இதோ... மழைக்காலமும் தொடங்கிவிட்டது. கொசுக்களுக்குக் கும்மாளம்தான். ஊசித் தூறலுக்கே ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெருமழை என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. நீர் தேங்கும் இடங்களில் எல்லாம் கொசுக்கள் கூடாரம் கட்டத் தொடங்கிவிடும். தூங்குபவர்களின் காதோரம் ரீங்காரத் தொல்லை தருவதில் ஆரம்பித்து, மலேரியா, டெங்கு என்று காய்ச்சல் பரப்புவது வரை கொசுக்களின் தொல்லை தாங்கமுடியாது.
கொசுத்தொல்லைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பல்வேறு விதமான கொசுவிரட்டிகளை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், இவற்றைப் பயன்படுத்துவதால் உடனடியாக இல்லாவிட்டாலும் நாள்பட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
'மேட், கொசுவத்திச் சுருள், ஸ்பிரே, ஆவியாகக்கூடிய திரவநிலை கொசுவிரட்டி மற்றும் உடம்பில் தடவிக்கொள்ளும் லோஷன் எனக் கொசுக்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள பல வழிகளைக் கையாள்கிறோம். கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தும்போது, பெரும்பாலும் புகை வடிவில் சுவாசம் வழியாக இந்த ரசாயனங்கள் நம் உடலுக்குள் சென்று மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளை உண்டாக் கலாம். அதனால், ஆஸ்துமா பாதிப்புக்குக்கூட ஆளாக நேரிடலாம். இதுதவிர, கண்களில் நீர் கோத்தல், எரிச்சல், தும்மல், தலைவலி, உடல் அரிப்பு, காது-மூக்கு-தொண்டை வலி போன்ற பிரச்னைகள் உடனேயோ அல்லது ஓரிரு நாட்களிலோ உண்டாகக்கூடும்.
கொசுவிரட்டிகள் எதுவானாலும் அவற்றில் டி.டி.டி., ஆர்கனோபாஸ்பரஸ், அரோமேட்டிக் மற்றும் அலிஃபேட்டிக் ஹைட்ரோகார்பன்ஸ், அலித்ரின் போன்ற ரசாயனங்கள் இருக்கின்றன. சரி... இவை எல்லாம் இருந்தால் என்ன?
நீண்ட காலமாகக் கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தினால் ஒரு சிலருக்கு நரம்புக்கோளாறு ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது. கொசுவிரட்டிகளில் உள்ள ரசாயனங்கள் நுரையீரல் மட்டுமின்றி, மூளை, கல்லீரலிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு வல்லமை படைத்தவை. அத்துடன், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களையும் இவை பாதிப்பதால், நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துவிடும். ஏற்கெனவே சுவாசப் பிரச்னை இருப்பவர்கள், குறிப்பாக பெரியவர்கள் - குழந்தைகளுக்கு எளிதாக இந்தப் பாதிப்புகள் ஏற்படும்.
இந்தக் கொசு விரட்டிகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்படுகிறதா என்று நீண்ட கால ஆய்வின் அடிப்படை யில் இதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால்தான் இவ்வளவு பிரச்னைகளும்', எந்தெந்த முறைகளில் கொசுக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும், கொசுக்கள் உருவாகாமல் தடுப்பதுதான். வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமலும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டிகளை நன்றாக மூடிவைக்க வேண்டும்.
மாலையிலேயே கதவு, ஜன்னல்களை நன்றாக அடைத்துவிட்டு, கொசுவை சாகடிக்கக் கூடிய எலெக்ட்ரிக் பேட் மூலம் ஒவ்வோர் அறையிலும் உள்ள கொசுக்களை ஒழிக்கலாம். குறிப்பாக, பெட்ரூமில் இப்படிச் செய்யலாம். ஜன்னல்களில் கொசு வலை பொருத்துவதன் மூலம் வெளியில் இருந்து வீட்டுக்குள் கொசுக்கள் வருவதைத் தடுக்க முடியும். படுக்கையில் கொசு வலை பயன்படுத்துவதன் மூலம் நிம்மதியாகத் தூங்கலாம். வேப்ப எண்ணெயை உடலில் தடவிக்கொண்டாலும் கொசுப் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். வேப்ப எண்ணெயின் வாசனை பலருக்கும் பிடிக்காது. அதனால், வேப்ப எண்ணெய் 5 சதவிகிதம், தேங்காய் எண்ணெய் 95 சதவிகிதம் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். 'கதவு, ஜன்னல்களை நன்றாக மூடிவைத்தால்தான் கொசுவிரட்டியில் இருந்து வரும் புகை அறையின் முழுவதும் பரவி, கொசுக்கள் செத்தொழியும்' என்று நினைக்கிறார்கள். கதவு, ஜன்னல்களைச் சாத்தி வைக்கும்போது புகை அறையைவிட்டு வெளியேறுவதற்கு வழி இருக்காது. மேலும், வெளியில் இருந்து வீசும் சுத்தமானக் காற்றும் அறையின் உள்ளே வருவதற்கான வாய்ப்பு இருக்காது. இதனால், அறைக்குள்ளே இருப்பவர்கள் கொசுவிரட்டி வெளியிடும் புகையை மட்டுமே சுவாசிக்க நேரிடும். இது மிகவும் ஆபத்தானது'.
கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளைக் காட்டிலும் கொசுவிரட்டிகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதை அறியும்போது கிராமப்புறங்களில் சொல்லப்படும் சொலவடை ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. 'தொலைந்தது அஞ்சு ரூபாய்... துப்பறிய ஐம்பது ரூபாய்!'