Sunday, September 23, 2012

கரையும் காதல்

ஒரு சமூகம், காதலைக் குற்றமென்று சொன்னால், நாம் அதை விவாதிக்கலாம்; அதற்கு எதிராகப் போராடலாம். ஆனால், காதலே குற்றங்களின் களமாக மாறிவிட்ட ஒரு காலத்தில், அன்பு என்பது இன்று, நஞ்சு தடவிய ஒரு வாள் போல, நம் முன் பளபளத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வாள், எந்த நேரம் நம்மை பலிகொள்ளும் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு, நாளுக்கு நாள் ஆண், பெண் உறவுகள் வன்முறையின், குற்றத்தின் நிழல் படிந்ததாக மாறி வருகிறது.சில தினங்களுக்கு முன், சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ஒரு இளை ஞர், தான் காதலித்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் காதல் குற்றங்களை மறுபடியும் நினைவூட்டி விட்டது.கடந்த, 2011ல் மட்டும், சென்னையில், 168 ஆண் - பெண் உறவுகள் தொடர்பான கொலைகளும், 332 கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. தமிழகம் முழுக்க, இது தான் நிலை. அதேபோல, தமிழகத்தில், அதிகரித்து வரும் இளைஞர்களின் தற்கொலையில், ஆண் - பெண் உறவுகள் தொடர்பான விவகாரங்களே, முக்கிய பங்கு வகிக்கின்றன.

கொலைகள், தற்கொலைகள் மட்டுமல்ல, தனக்கு நெருக்கமாக இருந்து, பிரிந்து விட்டவர் மீது ஆசிட் வீசுவது, அவர்களின் புகைப்படங்களை, ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவது, அந்தரங்கமான காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டுவது என, இளைஞர்களிடையே விதவிதமான காதல் குற்றங்கள் கோலோச்சுகின்றன.பெரும்பாலான குற்றங்கள், திட்டமிட்டு செய்யப்படுபவை அல்ல. மாறாக, இந்த இளைஞர்கள், வாழ்க்கையைப் பற்றிய தவறான புரிதலுடன், கண நேர உணர்ச்சிக்கு ஆட்பட்டு, மற்றவர்களின் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்ல, தன்னைத் தானே அழித்துக்கொள்ளவும் செய்கின்றனர்.

நவீன வாழ்க்கை முறையில் வந்த மாற்றங்கள், ஆண்களும், பெண்களும் பழகவும், பகிர்ந்துகொள்ளவும் ஏராளமான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளன. ஒருபுறம் இறுக்கமான குடும்பம் சார்ந்த பண்பாடு; இன்னொருபுறம், எல்லையற்ற சுதந்திரம்... இந்த இரண்டுக்கும் இடையே, இன்றைய இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.ஆண், பெண் உறவுகள் என்பது, இயல்பான மனித உறவுகள் என்பதை தாண்டி, அது இன்று மிகையான கற்பனைகளின் ஊற்றாக மாறிவிட்டது.திரைப்படங்கள், காதல் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒரே லட்சியம், ஒரே அர்த்தம் என்று திரும்பத் திரும்ப நம்ப வைக்கின்றன. காதலுக்காக இந்த உலகத்தில், எதை வேண்டுமானாலும் பணயம் வைக்கலாம் என்று போதிக்கின்றன. காதல் முறியும் போது, அந்தப் பெண்ணை எப்படியெல்லாம் பழிவாங்கலாம் என்றும், தன்னைத் தானே எப்படியெல்லாம் அழித்துக் கொள்ளலாம் என்றும், வழி காட்டுகின்றன.

காதல் என்பதை, நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு பொறுப்புகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என்பதற்குப் பதிலாக, அதை ஒரு உன்னதமான கனவாகக் காட்டும்போது, அது ஒரு மன நோயாக மாறுகிறது. ஒரு ஆழமான, அழகான உணர்ச்சியை, ஒரு மனநோய் என்று அழைப்பதற்கு, உண்மையில் வருத்தமாகவே இருக்கிறது. ஆனால், மிகைப்படுத்தப்பட்ட எல்லா உணர்ச்சிகளும், எப்படி மனநோயோ, அதேபோலதான் காதலும் மாறிவிட்டது.இன்று, இன்னொருவரை நேசிப்பதற்கு எந்தப் பெரிய காரணமும் தேவைப்படுவதில்லை. ஒருவரின், பின்புலம் பற்றி ஆராயவேண்டிய எந்த அவசியமும் ஏற்படுவதில்லை. காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஒரு அடையாளமாக, கவுரவமாக, ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.

