Sunday, September 16, 2012

வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்

உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்




பெங்களூருவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த உண்மைச் சம்பவம் இது.  இதன் நாயகன் பெயர் கிரிஷ் [பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது].  எங்கள் அலுவகத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட  கம்பியூட்டர்களுக்குத்  தேவையான மென்பொருள், வன்பொருள், இணைய இணைப்பு எல்லாம்  மேலாண்மை செய்து எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளிக்க வேண்டியது இவருடைய பொறுப்பு.  எனவே  கணினியைப் பற்றிய எல்லா விஷயமும் அத்துபடி.   இவருக்கு  ஷேர் மார்க்கெட்டிங்கில் ஈடுபாடு அதிகம்.  ஷேர் பரிமாற்றம், வங்கி கணக்கு பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் செய்வதால் இவருக்கு இணைய வழி பண பரிவர்த்தனைகளும்  அத்துபடி.

இந்த மாதிரி எல்லாம் நல்லா போய்கிட்டு இருந்த சமயத்தில இரண்டு வாரத்துக்கு முன்னாடி இவருக்கு ஒரு மெயில் வந்தது.  அதில், நாங்கள்  வருமான வரி அலுவலகத்தில [IT Department] இருந்து மெயில் அனுப்புகிறோம், நீங்கள் இந்த வருஷம் செலுத்திய வருமான வரியில் 3000 ரூபாய் உங்களுக்கு திரும்பத் தர வேண்டியிருக்கு, உங்க வங்கிக் கணக்கு அட்டையின் எண்ணை [Debit Card Number] எங்களுக்கு மெயிலில் அனுப்புங்க என்று அந்த மெயிலில் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த மெயில் அனுப்புனர் [Sender] முகவரியும் ஏதோ  incometaxdept.com  என்பது போல சந்தேகமே வராத வகையில் இருந்தது,  அதில் கொடுக்கப் பட்டிருந்த ஒரு லிங்கைச் சொடுக்கினால் நாம் வழக்கமாக இணையத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் [IT Returns filing site] தளத்திற்கே இட்டுச் சென்றது.  ஆனால், தகவலை அங்கே பதியச் சொல்லவில்லை, இந்த மெயிலுக்கு Reply யாக அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார்கள்.

இங்கதான்   நம்மாளுக்கு புத்தி லேசாகத் தடுமாறியது.  இரண்டு விஷயத்தில் கோட்டை விட்டார். முதலில் இவர் வருமான வரி அத்தனையும் TDS முறையில் அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது, இவருக்கு தேவையான வருமான வரி விலக்குகள் போக செலுத்த வேண்டிய வருமான வரியை ஏற்கனவே அலுவலகமே வருமான வரித் துறைக்கு அனுப்பிவிட்டிருந்தது.  தற்போது அவருக்கு வருமான வரித் துறையில் இருந்து எந்த பணமும் வரவேண்டிய வாய்ப்பே இல்லைஆனாலும் வருமான வரித் துறைக்காரன் எங்கோ கணக்குல தப்பு பண்ணியிருப்பான், வர்ற லக்ஷ்மியை வேண்டாம்னு சொல்லப்படாது என்று நண்பருக்கு மனதில் நப்பாசை வந்ததுவிட்டது.

அடுத்து முக்கியமான ஒரு விஷயத்தை அவர் கவனிக்கத் தவறினார். வருமான வரியை தாக்கல் செய்யும் படிவத்தில் நம்முடைய வங்கிக் கணக்கை கட்டாயம் தெரிவிக்க வேண்டும், அப்படியே அவர்கள் பணம் திரும்பத் தருவதாக இருந்தாலும், நேரிடையாக வங்கிக் கணக்கிற்க்கே அனுப்பி விடுவார்கள். இந்த விஷயமும் இவருக்கு பொறி தட்டவில்லை.
 
ஒருவேளை, பத்து மில்லியன் டாலரை உங்க பேர்ல எழுதி வச்சிட்டு சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு தத்தா செத்து போயிட்டாரு, அதை உங்களுக்கு அனுப்ப ஒரு ஆளை பணபெட்டியோட  விமானத்தில் அனுப்பனும், அவரோட வழிச் செலவுக்கு ஒரு மூணு லட்சம் ரூபாயை இந்த அக்கவுண்டுக்கு அனுப்புங்கன்னு மெயில் வந்திருந்தா, நம்மாளு  உஷாராயிருப்பாரு.  இங்க அப்படி எதுவும் வரவில்லை வெறும் மூவாயிரம் ரூபாய் தான், அதுவும் இந்திய வருமான வரித்துறையில் இருந்து, கேட்டது பணத்தை அல்ல வெறும் டெபிட் கார்டு எண்ணை மட்டும்தான்.  அதை வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்?!

