தூக்கம் கண்களைத் தழுவட்டும்!
மிக முக்கியமான விஷயம், தொடுதல்! நம் கைகளைக் கொண்டு ஏதேனும் ஒரு பொருளை, ஏதேனும் ஒரு விஷயத்தைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். காலையில் எழுந்து, பல் தேய்ப்பதற்காக பிரஷ்ஷைப் பயன்படுத்துவதிலேயே துவங்கி விடுகிறது, தொடுதல்!
நாம் ஒருவருக்கு கைகுலுக்குகிறோம் என்றால் அது தொடுதல். அது ஒருவித ஸ்பரிசம். 'அடடா... தம்பீ... பிளஸ்டூ-ல நல்லா மார்க் எடுத்திருக்கியே' என்று சொல்லி, கைகுலுக்குவதில் கூட இரண்டு விதம் இருக்கிறது. வெறுமனே கைகுலுக்குவதில் எந்த உணர்ச்சி மாற்றங்களும் அங்கே உசுப்பிவிடப்படுவதில்லை. அதேநேரம், கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, அழுத்தமாகவும் வேகமாகவும் கைகுலுக்கிப் பாராட்டுகிறபோது, உள்ளே நரம்புகளில் ஒருவித புத்துணர்ச்சி பரவத் துவங்கும்! அந்தப் புத்துணர்ச்சி மூளை வரைக்கும் சென்று சில கட்டளைகளைப் பிறப்பிக்கும்.
அடுத்து அந்தக் கட்டளையின்படி, முகத்திலும் கண்களிலும் அதிக ரத்த ஓட்டம் பாயும். கண்களில் ஒளி மின்னும். முகம் முழுவதும் பிரகாசம் பரவியிருக்கும். இதைத்தான் நாம், 'அந்தப் பையனோட முகத்துல தேஜஸ் பரவியிருக்கு' என்கிறோம். 'முகம் எவ்ளோ லட்சணமா இருக்கு பாருங்க' என்று விமர்சிக்கிறோம். ஆக, கனமான ஒரு கைகுலுக்கலுக்குப் பின்னால், அழுத்தமான ஸ்பரிசத்துக்குப் பிறகு... அங்கே ஒரு புத்துணர்ச்சி தூண்டப்படும்! அது சம்பந்தப்பட்டவரை இன்னும் இன்னும் உற்சாகப்படுத்தும்.
அக்கு பிரஷர் எனும் பயிற்சியும் இப்படித்தான்! கிட்டத்தட்ட அப்படியான பாஸிடிவ் எனர்ஜியை, அட்டகாசமான உற்சாகத்தைத் தருபவை!
விரிப்பு ஒன்றில், மல்லாந்தபடி படுத்துக் கொண்டு, உடலைத் தளர்வாக வைத்துக் கொண்டீர்கள்தானே?! கண்களை மூடிக் கொள்ளுங்கள். இடது கைவிரல்களை வலது காதுக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று, கழுத்துக்குப் பின்னால் மூன்றாவது எலும்பில், ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் அடுத்துள்ள விரல் ஆகியவற்றால் அழுத்திப் பிடித்துக் கொண்டீர்கள் அல்லவா? பயிற்சி முடியும் வரைக்கும் இடது கையையும் விரல்களையும் எடுக்கவே கூடாது என்பது நினைவு இருக்கிறதுதானே?!
இதையடுத்து, மார்புப் பள்ளத்துக்கு ஒரு அங்குலம் கீழே அதாவது வயிற்றின் மேல் பகுதியில், வலது கை ஆள்காட்டி விரலைப் பதியுங்கள். அந்த வேளையில், கழுத்துப் பகுதியில் இடது கை வைத்தது வைத்தது போலவே இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இப்போது உங்கள் மார்புப் பள்ளத்தின் பகுதியில் வலது கையின் ஆள்காட்டி விரலைப் பதித்திருக்கிறீர்கள்தானே? அந்த இடத்திலேயே உங்கள் விரலும் மனமும் இணைந்திருக்கட்டும். கிட்டத்தட்ட ஆழ்ந்த யோசனை போல, ஒரு தியானம் போல கண் மூடிய நிலையிலேயே இருங்கள். ஒரு அரை நிமிடம் மட்டும் அப்படியே இருங்கள்; அது போதும்!
இந்தப் பயிற்சி கொஞ்சம் நுட்பமான, ஆழமான பயிற்சிதான்! மனத்தையும் புத்தியையும் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டால் போதும்... இதைப் போல மிக எளிமையான பயிற்சி வேறு எதுவும் இல்லை என நீங்களே சொல்வீர்கள்!
சரி... அடுத்ததாக, மார்புப் பள்ளத்துக்கு இன்னும் ஒரு அங்குலம் கீழே இறங்கி வந்து, வலது கை ஆட்காட்டி விரல் நுனியைப் பதியுங்கள். முன்பு போலவே கழுத்துப் பகுதியில் வைத்த கையையும் விரல்களையும் எடுக்கவேண்டாம்.
மார்புப் பகுதியில் விரல் வைத்து அழுத்துகிற இடத்திலேயே உங்கள் சிந்தனை நிலைத்திருக்கட்டும். அரை நிமிடம் வரை, தியான நிலையில் இருங்கள்.
