Tuesday, June 26, 2012

உணர்ந்திருக்கிறோம் தெளிந் திருக்கிறோமா?


லகில் உள்ள மனிதர்கள் எவருமே நோயுடன் வாழ விரும்புவதில்லை. தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் விதம்விதமாக மாத்திரைகளை உட்கொள்வதே தனது லட்சியம் என்று எவரும் நினைப்பதும் இல்லை. மருத்துவமனையில் அட்மிட் ஆகி, டிரிப்ஸ் ஏற்றிக்கொள்ள வேண்டும்; ரத்தம் ஏற்றிக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறவர்கள் இருக்கிறார்களா என்ன?

ஆக, 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்; ஆனால், தெளிந் திருக்கிறோமா என்பதே கேள்வி. நோய் தாக்கினால் இந்த உடல் என்னாகும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோம்; ஆனால், நோய் தாக்காமல் இருப்பதற்குச் செயல்படுகிறோமா என்பதுதான் இங்கே அவசியம்!

துக்கத்துக்கு நிகரான நோயும் இல்லை; தூக்கத்துக்கு இணையான மருந்தும் இல்லை என்பார்கள். துக்கம் இருந்தால், தூக்கம் வராது போகும். துக்கத்தை ஒழித்தாலே, நிம்மதியான தூக்கம் கிடைத்துவிடும்.

துக்கம் என்பது மனதின் அடி ஆழத்தில் இருந்து உந்தப்பட்டு, ஏக்கமாக, கவலையாக, பெருந்துயரமாகக் கொட்டப்படுகிறது. திடமற்ற மனம்தான் இப்படியான வேலைகளைச் செய்யும். மனம் உறுதியுடன் இல்லாமல் இருப்பதற்கு, அயர்ச்சியான உடலும் ஒரு காரணம்! உடலில் இருக்கிற அயர்ச்சி உள்ளத்துக்கும், உள்ளத் தில் உண்டாகிற அயர்ச்சி உடல் முழுவதற்கும் பரவக்கூடிய விந்தை, மனிதர்களிடம் ரொம்பவே உண்டு.

இவற்றில் இருந்து நிவாரணம் தருகிற விஷயத்தைதான் மனவளக் கலைப் பயிற்சிகள் தந்துகொண்டிருக்கின்றன. மனவளக் கலைப் பயிற்சிகளை மேற்கொண்ட அன்பர்கள் பலர் தெளிந்த மனதுடன், குழப்பமான நிலையைக்கூட மிக எளிதாகக் கடந்துவிடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த மனவளக் கலைப் பயிற்சியை சிறுவர்களும் இளைஞர்களும் செய்யச் செய்ய... மிகுந்த தெளிவுடனும், உடல் சோர்வற்ற திடகாத்திரமான மனோபலத்துடனும், படிப்பில் கூர்மையாகவும் உத்தியோகத்தில் திறமையாகவும் மிளிர்வதை அவர்களே பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி, பெண்களும் முதியவர்களும்கூட இந்தப் பயிற்சிகளால் நிகழ்ந்திருக்கிற மாற்றங்களை விவரித்திருக்கிறார்கள்.

உடற்கூறுகளில் அந்தந்த வயதில் ஏற்படுகிற சின்னச் சின்னக் கோளாறுகளையும், 40 வயதுக்கு மேல் அவர்களுக்குள் தோன்றுகிற மனரீதியான சிக்கல்களையும் பிரச்னைகளையும் மிக எளிதாகக் கடந்துவிடுகிற தெளிவையும் பெண்கள் அடைந்திருக்கிறார்கள்.

அவை அனைத்துக்கும், இந்த மனவளக் கலையின் முக்கியமான பயிற்சிகளில் ஒன்றான அக்குபிரஷர் பயிற்சியும் ஒரு முக்கிய காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் பயிற்சியை இன்னொரு முறை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கவனியுங்கள்.

ஒரு விரிப்பின் மீது, மல்லாந்தபடி தளர்வாகப் படுத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். இடது கைவிரல்கள் வலது காதுக்குப் பின்புறமாகச் சென்று, கழுத்துக்குப் பின்னால் இருக்கிற மூன்றாவது கழுத்து எலும்பில் படும்படி கொண்டு செல்லுங்கள். பிறகு, இடது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் அடுத்து உள்ள விரல் ஆகியவற்றால் அந்த எலும்புப் பகுதியை நன்றாக அழுத்திப் பிடித்துவிடுங்கள். பயிற்சி முடியும்வரை, இடது கையையும் விரல்களையும் எடுக்காமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்!

அடுத்து, இடது கை பின்னங்கழுத்தில் இருக்க... வலது கையின் ஆள்காட்டி விரலை, மார்புப் பள்ளத்துக்கு ஒரு அங்குலம் கீழே உள்ள இடத்தில் வைத்துக் கொண்டு, அரை நிமிட நேரம் தியானம் செய்வது போல் கண்களை மூடி, அந்த இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.

