''வீடு, அலுவலகம், சம்பளம், சேமிப்பு என ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையில்... குழந்தைகளோடு நாம் செலவழிக்கும் நேரமும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. விளைவு.... 'ங்கா'வில் ஆரம்பித்து அம்மா, அத்தை, தாத்தா, பாட்டி.... என்று தத்தித் தடுக்கிப் பேசிப் பழகும் மழலைச் சொற்களுக்கும் காது கொடுக்காவிட்டால், நாளடைவில் குழந்தைகளின் பேச்சுத் திறனும் மழுங்கிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.'' -குழந்தைகளின் பேச்சுப் பயிற்சிக்காக மருத்துவமனை வளாகங்களில் வரிசையாகக் காத்திருக்கும் தாய்மார்களின் கூட்டமே டாக்டர் சாந்தி நம்பியின் ஆதங்கத்தை உறுதிப்படுத்துகிறது.
''அந்தக் காலத்தில் பாட்டிமார்களின் பேச்சு சத்தத்துடன், குழந்தைகளின் விளையாட்டுச் சத்தமும் கலந்து வீடே கலகலவென்று இருக்கும். ஆனால், இன்று மாலையானதும் எல்லா வீடுகளிலும் டி.வி. சத்தம்தான் கேட்கிறது. டி.வி-யைத் தூக்கிப் பரண் மேல் போடுங்கள். வாய் பேசாத மழலையும் வாய் திறக்கும்'' என்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் மனநல மருத்துவரான சாந்தி நம்பி.
''நம் உதட்டு அசைவைப் பார்த்துத்தானே குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும். 'அப்பான்னு சொல்லு' என்று குழந்தைகளிடம் தாய் சொல்லும்போது, தாயின் உதட்டைப் பார்த்து வாயைக் குவித்து குழந்தை பேச ஆரம்பிக்கும். பேச்சு கொடுக்காமல் பேச்சு வராது'' என்ற சாந்தி நம்பி பேச்சுக் குறைபாட்டுக்கான மருத்துவக் காரணங்களை விளக்க ஆரம்பித்தார்.
''சில குழந்தைகள் பிறந்தவுடனே அழாது. அதுபோன்ற சில குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் நரம்புக் கோளாறினால் சீக்கிரமாகப் பேச்சு வராது. அதேபோல், மரபணுக்களும் பேச்சுக் குறைபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாத குழந்தைகளுக்கும் பேச்சு வராது. ஆட்டிசம், மன வளர்ச்சி பாதிப்பு, தாய் கர்ப்பமாக இருக்கும்போது ஏற்படும் கிருமித் தொற்று, பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல், கொடி சுற்றிப் பிறத்தல், 30 வயதுக்கு மேல் தாய்மை அடைதல் என்று பல காரணங்களால் சீக்கிரமாகப் பேச்சு வராமல் இருக்கலாம். பொதுவாக, பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்குத்தான் இந்தக் குறை அதிகமாக இருக்கிறது'' என்கிறார் டாக்டர் சாந்திநம்பி.
''பொதுவாக எல்லாக் குழந்தைகளும் எந்த வயதில் பேச ஆரம்பிக்கின்றனவோ, அதே வயதில்தான் பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகளும் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆனால், பேச்சு வளர்ச்சியில் இந்தக் குழந்தைகள் சாதாரணமான குழந்தைகளைவிட மிகக் குறைவான முன்னேற்றத்தைதான் அடைகிறார்கள். பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகளால், வார்த்தைகளின் ஒலிகளைப் பிரித்து அறிந்துகொள்ள முடியாது. இந்த மாதிரியான குழந்தைகள் நாளடைவில் தன்னுடைய குறையை உணர்ந்துகொண்டு, வயது ஏற ஏற மற்றவர்களோடு பேசாமல் விலகிச் செல்வார்கள். அதனால் அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியும் பாதிக்கப்படக்கூடும். அதனால், பிறந்த மூன்று மாதத்தில் இருந்து குழந்தைக்கு பேச்சுப் பயிற்சியைக் கொடுப்பது பெற்றோரின் கடமை. பேச்சுப் பயிற்சி ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை.. 'அப்பா சொல்லு... அம்மா சொல்லு...' என்று தொடங்கி... 'செக்கஸ்லோவாக்கியா சொல்லு' என்பது வரை எல்லாம் சொல்லிக்கொடுக்கலாம்'' என்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் மனநல வளர்ச்சி மருத்துவரான பி.பி.கண்ணன்.
