Friday, August 5, 2016

சிறுகதை – கரித்துணி

சிறுகதை – கரித்துணி

பத்து நிமிடங்களாய் பீரோ முழுக்கத் தேடியும் பழைய துணி ஒரு சிறு துண்டு கூடக் கிடைக்கவில்லை.

கரித்துணி இல்லாமல் சமையலறையில் வேலை செய்வது எல்லா விதங்களிலும் சிரமமாக இருக்கிறது. கொஞ்சம் கஷ்டம்தான். இதற்கு முன் உபயோகித்த துணி மேலும் பழசாகி நைந்து கந்தலாகி எதற்குமே பயனற்றதாகி நான்கைந்து நாள்களுக்கு மேலாகிவிட்டது. இன்னொன்று தேடி எடுக்க நினைத்துக்கொண்டே இருந்தாலும் அசிரத்தை காரணமாய் பழைய துணியினாலேயே காலையில் கஞ்சி வடிக்க… அது போதாமல் கையில் சூடுபட்டுக்கொண்ட கணம் வரை புதிய கரித்துணி தேடலில் இறங்கவில்லை நான்.

ஒரு வழியாய் பழைய துணிகளைக் கட்டி வைத்திருந்த மூட்டையைப் பிரித்தேன். பழசாகியிருந்தாலும் கெட்டியானவை. சாயம் வெளுத்துப் போனவை… பாத்திரக்காரனுக்குப் போடலாமென வைத்திருப்பவை.

கொஞ்சம் முனைந்து தேடியதில் கரித்துணிக்குப் பயன்படும் வகையிலான துணி கிடைத்தது. சாயம் மங்கவில்லை. கழுத்தருகே மட்டும் சற்றே நைந்துபோயிருந்த ரவிக்கை.

அம்மாவின் ரவிக்கை.

சென்ற முறை அம்மா இங்கு வந்தபோது விட்டுச்சென்ற ரவிக்கை.

அதை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்று சௌகரியமாய் என் வேலைகளை ஆரம்பித்தேன்.

அந்த ரவிக்கை அம்மாவின் ஞாபகங்களை என்னுள் மீட்டெடுத்தது. எந்தப் புடவைக்கான ரவிக்கையோ இது?

அழைப்பு மணி ஒலித்தது.

கதவு திறந்தேன்.

ஜானகி…?

எங்கள் காலனியிலேயே இருப்பவள். மசூலிப்பட்டினக்காரர்கள். அவள் கணவர் நீர்பாசனத் துறையில் பணிபுரிபவர். இரு பெண் குழந்தைகள், ஒரு பையன்.

சமையல் மற்றும் இதர வேலைகளுடன் ஜானகி பொழுதெல்லாம் மல்லாடிக் கொண்டிருப்பாளேயன்றி இப்படி எவர் வீட்டுக்கும் வந்ததில்லை… ஏதேனும் வேலை இருந்தால் தவிர.

நல விசாரிப்புகள் முடிந்ததும் ""எனக்கு தினமும் கொஞ்ச நேரம் இங்கிலீஷ் சொல்லித் தரீங்களா?" எனக் கேட்டாள் ஜானகி.

ஒயர் கூடை பின்னக் கற்றுத் தரீங்களா… ஸ்வெட்டர் எப்படிப் போட வேண்டும், மாம்பழ ஜூஸ் செய்வது எப்படி… இந்த தினுசில் கேட்பவர்களையே இதுவரை எங்கள் காலனியில் பார்த்துப் பழகிய எனக்கு ஜானகியின் கோரிக்கை அதிசயமாகத்தான் இருந்தது.

""அப்படியே… ஆனால் உங்களுக்கு நேரம் இருக்குமா?"

""ஒருவேளைச் சமையலையாவது நிறுத்திவிட வேண்டியதுதான். ஆனால் இங்கிலீஷ் கற்றுக் கொள்வது மட்டும் விட மாட்டேன்"

""ஏன்…?" குழப்பத்துடன் கேட்டேன்.

