Friday, June 29, 2012

கல்வியைத் தாண்டி!


 

அதிகாலை 3.00 மணி.

ஒருவரும் எழுந்திருக்கவில்லை. ஏன் கமலமும் எழுந்திருக்கவில்லை. அந்த வீதியே, இருளில் மூழ்கி இருந்தது. ஆனால், ராகவன் மட்டும் எழுந்து விட்டான்.

கடிகாரம், மணி 3.00 என காட்டியது.

அவசர அவசரமாய் கண்ணை துடைத்துக் கொண்டு, தன் மகனை எழுப்பினான்.


""டேய்... ஸ்ரீதர் எழுந்திருடா. மணி மூணாகுது.''

""இருங்கப்பா... இன்னும் கொஞ்ச நேரம். மூணு தானே ஆகுது,'' திரும்பிப் படுத்தான்.

அவ்வளவுதான். "பளார்' என அவன் முதுகில் இடியாய் வந்து, அவன் கை விழுந்தது.

""அம்மா...'' என்ற அலறலுடன், அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்தான். வலி பொறுக்க முடியாமல் முனங்கினான். கண்ணீர் தானாகவே வழிந்தது.

ஸ்ரீதர் போட்ட அலறலில், கமலமும் அலறியடித்து, ""என்னப்பா... என்ன?'' எனக் கேட்டு எழுந்து வந்தாள்.

மகனின் அருகில் கோபக் கனலுடன் நிற்கும் கணவனை பார்த்ததும், அங்கு என்ன நடந்து இருக்கும் என்பது கமலத்திற்கு புரிந்தது.

கணவனிடத்தில், தன் பேச்சு எடுபடாது என்பதை அறிந்தவள் கமலம். மகனின் அருகில் அமர்ந்து, அவனின் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

""கண்ணா... அழாதடா, நீ படி... நான் சூடா டீ எடுத்து வர்றேன்...'' கூறும் போதே, ""ஆமா... அம்மாவும், பிள்ளையும் கொஞ்சிகிட்டு இருங்க... இரண்டு கழுதை வயசு ஆச்சி. தானா எழுந்து படிக்கணும்ன்னு அக்கறை இல்லை. இதை கேட்கறதை விட்டுட்டு கொஞ்சிகிட்டு இருக்கிறா. போய் வேலையை பாருடி,'' ராகவன் சிங்கமாய் கர்ஜிக்க, கமலம் மறுபேச்சு பேசாமல், அடுப்படியை நோக்கி நடந்தாள்.


தான் வைத்தது தான் சட்டம் என நினைப்பவன் ராகவன். தன்னை மாதிரியே, மகனும் நன்றாக படித்து பொறியாளராக வேண்டும் என்பது, அவனது விருப்பம். எட்டாம் வகுப்பு படிக்கும் தன் மகனை, காலை, மாலை என நேரம் பாராமல், படிக்கும்படி வறுத்து எடுப்பான்.

சில வேளையில், உடல் முடியாமல் இருக்கும் போதும், அதுபற்றி கவலைப்படாமல், படிப்பே கதியாய் இருக்கும்படி செய்வான்.

ஸ்ரீதரும் படிப்பில் மந்தம் இல்லை; படு சுட்டி. பள்ளியில் அவன்தான் முதலாவதாக வருவான். படிப்பு மட்டுமின்றி, மற்ற திறமைகளிலும் அவன் கையே ஓங்கி இருக்கும்.

ஆனால், ராகவனுக்கு அதில் எல்லாம் ஈடுபாடில்லை. தன் மகன், படிப்பில் மட்டும் திறமையை நிரூபித்தால் போதும் என்று கடுமையாகக் கூற, மற்றவற்றில் திறமை இருந்தும் அதில் ஈடுபடவில்லை. மீறி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும், அப்பா என்ன செய்வார் என்பது, அவனுக்கு தெரியும். அதனால், மற்றவற்றை புறந்தள்ளி, படிப்பு ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தான் ஸ்ரீதர்.

ஆனால், படிப்பதற்கு சிறிது தாமதம் ஆனாலும், ஸ்ரீதர் படும்பாடு சொல்லிமாளாது. இது தெரிந்து, ஸ்ரீதரும் ஒப்புக்கு பிள்ளையாய் இருந்தான். சில நேரங்களில், அவனையும் மீறி, இது மாதிரி நடந்து விடும்.

ஒரு வழியாய் ஸ்ரீதர் எழுந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான்.