இதையடுத்து, அடுத்த நிலைப் பயிற்சி. அதாவது இன்னும் ஒரு அங்குலம் இறங்கி வரவேண்டும். புரிகிறதா உங்களுக்கு? மார்புப் பள்ளத்தில் இருந்து ஓர் அங்குலம் விட்டு முதலிலும் அடுத்ததாக கீழே ஓர் அங்குலம் விட்டு மற்றொரு இடத்திலும் விரல் கொண்டு அழுத்தி, அந்த இடத்தை கூர்ந்து கவனித்தோம் அல்லவா?
இப்போது இன்னும் ஓர் அங்குலம் கீழே இறங்கி வரவேண்டும். அந்த இடத்தில் வலது கை ஆள்காட்டி விரலால் அழுத்திக் கொள்ளவேண்டும். இந்தப் பயிற்சியிலும் கழுத்துப் பகுதியில் வைத்திருக்கிற இடது கையையும் விரல்களையும் எக்காரணம் கொண்டும் எடுக்காமல் இருப்பதே சிறப்பு!
விரல் நுனியால் அழுத்துகிற அந்த இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள். கண்கள் மூடியபடி இருந்தாலும் பார்வையின் திசை, அந்த இடத்தில் குத்திட்டு நிற்கட்டும். புத்தி வேறு எங்கோ அலைந்தாலும், விரல் தொட்டிருக்கிற அந்த இடத்தைச் சுற்றியே மையம் கொண்டிருக்கட்டும். அப்படியே ஒருநாள் முழுக்கவோ எட்டு அல்லது பத்து மணி நேரமோ, ஒருமணி நேரமோ அல்லது அரை மணி நேரமோ இருக்க வேண்டும் என்பதில்லை.
அவ்வளவு ஏன்... ஒரு அஞ்சு நிமிஷ அளவுக்குக் கூட கண்மூடிக் கிடக்கத் தேவையில்லை. ஒரு அரை நிமிடம்... அரை நிமிடம் மட்டும் அந்த இடத்தை ஓர் புள்ளியாக்கி, அந்தப் புள்ளியை நோக்கியபடி சிந்தனை இருந்தாலே போதும்!
இந்தப் பயிற்சியை பத்துநாட்கள் செய்துவிட்டு, பலத்துடனும் கூர்மையான புத்தியுடனும் அயர்ச்சியற்ற உடலுடனும் திகழ்வதாகச் சொன்னவர்கள் பலர் உண்டு.
''இதயத்தில் ஏதோவொரு பிரச்னை வந்து அடைத்துக் கொள்கிறாற்போலவே இருக்கும் சுவாமி. ஆனால் இந்தப் பயிற்சியைச் செய்யச் செய்ய... இதயத்தை ஏதும் தாக்காமல் இருப்பதற்கு ஒரு பாதுகாப்பு வளையம் வந்து விழுந்திருப்பது போல் ஒரு பிரமை!'' என்று சொன்ன பெண்மணி, நெகிழ்ச்சியில் கண் கலங்கிவிட்டார்.
''எனக்கு ஹை பி.பி. உண்டு. காலையிலும் மாலையிலும் இந்தப் பயிற்சிகளைச் செய்து வந்தேன். கிட்டத்தட்ட 22 நாட்கள் செய்த பயிற்சிக்குப் பிறகு, ரத்தப் பரிசோதனையும் பி.பி. செக்கப்பும் செய்து கொண்டேன். என்ன ஆச்சரியம்... எனக்கு பல வருடங்களாக இருந்த அதிக ரத்த அழுத்தம் என்கிற பிரச்னையின் சுவட்டைக் கூட காணோம், சுவாமி!'' என்று ஆச்சரியத்துடன் குறிப்பிட்ட ரிடையர்டு போலீஸ் அதிகாரி, பிறகு இன்னும் இன்னும் தெளிவாக இருந்தார்; ஆரோக்கியமாக வாழ்ந்தார்!
இந்தப் பயிற்சியானது, மின்சார வயர் போல் உடலில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்கிற மொத்த நரம்புகளையும் தொட்டு உசுப்பக் கூடியது. அனைத்து நரம்புகளையும் ஒழுங்குக்குக் கொண்டு வந்து, சீராக இயங்கச் செய்யும் சக்தி கொண்டது இந்தப் பயிற்சி!
அக்குபிரஷர் பயிற்சியில் இன்னும் சில முறைகள் உள்ளன. அதை அடுத்தடுத்துப் பார்ப்போம். இன்னொரு விஷயம்... இந்தப் பயிற்சியை தினமும் இரவில் எடுத்துக்கொண்டால், மிக அருமையான, ஆழ்ந்த நிம்மதி கொண்ட தூக்கம் கிடைப்பது உறுதியாகிவிடும்!
தூக்கம்தான் இந்த உலகின் மிகச்சிறந்த நண்பன். நான்குநாள் பார்க்காவிட்டால், 'நண்பனுக்கு என்னாச்சோ ஏதாச்சோ...' என்று புலம்பித் தவிப்போம்தானே?! அதேபோல், நான்கு நாட்கள் தூக்கமில்லாதிருந்தால், 'என்னாச்சோ ஏதாச்சோன்னு தெரியலை. தூக்கமே வரமாட்டேங்குது' என்று நாமே, நம்மை நினைத்துப் புலம்புவோம்.
தூக்கம் எனும் நண்பனை இழக்காமல் இருப்போமே!