""என் குழந்தைகள் என்னை லட்சியமே செய்வதில்லை. என் விஷயம் எதுவானாலும் கவனம் செலுத்த மாட்டார்கள். எந்நேரமும் அப்பா தியானம்தான். இத்தனைக்கும் அவர்கள் கேட்பது எதற்கும் பதில் சொல்லும் பொறுமை இருக்காது அவருக்கு. நேரமும் கிடையாது. அவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அளவிலான படிப்பறிவு இல்லை எனக்கு. அதனால்தான் பி.ஏ. படிக்க முடிவு செய்துள்ளேன். குறைந்தபட்சம் சின்னவங்க இரண்டு பேரோட படிப்பிலாவது அக்கறை காட்ட வேண்டும். என்னமோ போங்க, நேற்றுவரை நம் தலைப்பைப் பிடித்துக்கொண்டு சுற்றிய பிள்ளைகள் இப்போது நமக்கு எதுவுமே தெரியாதெனப் புறக்கணிக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு…"

இப்படித்தான் போன வாரம் என் பெண் கோடை விடுமுறை, கம்ப்யூட்டர் வகுப்பினின்று திரும்பியதும் ""இன்னிக்கி என்ன சொல்லித் தந்தாங்கடீ'ன்னு கேட்டேன். ""கம்ப்யூட்டர் பத்தி உனக்கென்னம்மா தெரியும்"னு பதில் சொல்லிட்டு அப்பாவுக்காக ஆசையாய் எதிர்பார்க்கத் தொடங்கினாள். அவர் வந்ததுதான் தாமதம்… கிளிப்பிள்ளைபோல் மளமளவென ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஜானகி ஆங்கிலம் கற்றுக்கொள்ள முனைந்ததுபோல் நான் இப்போது கம்ப்யூட்டர் தெரிந்துகொள்ள வேண்டுமா? கற்றுக்கொள்ள வேண்டுமா…?

""சரி… வாங்க. கற்றுத்தரேன்…" என்றேன் ஜானகியிடம்.

அவள் விடைபெற்றதும் சமையலறை வேலைகளில் மும்முரமானாலும் அவள் பேச்சே மனதில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது.

அம்மா…!

உயிருக்கு உயிர் ஈந்து பிறவியளித்த அம்மாவை அலட்சியம் செய்யாமலிருப்பதற்கு அதற்கென அவருக்கு ஒரு தகுதி வேண்டுமா?

அப்படியான தேவை ஏதுமில்லைதான். ஆனால் வளரும் பிள்ளைகள் அம்மாவை அலட்சியம் செய்வதென்பது சர்வசாதாரணமாகிவிட்டதே…!

எனக்குத் தெளிவாய் ஞாபகமிருக்கிறது…

இன்றைய காலகட்டத்தில் அம்மா ஸ்தானத்திலிருக்கும் பெண்களுக்கு பட்டப்படிப்பு வாய்த்து… கொஞ்சத்திற்குக் கொஞ்சம் பொருளாதாரச் சுதந்திரம் இருப்பது உண்மையெனினும் எங்கள் அம்மா காலத்தில் டிகிரி வாங்கியவர்கள் அரிதினும் அரிது.

பொறுமையான அப்பாக்கள்… வீட்டிலுள்ள படித்த மாமாக்கள்… சித்தப்பாக்கள்… டியூஷன் மாஸ்டர்கள் என பிள்ளைகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும் வீட்டுப்பாடங்களைச் செய்ய வைக்கவும் யாராவது இருப்பார்கள்.

ஒருமுறை நான் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கி முதல் மாணவியாக வந்தபோது கப் ஒன்றைப் பரிசளித்தனர்.

விழா முடிந்து வீடு திரும்பியபோது வாசலிலேயே அம்மா ""என்ன கொடுத்தார்கள்?" என்று உற்சாகமாய்க் கேட்டபோது அதைக் காதில் வாங்காமல் உள்ளே படுத்துக்கொண்டு பேப்பரில் மூழ்கியிருந்த அப்பாவிடம் ஓடி கப்பைக் காண்பித்தேன்.

அப்படிச் செய்தது அம்மாவை அலட்சியப்படுத்துவதாகிறதென்றோ அதனால் அம்மா வருத்தப்படுவாள் என்றோ அப்போது எனக்கு உறைக்கவில்லை.

