்திசாலிகளுக்கு அழகு.  

ரிட்டர்ன் டெஸ்ட், பிஸியோமெட்ரிக் டெஸ்ட், ஸ்கிரினிங் டெஸ்ட் ஆகிய டெஸ்ட்கள் இருக்கும்.  இதற்கடுத்ததுதான் நேர்முகத் தேர்வு. நேர்முகத் தேர்வில் உங்களின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தனித்தனியாக மதிப்பெண் அளிப்பார்கள். நிறுவனம் சொல்லும் நேரத்திற்கு முன்பாக வந்துவிட வேண்டும். டிரெஸ் கோட் கட்டாயம் கவனிக்கப்படும். தேர்வுக்கு வரும்போது உணர்ச்சிவசப்படாமல், ரிலாக்ஸாக இருப்பது முக்கியம்.  

கேட்கப்படும் கேள்விகளை உன்னிப்பாக கவனித்துப் பதில் சொன்னால்தான் தேர்வு சிறப்பாக இருக்கும். தெரியாத கேள்விகளுக்குத் தெரியவில்லை என்று உண்மையைச் சொல்லுங்கள். ஏதோ ஒரு பதிலைச் சொல்லி சமாளிக்க நினைத்து, கடைசியில் அது நமக்கே நெகட்டிவ்-ஆக போகவும் வாய்ப்புண்டு. நேர்முகத் தேர்வில் எக்காரணத்தைக்கொண்டும் எரிச்சல் அடையக்கூடாது. உங்களுக்குக் கட்டாயமாக வேலை தேவை என்று கெஞ்சவும் கூடாது. அப்படி செய்தால் உங்கள் சம்பளத்தைக் குறைக்கவே நிறுவனங்கள் யோசிக்கும்.

நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது உங்களின் புகைப்படம், தேவையான சான்றிதழ்களை மட்டும் வைத்திருந்தால் போதும். ரெஸ்யூமே மட்டும் கூடுதலாக எடுத்துக்கொண்டு போகலாம். நேர்முகத் தேர்வின்போது, நிறுவனத்திடமிருந்து நீங்கள் ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டுமா? என்று கேட்பார்கள். அந்த சமயத்தில் உங்களின் சம்பளம், டிராவல் எக்ஸ்பென்ஸ் பற்றி எல்லாம் பேசக்கூடாது. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தில் உங்கள் வளர்ச்சி எப்படி இருக்கும், உங்கள் துறையைத் தவிர்த்து வேறு எதில் எல்லாம் நீங்கள் பங்கு பெறலாம் என்பதைப் பற்றி பேசலாம். ஒருவேளை அவர்கள் உங்களிடம் என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால் மட்டும் நீங்கள் சொல்லலாம். அந்த நிறுவனத்தில் உங்கள் பதவிக்கு என்ன சம்பளம் தருவார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பு அந்த நிறுவனம் சார்ந்த அடிப்படை தகவல்களைத் தெரிந்துகொண்டு, அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதைத் தெரிந்துக்கொண்டாலே போதும், எளிதில் வேலை கிடைத்துவிடும்''

இனி என்ன, மேற்சொன்ன விஷயத்தில் எல்லாம் நீங்கள் தயாரா என்று பார்க்கத் தொடங்க வேண்டியதுதானே!