திடீரென்று ஒரு நாள் ஸ்ரீதர், அப்பாவிடம் வந்தான்.

""அப்பா... தலைமை ஆசிரியர் உங்களை அழைத்து வரச் சொன்னார்...'' சொன்னதுதான் தாமதம்...

""என்னை அழைத்து வரச் சொன்னார்னா, நீ ஏதோ தப்பு செய்திருக்கணும். சரியா படிக்கலையா... தண்டம் தண்டம்,'' என்று கூறியவாறே, கையை ஓங்கி, அவன் அருகில் சென்றான்.

ஓரடி பின் வாங்கிய ஸ்ரீதர். ""இல்லப்பா... அதுக்காக இல்லை.''

அதற்குள் குறுக்கே வந்த கமலம், ""என்னன்னுதான் போய் பாருங்களேன்... சும்மா எதுக்கெடுத்தாலும், பிஞ்சு பிள்ளையை அடிக்கிறதிலேயே குறியா இருக்கீங்களே,'' ஒரு வழியாய் என்றுமில்லாமல், தைரியத்துடன் சொன்னாள் .

கமலத்தை ஒரு முறை முறைத்தான்.

""சரி சரி... நாளைக்கு வர்றேன்...'' ராகவன் கூறவும், அம்மாவை சந்தோஷப் பார்வை பார்த்தான் ஸ்ரீதர். கண்களாலேயே அவனுக்கு ஆறுதல் அளித்துவிட்டு சென்றாள் கமலம்.

மறுநாள் தலைமை ஆசிரியர் முன் நின்றிருந்தான் ராகவன்.

""இதுமாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காது சார். ஸ்ரீதருக்கும் இதுல விருப்பம். நீங்க சம்மதிச்சா...'' தலைமையாசிரியர் முடிக்கவில்லை...

""அதெல்லாம் வேண்டாம் சார். என் மகன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தட்டும்,'' தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதிலேயே இருந்தான்.

அப்பாவின் இந்த பிடிவாதம் தெரிந்ததால், ""அப்பாவுக்கு விருப்பம் இல்லன்னா வேண்டாம் சார்...'' என்றான் ஸ்ரீதர்.

""இதுக்கு மேல, நாங்க சொல்றதுல என்ன சார் இருக்கு.... அறிவியல் கட்டுரை அருமையா எழுதியிருக்கிறான். தலைநகரில் நடக்கும் அறிவியல் மாநாட்டில் விளக்கம் சொல்ல அழைப்பு வந்திருக்கு. இதனால, இவனுக்கு நல்ல பேரும், வாய்ப்பும் கிடைக்கும்... நீங்க வேண்டாம்ன்னு சொல்றீங்க. சரி சார் நீங்க போகலாம்,'' என்றவர், தன் வேலையை பார்க்கலானார்.

ஸ்ரீதருக்கு இதில் மிகப்பெரிய வருத்தம். அதனால், படிப்பில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியவில்லை. அப்பாவின் கண்டிப்பால், புத்தகத்தை எடுத்தாலும், மனம் அதில் லயிக்கவில்லை.


எல்லா பாடத்திலும், 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவன் அறுபதும், எழுபதும் எடுக்கலானான்.


""என்னடா ஆச்சு உனக்கு... ஏன் மார்க் எல்லாம் இவ்வளவு குறைவா இருக்கு... தினமும் தானே படிக்கிற... வகுப்பில் முதலாவதாக வந்தவன், இப்ப கடைசியில இருக்கியே,'' எனக் கோபப்பட்டான் ராகவன்.

தலைமையாசிரியர் வேறு, ராகவனை அழைத்து, நல்லா படிச்ச பையன், இப்ப சரியா படிக்கிறதில்லை. எது கேட்டாலும் வாயே திறப்பதில்லை. வீட்டில் ஏதேனும் பிரச்னையா?' என்றார்.

மதிப்பெண் குறைந்ததால் தான், அவர் கூப்பிட்டு கேட்கும் அளவிற்கு வந்தது என்ற எரிச்சலில், அவனை மாட்டை அடிப்பது போல் அடித்தான்.

""அப்பா அடிக்காதீங்க... இனிமே ஒழுங்கா படிக்கிறேன்...'' என்றவன், வலி தாளாமல் அலறினான்.


அதற்கு மேலும் பொறுக்காத கமலம், ""இப்படி அடிச்சா மட்டும் அவன் மார்க் எடுத்திடுவானா என்ன... அடிக்கிறத நிறுத்திட்டு, என்ன காரணம்ன்னு பார்த்து, சரி செய்யற வேலையைப் பாருங்க...'' என்றது தான் தாமதம்.