படுக்கையை ஈரமாக்கிவிட்டு அழும்போது நடுராத்திரி நல்ல உறக்கத்திலிருந்தாலும் உடன் எழுந்து வந்து எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு அப்படியும் இப்படியும் உலாவியபடி தூங்க வைப்பது… ஊரெல்லாம் சுற்றி வந்து சோறூட்டுவது… ஒழுகும் மூக்கைச் சேலைத் தலைப்பால் துடைத்துவிடுவது… உடம்பு கொஞ்சம் சூடேறினாலும் ராத்திரி முழுக்கத் தூங்காது கவனித்துக்கொள்வது… எல்லாமே அம்மாவின் வேலைகள்தாம்…!

வேலை செய்து செய்து உடம்பையும் உருவத்தையும் பாழாக்கிக் கொண்ட அம்மாக்கள் ஒருவரா? இருவரா? அசல் கணக்கு வைக்கத்தான் முடியுமா?

என் மூத்த மகள் குழந்தையாக இருக்கும்போதே ஓர் அலாதி சுகமளிக்கும் எண்ணெய்க் குளியலைத் துறந்துவிட்டேன். அவளைத் தூங்க வைத்து அப்பாடா என ஆசுவாசமடைந்து குளிக்கச் செல்வேனோ இல்லையோ, யாரோ அடித்துவிட்டாற்போல் மூச்சு பிடித்து அழுகை. இன்னும் எங்கே குளியல்? இரண்டு குவளை கொட்டிக்கொண்டு ஈர உடம்பிலேயே புடவையைச் சுற்றிக்கொண்டு அழும் குழந்தையை இடுப்பில் ஏற்றிக்கொண்டு சமாதானப்படுத்தும் தருணங்களில் தலை வாரி, பொட்டு வைத்துக் கொள்ளும் எண்ணமே எழாது.

பக்கத்து வீட்டு டீச்சரம்மா குழந்தைகள் பிறக்குமுன் கஞ்சி போட்ட காட்டன் புடவைகள்… வெங்கடகிரி புடவைகளை நறுவிசாய் கொசுவம் வைத்து உடுத்திக்கொண்டு அழகாய் பொம்மைபோல் தயாராவாள்.

இப்போதானால் குழந்தைகள் பராமரிப்பு… சமையல்… புருஷனுக்குப் பரிமாறி தானும் ஒரு கவளம் விழுங்கி புருஷனுக்கு மதிய உணவு கட்டி… பிள்ளைகளைச் சாப்பிட வைத்து… அவர்களுக்கு வேண்டியதைக் கூடைகளில் அமர்த்தி… புடவைக்கு ஜாக்கெட் பொருந்துகிறதா எனும் கவனமின்றி வழுக்கும் நைலெக்ஸ் புடவையை பின் வைத்துச் சிறைப்படுத்தி… கடைக்குட்டியை "கிரச்'சில் ஒப்படைத்து அலுவலகம் ஓடி… அவசரம் அவசரமாய் வருகைப் பதிவு செய்வதற்குள்ளேயே பொழுது விடிந்து விடுகிறது.

எங்காவது வெளியில் செல்லும்போது… பண்டிகை நாள்களில் வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள யார் வீட்டுக்காவது செல்லும்போதுகூட நன்றாய் உடுத்திக்கொள்ள முடிவதில்லை. குழந்தையைத் தூக்கிக்கொள்ள வேண்டுமே! நிமிடங்களில் கசங்கிவிடும். "எனக்கு இந்த நைலெக்ஸ் புடவை என்றாலே ஒரே எரிச்சல். ஆனாலும் அதைத்தான் உடுத்திக்கொள்ள வேண்டும்" என்று பல தடவை என்னிடம் ஆதங்கப்பட்டிருக்கிறாள் டீச்சரம்மா.

இந்த அப்பாக்கள் ஏன் குழந்தைகளைத் தூக்கிக் கொள்வதில்லை? சமீபத்தில் "பெண்களின் உரிமைகள்' மீதான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டேன். பெண் உரிமை குறித்து மிகுந்த அக்கறையுடன் கட்டுரைகள் எழுதுபவர்… இத் தலைப்பில் சொற்பொழிவாற்றுபவர்… இப்படியானவர்களின் மனைவிகள்தாம் குழந்தைகளைத் தூக்கிக் கொள்கிறார்கள்…! என்பதை அன்று கண்ணாரப் பார்த்தேன்.