அப்புறம் என்ன பிள்ளையோட பேச ஆரம்பிக்க வேண்டியதுதானே?
அரசு பொது மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான பேச்சுப் பயிற்சி அளித்துவரும் டாக்டர் சுமா இது பற்றி எளிமையாக சில விஷயங்களை கூறினார்.
''மூணு மாதக் குழந்தை அ, உ என்று சத்தம் எழுப்பவேண்டும். இதற்கு கூயிங் (Cooing) னு பெயர். அர்த்தமே இருக்காது. முகத்தைப் பார்த்துச் சிரிக்கவேண்டும்... 'என்னடா செல்லம்...' என்று சொன்னால், சிரித்தபடியே... 'ம்..... ம்...' என்று சொல்லவேண்டும்.
ஆறு மாதத்தில் வார்த்தைகள் இல்லாத மா, கா,(Monosyllable)என்று ஒலி எழுப்பவேண்டும்.
8-வது மாதத்தில்... கொஞ்சம் வித்தியாசமாக... 'ங்க... த... த...' என்று சொல்ல வேண்டும்.
9-வது மாதத்தில் மாமா, தாதா (Bi Syllable) என்று சொல்ல ஆரம்பிக்கும்.
ஒரு வயதில் அம்மா, அத்தை, அப்பா, பாட்டி என்று கூப்பிட வேண்டும்.
ஒன்றரை வயதில் குழந்தைக்கு எட்டு முதல் பத்து வார்த்தைகள் தெரியவேண்டும். இரண்டு வயதில் 'அம்மா மம்மு, அப்பா தண்ணி, அக்கா உச்சா வருது' போன்று பேச வேண்டும். மூன்றில் இருந்து நான்கு வயதுக்குள் 5, 6 வாக்கியத்தை சேர்த்து பேச தெரியவேண்டும். இதுதான்... குழந்தையின் பேச்சு வளர்ச்சிக்கான நிலைகள்.
ஒன்றரை வயது வரைக்கும் இதுபோல் பேசாமல் போனால், கண்டிப்பாக பேச்சுப் பயிற்சியைத் தந்தே ஆகவேண்டும்.'' எனத் தெளிவான விளக்கம் கொடுத்த டாக்டர் சுமா தொடர்ந்து,
''மூணு மாதத்தில் இருந்தே குழந்தையுடன் பேசுங்கள். வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால், கிடைக்கும் நேரத்தை குழந்தைங்களோடு பேசிப் புரிதலை உண்டுபண்ணுங்கள்.
50 வார்த்தைகளுக்கு குறைவாகவும், இரண்டு சொல் வாக்கியங்கள் ஒன்றுகூட தெரியலைவில்லையென்றாலும் அந்தக் குழந்தைக்கு பேச்சுக் குறைபாடு இருக்கலாம். பொதுவாக இரண்டு வயதில் அதிகமாகக் காணப்படுகிற இந்தக் குறைபாடு 3, 4 வயதாகும்போதுதான் மெதுவாகக் குணமாகத் தொடங்கும்.
இந்தக் குறையைப் போக்க குழந்தைகள் வாழும் சூழ்நிலையில் பேச்சு சூழல் அதிகமாக இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளை எப்படி உச்சரிக்கவேண்டும், வாக்கியமாக எப்படிப் பேசவேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால் குழந்தைகளின் பேச்சு வளர்ச்சி நிச்சயம் அதிகரிக்கும்.'' என்கிறார்.