ஒரு காதலில், இருவருமே ஆழமான பிணைப்புடன் இருந்தால், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இருவருமே மேம்போக்காக இருந்தால், அதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஒருவர் ஆழமான பிணைப்புடனும், இன்னொருவர் மேலோட்டமாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில், அது மனமுறிவிலும், கொலையிலும், தற்கொலையிலும் முடிகிறது.ஒரு புறம் காதலைப் பற்றிய அதீதமான கற்பனைகள்; இன்னொருபுறம், ஒரு காதலுக்குத் தேவையான எந்த உறுதிப்பாடும் இல்லாத மேலோட்டமான மனநிலை. அதனால், நெருக்கமான ஒருவர், திடீரென தன்னை விட்டு விலகுவதை இன்னொரு வரால், புரிந்துகொள்ள முடிவதில்லை. அதிர்ச்சியும், வன்மமும், பழிவாங்கும் உணர்ச்சியும் மேலோங்குகிறது.

இன்று, எல்லார் முன்பும், பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு பையனை விழுந்து விழுந்து காதலிக்கும் பெண், தன் வீட்டில் வசதி வாய்ப்புகளுடன், கூடுதல் அந்தஸ்துடன் வேறு ஒரு பையனைத் திருமணத்திற்கு நிச்சயித்தால், நடைமுறை வாழ்க்கைக்கு எது சிறந்தது என்று, "பிராக்டிகலாக' யோசிக்கிறாள்.அதே போல, ஒரு பெண்ணை, ஒரு ஆண் எவ்வளவு நேசித்தாலும், திருமணம் என்று வரும்போது, யாரைத் திருமணம் செய்து கொண்டால், தனக்கு சமூக ரீதியாக கூடுதலான பலன்கள் இருக்கின்றன என்று யோசிக்கிறான்.

எல்லாருக்கும், சவுகர்யங்களும், பணமும் ஏராளமாகத் தேவைப்படும் காலம் இது. காதல் என்ற சுவாரசியமான விளையாட்டிற்கு, விலையாக யாரும் எதிர்காலத்தைக் கொடுக்க, அவ்வளவு சுலபமாகத் தயாராவது இல்லை.இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான பிரச்னை, இன்று ஆண்களும், பெண்களும் என்ன தான் படித்தாலும், சுயமாக சம்பாதித்தாலும், அவர்கள் மேல், குடும்பத்தினுடைய செல்வாக்கு கடுமையாக இருக்கிறது. பல இளைஞர்களும், இளம் பெண்களும், குடும்பத்தின் இந்த அதிகாரத்தை எதிர்க்கும் வலுவின்றி, தங்கள் காதலைத் துறக்க தயாராகின்றனர்.ஜாதி, மத வெறியும், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், கடுமையாக நிலவும் ஒரு சமூகத்தில், காதலுக்காகச் செய்யப்படும் கவுரவக் கொலைகளைப் பற்றி, நாம் அன்றாடம் படிக்கிறோம்.

திருமணமானவர்கள் புதிய உறவுகளுக்கு ஆட்படுவதால், ஏற்படும் குற்றங்கள் இன்னொருபுறம் அதிகரித்து வருகின்றன. கணவன், மனைவியை சொத்தாகவும், மனைவி, கணவனை ஒரு சொத்தாகவும் கருதும் ஒரு சமூகத்தில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் கொலையிலோ, தற்கொலையிலோ முடிவது, சகஜமாகிவிட்டது.நாம், ஒருவரை நேசிக்கிறோம் என்பது, அவரை எந்த நிலையிலும், புரிந்துகொள்வது என்பது தான். வெறுப்பும், பழிவாங்கும் உணர்ச் சியும், ஒரு அன்பின் அடையாளம் அல்ல. அது, மனநோயின் அடையாளம்.வாழ்க்கை என்பது, எண்ணற்ற மலர்கள் பூக்கும் ஒரு தோட்டம். அதில், ஒரே ஒரு மலரைப் பறித்து, அதை ஒரு ரத்த ரோஜாவாக மாற்றுபவர்கள் மூடர்கள். எந்த ஒரு காதலின் முடிவுக்கு அப்பாலும், இன்னொரு காதல் இருக்கிறது; இன்னொரு வாழ்க்கை இருக்கிறது.
இ-மெயில்: manushyaputhiran@gmail.com

மனுஷ்ய புத்திரன்,பத்திரிகையாளர்/சிந்தனையாளர்