பெற்றெடுக்கும் தாய் மட்டுமே அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டுமென ஆண் எதிர்பார்க்கிறான்.

குழந்தைகளும் அப்படித்தான்.

ஏன் செய்ய வேண்டும் என பாவம்… அப்பாவி அம்மா மட்டும் நினைக்கவே மாட்டாள்.

வேண்டுமென்றே உன்னை நான் அலட்சியம் செய்யவில்லை என்று இப்போது என் அம்மாவிடம் சொன்னால்…?

என்ன செய்வாள்…?

வாஞ்சையுடன் சிரிப்பாள்.

அழைப்பு மணி ஒலிக்க… கதவு திறந்தேன்.

""மூன்று மணி ஆயிட்டது. நீங்க இன்னும் வரலையேன்னு நானே வந்துட்டேன்."

அதற்குள் மூன்றாகிவிட்டதா? தினமும் நாங்களிருவருமாய் பள்ளிக்கூடம் சென்று என் சின்னப்பெண்ணையும் அருணாவின் பையனையும் கூட்டி வருவோம். இன்று என் தீராச் சிந்தனையில் அதை அடியோடு மறந்துவிட்டிருந்தேன்.

""இதோ வந்துட்டேன்…" போட்டது போட்டபடிவிட்டு செருப்பணிந்து வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.

இப்போது புடவை கசங்கியிருக்கிறதா… முடி கலைந்திருக்கிறதா… முகத்தில் பவுடர் இருக்கிறதா என்பதிலெல்லாம் அடியோடு கவனமிருப்பதில்லை. இதே படிக்கும் காலத்திலானால் இப்படி என்றேனும் வெளியில் கிளம்பியதுண்டா? குறைந்தது பத்து தடவையாவது கண்ணாடியில் பார்த்துக் கொண்டுதானே காலை வெளியே வைப்பேன்?

தன் தோற்றம் குறித்துக் கவலைப்படாமல் கசங்கிய உடை, கலைந்த கேசத்துடன் நடமாடும் அம்மாவைப் பார்த்து எத்தனை நூறு முறை எரிச்சல்பட்டிருக்கிறேன்!

இப்போது என் அவதாரத்தைப் பார்த்து என் மூத்த மகள் எரிச்சலடைந்ததும் எத்தனை தடவை அரங்கேறியிருக்கிறது!

வேகமாய் நடந்து கொண்டிருந்தவள் சற்றே பின்னால் வந்த அருணாவைப் பார்த்தேன். ""என்ன இவ்வளவு மெதுவா நடக்கறே?"

""கால்ல சுளுக்கு' அதான்…"

""அடடா… எப்படி ஆச்சு? ஏதாவது ஆயின்மெண்ட் தடவியிருக்கயா?"

""சைக்கிள்லர்ந்து விழுந்துட்டேன். காலெல்லாம் சிராய்ச்சிருக்கு கூட…" புடவையை சற்று தூக்கிக் காண்பித்தாள்.

""சைக்கிளா…?" குழப்பத்துடன் கேட்டேன்.

""..உம்… அடுத்த வருஷம் குழந்தைகளை சென்ட் ஆன்ஸ் ஸ்கூல்ல சேர்க்கலான்னு இருக்கோம். ரொம்பத் தூரம் இல்லையா… ரெண்டு வேளையும் ரிக்ஷான்னா ஏகத்துக்கு செலவாகும். அதுமட்டுமில்லாம பெரியவ மியூசிக் கிளாஸ்ல சேர்ந்திருக்கா. தினமும் அங்க போய்ட்டு வர சிரமமா இருக்குதுங்கறா. சின்னதா ஏதாவது வண்டி வாங்கிட்டா பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போகலாம். எனக்கானால் சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. அது தெரிந்தால் டூ வீலர் ஓட்டுவது சுலபமாம். அதனால்தான் தினமும் பொழுது விடிந்ததும் கிரவுண்டில் சைக்கிள் பழகிட்டிருக்கேன். இன்னிக்கி கீழே விழுந்துட்டேன்". அருணா சொல்லிக்கொண்டிருக்கும்போது பள்ளிக்கூடம் நெருங்கிவிட்டோம். பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வீடு திரும்பினோம்.

