Wednesday, November 11, 2009

அல்வா துண்டு யாருக்கு?


அல்வா துண்டு யாருக்கு?


"போய்யா! ஒரே போர் அடிக்குது.." என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர்!

சரி..."போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்? சுருக்கமாக சொன்னால் நம் மனதுக்கு பிடிக்காத செயல்களை .... வேறு வழி தெரியாமல் செய்யும்போது தான் நமக்கு போரடிக்கிறது.

நம் மனதுக்கு பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் நமக்கு போரடிக்காது.

"உன் மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் இருந்தால், அதை செய்வதற்கு நேரத்தை தள்ளி போடாதே.... என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு.

வெள்ளைக்காரன், அரேபியன்,இந்தியன் மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போடமுடியாத அளவு சின்ன அல்வா துண்டு அது.

அதனால், அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்." நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு, இன்றிரவு படுத்து தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு..." என்று தீர்மானித்து கொள்கிறார்கள்.

மறு நாள் காலையில், மூவரும் அல்வா இருக்கும் பாத்திரத்தை சுற்றி அமர்ந்துகொண்டனர்.

முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான்."நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். என்னை அவர் தன பூந்தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் பல அற்புதங்களை செய்து காண்பித்தார்"

அடுத்து, அரேபியன், "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால், அவரை நான் என் பூந்தோட்டதிற்கே அழைத்துபோய் அவருக்கே பல அற்புதங்களை காண்பித்தேன்"

கடைசியாக, இந்தியன் " நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால் என்னை பார்த்து கடவுள்' " டேய் முட்டாளே!, எதிரில் இருக்கும் இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி, எழுந்து பொய் அல்வாவை சாப்பிடு" என்று கடுங்கோபத்துடன் கட்டளை இட்டார். அதனால் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் சாப்பிட்டுவிட்டேன் , என்றார்.

இந்த கதை சொல்லும் செய்தி, எந்த ஒரு வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறோதோ, அந்த வேலையை நாம் தள்ளி போடவே கூடாது.

நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். " போரடிக்கிறது" என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.

வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் தான் போரடிக்கும் என்பதில்லை. செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக் கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.

எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.

நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.