""எனக்கு புத்தி சொல்ல வந்திட்டியா... அந்த அளவுக்கு திமிர் ஏறிப் போச்சா,'' என்றவன் கமலத்திற்கும் ஒரு அறை விட்டான்.

இரண்டு, மூன்று நாட்கள் அந்த வீடே சூன்யமாக இருந்தது. யாரும் யாருடனும் பேசவில்லை. ஸ்ரீதர் எப்போதும் போல் படிக்க எழுந்து விடுவான். படிக்கிறானோ இல்லையோ, புத்தகத்தை கையில் எடுத்து விடுவான். அப்பாவின் அடிக்கு அவ்வளவு பயம்.

எதேச்சையாக, ராகவன் தன் பால்ய நண்பன் ராமசாமியை வழியில் சந்திக்க நேர்ந்தது. இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

மாலை நேரம் என்பதாலும், வீடு அருகில் என்பதாலும், ராமசாமி கட்டாயப்படுத்த, அவன் வீட்டிற்கு சென்றான் ராகவன்.

ராமசாமியின் மனைவி காபி கொடுக்க, குடித்துக் கொண்டிருந்தான். அப்போது சில மாணவர்கள் அங்கு வந்து கொண்டிருந்தனர்.

""என்னடா ராமசாமி... இந்த பசங்கள்ளாம் இங்க என்ன பண்றாங்க?''

""என் மகன், மாலை நேர வகுப்பு எடுக்கிறான். அதற்காகத் தான் இவங்கள்ளாம் வர்றாங்க.''

""என்னடா சொல்ற... உன் மகன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இல்ல படிச்சிருக்கான். வேலைக்கு போக வேண்டியது தானே?''

""வேலை என்ன கையிலையா இருக்கு... வாங்க வாங்க தர்றேன்னு சொல்ல... லட்சக்கணக்கில் செலவழிச்சு படிச்சிட்டு, அவன் அவன் வேலை இல்லாம திண்டாடுறான்.''

தொடர்ந்தான் ராமசாமி....

""அது மட்டுமா... என் பிள்ளை நல்லா பேட்மிட்டன் விளையாடுவான். பேச்சுப் போட்டியில் முதலாவதா வருவான். இதில் எல்லாம் போனா, படிப்பை கோட்டை விட்டுடப் போறான்னு நான் தடுத்துட்டேன். படிப்பில் முதலாவதா வந்தான். அதற்காக உடனே வேலை கிடைச்சிடுமா என்ன?'' நிறுத்தினான்.

""முதல் மதிப்பெண் எடுத்தா வேலை கிடைக்காதா என்ன?''

""உன்னை மாதிரிதான் நானும் இருந்தேன். படிப்பு ஒன்று தான் வாழ்க்கையை முன்னேற்றும்ன்னு. ஆனா, அது தவறுன்னு இப்ப புரியுதுடா.''

""என்ன தான் நீ சொல்ல வர்றடா...'' புரியாமல் நண்பனைப் பார்த்தான் ராகவன்.

""படிப்பு என்பது உலகத்தையும், உலக நிகழ்வுகளையும் புரிந்து கொள்ள உதவும் கருவிடா. நம் அறிவை பெருக்கும் ஆயுதம். படித்தால் தான் வேலை கிடைக்கும்... இல்லைன்னு சொல்லலை. எல்லாருக்கும் வேலை கிடைக்கும் என்பது தவறு... வேலை கிடைக்கறவன், வேலை செய்யறான். மற்றவர்கள், அதற்காக வீட்டீலேயா உட்கார்ந்து இருக்க முடியும்... அந்த நேரங்களை வீணாக்காம, மாலை நேர டியூசன் எடுக்கிறான். பகலில் பேட்மிட்டன் கோச்சிங் தருகிறான்... அதுமட்டுமில்லாம, திறமையான மாணவர்களை கண்டறிந்து, ஆய்வு கட்டுரை எழுத வழிகாட்டுகிறான்...''

இடைமறித்த ராகவன், ""படித்த படிப்பு என்னடா ஆகறது... இதுலையே காலத்தை தள்ளிட முடியுமா?'' என்று கேட்டான்.

""இதுல போதுமான வருமானம் வருதுடா... அதுமட்டுமல்ல, இதுல ஒரு திருப்தியும், நம்மால் நான்கு பேர் நல்லா இருக்கிறாங்களே என்ற உணர்வும் ஏற்படும் போது, மனம் எவ்வளவு அமைதியா, ஆனந்தமா இருக்கு தெரியுமா?''