மாலையில் பள்ளியிலிருந்து வந்த பெரியவன் முகத்தில் சுரத்தே இல்லை. ""என்னாச்சுடா?" என்று கேட்டால், ""நல்லாத்தானே இருக்கேன்?"னு ஏதோ சொன்னானே தவிர விஷயத்தைச் சொல்லவில்லை.

பெரிய பெண் மட்டும் அழைப்பு மணி ஒலிக்கும்போதெல்லாம் குதித்துக் கொண்டு ஓடி கதவைத் திறந்து பார்த்து லேசான ஏமாற்றத்துடன் உள்ளே வருகிறாள். உள்ளும் வெளியும் சூடுபட்ட பூனையாய்த் திரிந்து கொண்டிருப்பவளைப் பார்த்து ""என்ன விஷயம், இவ்வளவு சந்தோஷமா இருக்கே?' என்று கேட்டபோது "ஒண்ணுமில்லே' என்கிறாளே தவிர அவளும் என்ன நடந்ததெனச் சொல்லவில்லை.

மணி ஏழை நெருங்க… அழைப்பு மணி ஒலித்ததும் ஓடிச் சென்று கதவு திறந்த பெண் அப்பாவைப் பார்த்ததும் முகமெங்கும் பூக்களாக… அவர் வீட்டினுள் வருமுன்பே "புரோகிரஸ் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க…" என்றாள் உற்சாகத்துடன்.

அப்பா பதில் கூறு முன்பே ""கிளாஸ் ஃபஸ்ட் வந்தா எக்ஸ்கர்ஷன் அனுப்புவதாய்ச் சொன்னீங்க இல்லே!" என்றாள்.

""ஓ… கண்டிப்பாய். நல்ல கவுன்கூட வாங்கித் தரேன்.." என்றவரிடம் ரிப்போர்ட்டைக் கொடுத்தாள்.

எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள் என்றுகூடப் பார்க்காமல் உடன் அதில் கையெழுத்திட்டார் அப்பா.

தேர்வுகள் பிள்ளைகளுக்கா? அவை அம்மாக்களுக்கானதாயிற்றே! இரவில் படித்தபடி தூங்கிவிடும் பிள்ளைகள் சரிந்து தரையில் விழுந்து விடாது அவர்கள் முதுகில் தன் முதுகை அண்டை கொடுத்து… உறக்கத்தின் அயர்ச்சியில் மூடிக்கொள்ளும் இமைகளை டீ டிகாக்ஷனால் மெல்ல ஒற்றியெடுத்து நிமிர்த்தி உட்கார வைத்து படிக்கச் செய்து பரீட்சைகள் எழுத வைப்பது அம்மாக்கள்தாமே!

புரோகிரஸ் ரிப்போர்டில் கையெழுத்து மட்டும் அப்பாக்களுடையது! அதுதொடர்பான ஆனந்தம் கொண்டாட்டம் வைபவம் எல்லாமே தந்தைக்கு மட்டுமானதா?

""உன்னோடது எங்கடா?" பெரியவனைக் கேட்டேன். ""இன்னும் கொடுக்கவில்லை" என்றான். "கொடுக்கவில்லையா' என அவர் சந்தேகத்துடன் அதட்டியதும் அவன் மிரட்சி அதிகமாயிற்று. அவனைத் தாஜா செய்து நல்லதனமாய்க் கேட்டதும் "கொடுத்தார்கள்' என்று முனகியபடி பையிலிருந்து ரிப்போர்ட் எடுத்து நீட்டினாள். இதுவரை தொண்ணூறு தொண்ணூற்றைந்து என்று வந்த மதிப்பெண்கள் இப்போது எழுபது, எழுபத்தைந்துக்கு இறங்கியிருந்தது. ஓ… இதான் சங்கதியா இவன் இப்படி இருப்பதற்கு…?

