ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளியும், சாக்ஷி மாலிக் வெண்கலத்தையும் வென்றதைப் பார்த்ததும் உங்கள் வீட்டுச் சுட்டிகளும் விளையாட்டுகளில் அசத்த வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்குமே.. அதற்கு தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் தரும் டிப்ஸ்கள் இதோ:
பிள்ளைகளுக்கு இரண்டு வயதில் ரைம்ஸ் சொல்ல பழக்கப்படுத்துவதுபோல விளையாட்டை அதன்விதிகளோடு விளையாட பயிற்சி அளியுங்கள். மூன்று வயதிலிருந்து தினமும் பத்து நிமிடம் ஓடுவதற்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் அவர்களின் தசைகள் விரைவில் விளையாட்டுக்குப் பழக்கபடும்.
உங்கள் பிள்ளைகளை விளையாட்டு வீரராக்க ஆசைப்பாட்டால், அவர்களைச் சேர்க்கும் பள்ளியில் விளையாட்டு மைதானம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குழந்தைகளைப் பள்ளியில் விளையாட அனுமதிக்கிறார்களா? என்பதை அவ்வப்போது பிள்ளையிடம் கேட்கத் தவறாதீர்கள்.
ஐந்து வயதில் சைக்கிள் ஓட்டப் பயிற்சி கொடுப்பது மிக மிக அவசியம். இதனால் அவர்களின் உடல் நரம்புகள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஏழு வயதில் இருந்தே பள்ளி, மாவட்டம், மாநிலம் சார்ந்த போட்டியில் அவர்களைப் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒன்பது வயதிற்கு முன்னர் அவர்களுக்கு விளையாட்டில் முழு ஆர்வத்தை ஏற்படுத்துவது அவசியம்.டி.வி பார்க்கும்போதும்கூட விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளை அவர்களுடன் சேர்ந்து பார்த்து அந்த விளையாட்டுப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கூறுங்கள்.
பத்தாவது வயதில் இருந்தே மூச்சுப்பயிற்சி, தசை வலிமையடைய பயிற்சி, மனதை ஒருங்கிணைக்க பயிற்சி என பல பிரிவிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
11 வது வயதில் அவர்கள் எந்த விளையாட்டில் ஆர்வம், திறமையுடன் இருக்கிறார்கள் என்பதில் பெற்றோர்களாகிய நீங்கள் தெளிவு பெறுவதே முதன்மையானது.
உங்கள் பிள்ளைக்கு எந்த விளையாட்டை விரும்புகிறார்களோ அந்த விளையாட்டின் சிறந்த பயிற்சியாளரிடம் 12 ம் வயதிற்குள் சேர்த்து விடுவதே எதிர்கால வெற்றிக்கு சரியான தொடக்கமாக அமையும்.
விளையாட்டில் சிறந்த வீரராக மாறி நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டுமானால், குறைந்தது தினமும் அவர்கள் நான்கு மணிநேரமாவது பயிற்சி எடுக்க வேண்டும். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அவர்கள் தகுதி பெற்ற பின் விளையாட்டில் வெற்றி, தோல்வி இரண்டையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ள அவர்களை உளவியல் ரீதியாக பழக்கப் படுத்துங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகளை காய்கள், பழங்கள், பயறுவகைகள் என ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட பழக்கபடுத்தி அவர்களை விளையாடும் திறனோடு வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை.
உங்கள் பிள்ளைகளின் விளையாட்டுப் பயணம் பெரும் வெற்றியை நோக்கி தொடங்கட்டும்.