இப்படி பல வழியிலும் புத்தி தடுமாறி தன்னுடைய Debit Card Number -ஐ மெயிலில் அனுப்பிவிட்டார்.  அப்புறம்தான் தலையில் இடி இறங்கியது. அடுத்த அரை மணி நேரத்தில் அவருடைய கணக்கில் இருந்து Rs. 50,000/- [ஐம்பதாயிரம் ரூபாய் தாங்க!!]  உருவப் பட்டிருந்தது.  உடனே அலறியடிச்சிகிட்டு நம்மாளு வங்கிக்கு தகவல் கொடுத்து தனது கணக்கை முடக்கச் சொன்னார்.   தலைமேல் துண்டை போட்டுக் கொண்டு புலம்பிக் கொண்டிருத்த ஆளை, எல்லோரும் ஆறுதல் சொல்லி சைபர் கிரைமுக்குத் தகவல் தெரிவித்து கம்பிளைன்ட் கொடுக்கச் சொன்னோம்.  அங்கே சென்ற பின்னர் தான் பணம் எப்படி உருவப் பட்டது என்ற திகைக்க வைக்கும் சங்கதி தெரிய வந்தது.


Hacker.gif
பணத்தை உருவியவர்கள் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பயன்படுத்திய சர்வர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ளது.  அதை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் இயக்கலாமாம். நண்பரிடமிருந்து தகவலைப் பெற்றவுடன் தங்களது மென்பொருட்களைப் பயன்படுத்தி  நண்பருடைய டெபிட் கார்டின் பின் நம்பர் என்ன [அது வெறும் நான்கு இலக்கம்தானே]   என்பதை நொடியில் கண்டுபிடித்த அவர்கள் பணத்தை உருவ ஆரம்பித்தார்கள்.  ஒவ்வொரு முறையும் ரூ. 3700/- வீதம்  அரை மணி நேரத்தில் ஐம்பதாயிரத்தை   எடுத்திருக்கிறார்கள்.    அதென்ன கணக்கு ரூ. 3700/-?   ஒரு முன்னணி செல்பேசி நிறுவனத்தின்  ரீ-சார்ஜ் வவுச்சரின் அதிக பட்சத் தொகையாம் அது.  அவர்கள் எடுத்த பணம் அத்தனையும் இந்த வவுச்சர்களாக மாற்றப் பட்டு, அவை மும்பையில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்கப் பட்டுவிட்டது.  கடைக்குள் சென்று விட்டால் எது திருடிய வவுச்சர், எது  நல்ல வவுச்சர் என்று தெரியாதாம்.  அவற்றை பலர் வாங்கி பேசியும் தீர்த்திருப்பார்களாம்.

சரி, தற்போது இழந்த பணத்துக்கு ஏதாவது வழியுண்டா?  அதைப் பிடிப்பது என்பது மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் வேலை.  மேலும் அதைச் செயல் படுத்தும் அளவுக்கு சாமானிய மக்களுக்கு 'பவர்' இல்லை. தற்போது நண்பர் இழந்திருப்பது மற்றவர்கள் இழந்ததைக் காட்டிலும் சிறிய தொகை. ஐந்து லட்சம், பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்றெல்லாம் கோட்டை விட்டவர்களும் நிறைய  இருக்கிறார்களாம்.  இதைக் கேட்ட நண்பர் ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்.

இதில் ஒரு முக்கியமான விஷயம்,   நண்பரின் அலுவலக இ-மெயில் முகவரி நைஜீரியாக் காரர்கள் கைக்கு எப்படிப் போனது?  வேறெப்படி?! கண்ட கண்ட தளங்களில் தொடர்புக்கு... என்று சொல்லும் இடங்களில் எல்லாம் முகவரியைக் கொடுத்ததால்தான். இ-மெயில் முகவரியை  கண்ட கண்ட பயல்களுக்குத் தராதீங்க.
 
எனவே, உங்க டெபிட் கார்டு நம்பரை யாருக்கும் கொடுக்காதீங்க, , உங்க ஆன்லைன் வங்கிக் கணக்கு பற்றி தகவல்  [முக்கியமா பாஸ் வேர்ட்] கேட்டு எந்த இ -மெயில் வந்தாலும் உடனே டெலீட் பண்ணிடுங்க, போனில் கேட்டாலும் சொல்லாதீங்க. ஏன்னா எந்த வங்கியும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை மெயிலிலோ, போனிலோ ஒருபோதும் கேட்பதில்லை.

இது குறித்த அப்டேட்: 15-09-2012 SBI  தனது வாடிக்கையாளர்களுக்கு SMS  மூலம் பின்வரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"உங்கள் SBI  வங்கிக் கணக்கை ஆன்லைனில் இயக்கும்போது உங்களுடைய SBI கார்டு குறித்த தகவல்களைக் கேட்டு பாப் அப் [Pop Up] செய்தி ஏதேனும் தோன்றினால் தங்கள் கணினி மால்வேரால் பாதிக்கப் பட்டிருக்கலாம், ஒருபோதும் அத்தகைய தகவல்களைப் பகிர வேண்டாம்"

Beware of Fake Popups: In OnlineSBI, if you get a popup seeking your card details, your device could be malware infected, NEVER provide such information.