முளைத்து மூணு இலை விடலே. இதுக்குள்ள இவ்வளவு பொய் பேசத் துணிந்துவிட்டான். நீ அப்படி என்னதான் கிழிக்கறே… பிள்ளைகளைக் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கறது… இவன் இப்படி பொய் பேசப் பழகிட்டா பின்னால் எவ்வளவு கஷ்டம்… நல்லாத்தான் இருக்கு நீ பிள்ளைங்களை வளர்க்கற லட்சணம்…" சம்பந்தமே இல்லாமல் என் மீது பாய்ந்தார் அவர். அபாண்டமாய் என் மீது பழிபோட்டார்.

வளர்ப்பு…?

என் மூத்த அக்காவின் அழகையும் அமரிக்கையையும் பார்த்து கொஞ்சம் குறைந்த வரதட்சணைக்கு மாப்பிள்ளை கிடைத்ததும் ""என் பெண்டீ அவள்…" என இறுமாப்பாய் நெஞ்சு நிமிர்த்திய அப்பா, என் தங்கை காதலித்த பையனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கறாராய்க் கூறியபோது "பெண் குழந்தைகளை இப்படித்தான் வளர்ப்பதா… எந்நேரமும் அவங்க மேல் ஒரு கண் இருக்க வேண்டாம்… ரொம்ப நல்லாத்தான் வளர்த்திருக்கே போ…" என்று அடிக்கும் அளவிற்குச் சென்றுவிட்டார் அப்பா.

""என்ன… அப்படியே ஆணியடித்ததுபோல் உட்கார்ந்திருக்கே. இந்த வேளை சாப்பாடு கிடையாதா?"அவர் சத்தம் போட… சமையலறைப் பக்கம் சென்றேன்.

ரசக் கிண்ணத்தை அடுப்பிலிருந்து இறக்கியபோது என் பார்வை அக் கரித்துணி மீது நிலை குத்தி நின்றது. கஞ்சி வடிக்க… அடுப்பிலிருந்து பாத்திரங்களை இறக்க… அடுப்பில் பண்டங்கள் தயாராகையில் அவற்றைக் கிளறி விடும்போது அவை நகராமலிருக்கக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள… கை துடைத்துக்கொள்ள… எப்படி எத்தனை எத்தனையோ வேலைகளுக்கு கரித்துணி எனப்படும் கைத்துணி அவசியம்.

ஆனால் எவராவது எப்போதாவது ஒரு மதிப்பு மிகுந்த பொருளாய் அதை அங்கீகரித்ததுண்டா…?

வாரப் பொழுதாய் சமையலறையில் உழைத்து தன் நிறத்தை வடிவத்தை முழுசாய்த் தொலைத்துவிட்ட இந்த என் அம்மாவின் ரவிக்கை, அம்மாவை வெகுவாய் நினைவுபடுத்தியது.

அல்லும் பகலும் அனவிரதமும் குழந்தைகளின் தேவைகளுக்காய் உழைத்து… ஓடாய்த் தேய்ந்து… உடம்பின் சக்தி மொத்தத்தையும் அவர்களுக்கு தாரை வார்த்து தன்னை இழக்கும் அம்மாவிற்கும் இக் கைத்துணிக்கும் என்ன வித்தியாசம்?

அன்று என் அம்மாவை நான் அலட்சியம் செய்ததுபோல் இன்று என் குழந்தைகள் என்னை லட்சியம் செய்வதில்லை. இதுதான் ஜானகிக்கும் நடந்திருக்கிறது. நாளைக்கு அவள் பிள்ளைகள் மற்றும் நான் பெற்றெடுத்தவர்களுக்கும் இதே நிலைமை எதிர்படும்.

காலம் மாறி நவீன உபகரணங்கள் எத்தனையோ வீட்டை அலங்கரித்தாலும் சமையலறையினின்று மாயமாகாத கரித்துணிபோல் நாகரிகப் பிரபஞ்சம் நம்மைச் சுற்றி வியாபித்துக் கொண்டிருந்தாலும் அம்மாவின் கஷ்டங்கள் என்றைக்கும் அம்மாவினுடையதே!

- குப்பிலி பத்மா