Monday, September 17, 2012

நடக்காத ஒன்றும் நடக்கும்


''என் கல்லூரித் தோழன் ராஜா. மருத்துவக் கல்லூரியில் நாங்கள் படித்தபோது நான் மனோதத்துவத்தில் கவனத்தைச் செலுத்தினேன். அவனோ இதயநோய் சிகிச்சை தொடர்பான படிப்பைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தான். 35 வருடங்களுக்குப் பிறகும் எங்கள் நட்பு தொடர்கிறது.

ஒரு நாள் இரவு 8 மணி அளவில் நண்பன் ராஜாவின் மனைவி எனக்கு போன் செய்து, 'அண்ணா... கொஞ்சம் அவசரமாக கிளினிக்குக்கு வர முடியுமா? ப்ளீஸ்...' என்றார் அழாத குறையாக. 'நோயாளியைப் பார்த்துக்கிட்டிருக்கேன். அரை மணி நேரத்தில் வரேன்மா...' என்றதும், ராஜாவின் மகள் போனை வாங்கி, 'அங்கிள் ரொம்ப அவசரம்... உடனே வாங்க' என்று பதறினாள்.
என்னவாக இருக்கும் என்ற குழப்பத்துடன் நண்பனின் கிளினிக்குக்குச் சென்றேன். வாசலிலேயே பொதுமக்களும் காவலர்களும் குவிந்திருந்தனர். கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே சென்றேன். அங்கே தலையில் கை வைத்தபடி, என் நண்பன் ராஜா பரிதாபமாக உட்கார்ந்திருந்தான். அங்கிருந்த பெண்களில் ஒருவர், 'என் மகளை ஆசை காட்டி மோசம் செய்துட்டாரு இந்த டாக்டர். இதுக்கு நியாயம் கிடைக்காமல் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம்' என்றார் ஆவேசமாக. காவலர்களோ, 'இவங்க புகார் கொடுத்ததால் விசாரிக்க வந்திருக்கோம்' என்றனர்.

அழுதபடி நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும். கணவனை இழந்தவர். அந்தப் பெண்ணிடம் நான் பேச ஆரம்பித்ததும், 'இந்த கிளினிக்குல ரெண்டு வருஷமா வேலை செய்யறேன். டாக்டரும் நானும் பழக்கமா இருந்தோம். என்னோடு டாக்டருக்கு எல்லா உறவும் உண்டு. கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உறுதி கொடுத்திருந்தார். இப்ப திடீர்னு என்னை வேலையைவிட்டுப் போக சொல்றாரு' என்று சொல்லிவிட்டு அழுகையை தொடர ஆரம்பித்தார். அந்தப் பெண்ணைப் பார்த்தால், பொய் பேசுபவராகத் தெரியவில்லை.

தனியாக அழைத்துக்கொண்டுபோய் நண்பன் ராஜாவிடம் பேசினேன். 'அந்த மாதிரியான தப்பான எண்ணம் எனக்கு எப்பவுமே இருந்ததில்லைடா. கிட்டத்தட்ட இந்தப் பெண்ணுக்கு என் மகள் வயசு. நான் போய் இப்படி ஒரு ஈனத்தனமான காரியத்தை செய்வேனா?' என்றான் பதற்றத்துடன். இருவரையுமே நம்பாமல் இருக்க முடியவில்லை. அப்போதைக்கு சமாதானம் செய்து எல்லோ ரையும் அனுப்பிவிட்டு, விசாரணையைத் தொடர்ந்தார்கள் போலீஸார். ஆனால், பிரச்னை தீர்ந்தபாடில்லை.