""படிக்கிற காலத்தில படிப்புதானடா முக்கியம். அதைவிட்டுட்டு இந்த விளையாட்டு, கட்டுரை எழுதுறது, இது எல்லாம் தேவையா?''

""என்ன அப்படி கேட்டுட்ட... போட்டி நிறைந்த இந்த உலகத்தில், படிப்பு மட்டும் இருந்தா பத்தாதுடா... மற்றவற்றிலும் நம் திறமையை வளர்த்துக்கணும்; வெளிப்படுத்தணும். இல்லன்னா, வாழ்க்கை கடினமாயிடும். நமக்கு அப்போ "லபமா வேலை கிடைச்சிடுச்சி. ஆனா, இப்போ வேலை கிடைப்பது என்பது கடினம்.''

ராமசாமி பேச பேச... பேய் அறைந்தவன் போல் அமர்ந்திருந்தான் ராகவன். மகனின் நினைவு வந்து அவனை துணுக்குற செய்தது.

""சரி... அதைவிடுடா, உன் மகன் என்ன படிக்கிறான்?'' கேட்டதைக் கூட காதில் வாங்காமல், ""நான் வர்றேன்டா... அப்புறமா பேசலாம்,'' என்று, நடையைக் கட்டினான் ராகவன்.

பதில் ஏதும் கூறாமல், வேகமாக செல்லும் ராகவனையே ஆச்சரியத்துடன் பார்த்தான் ராமசாமி.

வந்ததும் வராததுமா -

""ஸ்ரீதர்... ஸ்ரீதர்...''

உள்ளே படித்துக்கொண்டிருந்த ஸ்ரீதர், வேகமாக வந்து அவன் எதிரே நின்றான்.

""என்னப்பா...'' உள்ளுக்குள் உதறல் எடுத்தது. "இன்று என்ன கேட்டு அடிக்கப் போகிறாரோ...' என்ற பயம், அவன் முகத்தில் அப்படியே தெரிந்தது.

""இப்படி வா...'' என்று அழைத்தான், தானும் சோபாவில் அமர்ந்து, மகனையும் அருகில் அமர செய்தான்.

""இப்ப எப்படி படிக்கிற... பாடமெல்லாம் புரியுது இல்ல... சந்தேகம் ஏதேனும் இருந்தா கேளு. ஆமா... உங்க பள்ளியில விளையாட்டு போட்டி எல்லாம் இல்லையா... நீ ஏன் அதில் எல்லாம் கலந்துக்கல... அதுலயும் கலந்துக்கணும்... கட்டுரை போட்டி என்னைக்குன்னு சொன்ன... தேதி இருந்தா அதுலயும் பேர் கொடுத்திடு.''

ராகவன் பேச பேச, சிலையாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். தன் தந்தையா இது மாதிரி அன்பா, ஆசையா பேசுகிறார் என்பதை, அவனாலேயே நம்ப முடியவில்லை. கலந்துக்கிறானோ, இல்லையோ, இதையே அவன் உலகமகா மகிழ்ச்சியாக உணர்ந்தான்.

இதையெல்லாம் கதவருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கமலத்தை கவனித்தான். கையால் சைகை காட்டி அழைத்தான்.

கமலமும் வந்தாள். ""நீயும் உட்கார் கமலம்... இதுநாள் வரையில், படிப்பு மட்டும் தான் வாழ்க்கைன்னு இருந்துட்டேன். படிப்பை தாண்டியும் பல துறைகள் இருக்கு. அதுலையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்துட்டேன்... பிள்ளைகளுக்கு படிப்பு தேவை தான். அதற்காக படிப்பே கதியாக இருக்க வேண்டும் என்பதில்லை. மற்றவற்றிலும் அவர்களால் முடிந்த திறமையை நிரூபித்தால் தான், போட்டி நிறைந்த இந்த உலகத்தில், எதிர் நீச்சல் போட்டு வாழ முடியும் என்பதை, என் நண்பன் புரிய வைத்து விட்டான்,'' என்று கூறிய ராகவனின் கண்கள் கலங்கின.

"கல்வியைத் தாண்டியும் பல துறைகள் இருப்பதை புரிந்து கொண்டாரே...' என்ற எண்ணம் வர, ஸ்ரீதருக்கு மட்டுமல்ல, கமலத்துக்கும் கண்கள் கலங்கின; இது ஆனந்தக் கண்ணீர்!