அதையடுத்து, அந்த இடத்திலிருந்து மேலும் ஒரு அங்குலம் கீழே இறக்கி வைத்துக்கொண்டு, அந்த இடத்தில் வலது கை ஆள் காட்டி விரலைப் பதித்துக் கொள்ளுங்கள். முன்பு போலவே, இங்கேயும் அரை நிமிடம் தியானம் போல் கூர்ந்து கவனியுங்கள்.

இவற்றையெல்லாம் எந்தப் பதற்றமோ படபடப்போ இல்லாமல்தானே செய்தீர்கள்? பதற்றத்தையும் படபடப்பையும் குறைப்பதற்காகத்தான் இந்தப் பயிற்சி. ஆகவே, அப்பேர்ப்பட்ட பயிற்சியைச் செய்வதற்கே பதற்றப்பட்டால் எப்படி? நிறுத்தி நிதானமாகச் செய்யச் செய்ய... மெள்ள மெள்ள ஒரு மாற்றம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்!

அதையடுத்து, வலது ஆட்காட்டி விரலை தொப்புளின் நடுமையத்தில் வைத்துக் கொள்ளுங்கள். லேசாக மேல்நோக்கியபடி அழுத்திக்கொண்டே ஒரு அரை நிமிட நேரம் அந்த இடத்திலேயே நினைவைச் செலுத்துங்கள். சிந்தனையை அங்கேயே ஒருமுகப்படுத்தி வையுங்கள்.

இப்போது, தொப்புள் மையப் பகுதியிலிருந்து ஆள்காட்டி விரலை எடுத்துவிட்டு, வலது கை பெருவிரலைக் கொண்டு கீழ் நோக்கி அழுத்தியபடி, அரை நிமிடம் ஆழ்ந்து அந்த இடத்தைக் கவனியுங்கள்.  

அடுத்த நிலையாக... கட்டை விரல் எனப்படும் பெருவிரலை அங்கிருந்து எடுத்துவிட்டு, ஆட்காட்டி விரலை மீண்டும் தொப்புள் மையத்தில் வைத்து, உடலின் வலது தோள்பட்டையை நோக்கியபடி அரை நிமிட நேரம் கூர்ந்து கவனியுங்கள். அடுத்து, ஆட்காட்டி விரலால் தொப்புள் மையத்தை, இடது தோள்பட்டையை நோக்கி அழுத்தியபடி, ஒரு அரை நிமிட நேரம் ஆழமாகக் கவனியுங்கள்.  

முடிந்ததா? அதையடுத்து, ஆள்காட்டி விரலால் தொப்புளின் மையப் பகுதியை அழுத்திக்கொண்டு, வலது தொடையை நினைத்தபடி அரை நிமிடமும், அடுத்து ஆள்காட்டி விரலை எடுத்துவிட்டுக் கட்டைவிரலால் அழுத்திக்கொண்டு, இடது தொடையை நினைத்துக்கொண்டு அரை நிமிடமும் தியானம் போல் கூர்ந்து பாருங்கள். இப்போது தொப்புளில் இருந்து கட்டை விரலை எடுத்துவிடுங்கள்.

அதன் பிறகு, இடது மார்பின் விலா எலும்புகளின் மத்தியில் இருந்து ஒரு அங்குலம் கீழே வயிற்றில் ஆட்காட்டி விரலை வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்போது, அந்த அரை நிமிட நேரமும் உங்களின் புத்தி முழுவதும் இடது மார்பு விலாப் பகுதியிலேயே இருக்கட்டும்.

அதேபோல், வலது பக்க பக்கவாட்டில் மார்பின் கடைசி விலா எலும்புக்கும் இடுப்பு எலும்புக்கும் நடுவில் வலது கட்டை விரலால் அழுத்திப் பிடித்துக் கொண்டு, அங்கேயே சிந்தனையைச் செலுத்துங்கள்.

நிறைவாக... தொப்புளுக்கும் இடது பக்க தொடை மடிப்புப் பகுதிக்கும் மத்தியில் ஆட்காட்டி விரலை வைத்து நன்றாக அழுத்திக் கொள்ளுங்கள். வழக்கம்போல், அந்த இடத்தின் மீதான உங்களின் நினைப்பு ஒரு அரை நிமிடம் தொடரட்டும்.

அதன் பின்னர், வலது கையையும் கழுத்தின் பின்பகுதியில் வைத்திருந்த இடது கையையும் மெள்ள எடுத்து, எப்போதும்போல் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பயிற்சியைச் சரியாகச் செய்தால், என்னென்ன மாற்றங்கள் உடலில் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அப்போதே உங்களால் உணர முடியும். உணர்ந்து பாருங்களேன்!