ஒரு கட்டத்தில், அந்தக் காலத்தில் கடைப்பிடித்துவந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு போலீஸார் இருவரையும் உட்படுத்தினார்கள். இச்சோதனைக்கு உட்படுபவர்களின் இதயத்துடிப்பு, பயம், உணர்வுகள் ஒரே சீராக இல்லாமல் போனால், அவர் பொய் சொல்கிறார் என்பது தெரிந்துவிடும். இந்தச் சோதனையின்போது நண்பன் ராஜாவும் சரி, ராஜாவுக்கு எதிராகப் புகார் கொடுத்த பெண்ணும் சரி... இருவருமே உண்மையைத்தான் சொல்கிறார்கள் என்று தெரியவந்தது. தன்னை ஆசைகாட்டி ராஜா மோசம் செய்ததாக அந்தப் பெண் சொன்னதும் உண்மை. அப்படிச் செய்யவில்லை என்று நண்பன் ராஜா சொல்வதும் உண்மை. எப்படி முரணான இந்த இரண்டு விஷயங்களுமே உண்மையாக இருக்க முடியும் என்று அனைவரும் திகைத்தனர்.
அதனால், மருத்துவரீதியாக இருவருக்கும் பல்வேறு பரிசோதனைகளைச் செய்தோம். இறுதியில், அந்தப் பெண் 'க்ளெரம்பால்ட்ஸ் சின்ட்ரோம்' (Clerambault syndrome) என்ற மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு மன மாயை. ஏதேனும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைக் கற்பனையாக மனதில் நிறுத்திக்கொண்டு அந்த எண்ணங்களுடனே வாழ்வை ரசிக்கத் தொடங்கிவிடும் நிலை இது. 

இந்த மனப் பாதிப்பு பெரிய நிறுவனத்தில் கீழ்மட்டத்தில் பணிபுரியும் சாதாரண ஊழியருக்கும் அந்த நிறுவனத்தின் முதலாளி அல்லது உயர் அதிகாரிக்கும் இடையேதான் பெரும்பாலும் ஏற்படும். கடைநிலை ஊழியர் மனதளவில் உயர் அதிகாரியுடன் கற்பனை உலகில் சஞ்சரிப்பார். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், ஒரு குறிப்பிட்ட விஷயத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிலும் சாதாரண மனிதரைப்போலத்தான் இருப்பார்கள். ஆனாலும் கற்பனையான இந்தப் பொய்யே ஒருகட்டத்தில், அவர்களுக்கு நிஜமான உணர்வாக மனதின் ஆழத்தில் பதிந்துவிடும்.

பொதுவாக, ஆழ் மனதில் படிந்து கிடக்கும் நிறைவேறாத ஆசைகள், ஏக்கங்கள் போன்றவை அதற்கு வடிகால் தேடி அலைபாயும். இளம் விதவையான அந்தப் பெண்ணுக்கு கணவரின் இறப்பு தந்த அதிர்ச்சி, இனி, 'கணவன் - குடும்பம் என்ற சந்தோஷ வாழ்வே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டதே' என்கிற வேதனையைத் தந்திருக்கிறது. விளைவு.... இதுவரையிலும் தன் ஆழ்மனதுக்குள் தேக்கி வைத்திருந்த ஆசைகள், கனவுகள் இவற்றை எல்லாம் தன்னை ஈர்த்த அந்த டாக்டரின் மீது புகுத்தி, மனதளவில் அவரைக் கணவராகவே பாவித்து குடும்பம் நடத்த ஆரம்பித்து கற்பனையில் கர்ப்பமாகவும் ஆகிவிட்டார். இப்படியரு சூழ்நிலையில், 'இனி நீ வேலைக்கு வர வேண்டாம்' என்ற வார்த்தைகளால், பதறிப்போன அந்தப் பெண் 'இனி, நாளை முதல் தன் (கற்பனை) கணவரைப் பார்க்க முடியாமல் போய்விடுமே' என்று மனதளவில் குழம்பி இருக்கிறார். தன் மனக் கற்பனையைச் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி நியாயம் கேட்கவும் துணிந்துவிட்டார்.

மூன்று மாத தீவிர கவுன்சிலிங் அளித்த பிறகே அந்தப் பெண் தன் நிலை உணர்ந்து நிஜ உலகுக்கு வந்தார். இப்போது அந்தப் பெண்ணின் பெற்றோரும் என் நண்பரின் குடும்பமும் நிம்மதியாக இருக்கின்றனர்.''

 கட்டுரை ஆசிரியர்: டாக்டர் பத்ரு முகைதீன், மனநல நிபுணர் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி. வெளியீடு: டாக்டர் விகடன்.