'எல்லோரும் குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்' சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்'னு சொல்றாங்க. ஆனா, அதை எப்படி சொல்லித் தர்றதுன்னு தெரியல. அதைப் பத்தி சொன்னா, எத்தனையோ அம்மாக்களுக்கு உதவியா இருக்கும்!'
இந்த வாசகி கேட்ட கேள்வி எனக்கு லட்சக்கணக்கான அம்மாக்கள் கேட்ட கேள்விபோல் சத்தமாக காதில் ஒலிக்கிறது.
'என் மூணு வயசு வாண்டு செல்போன்ல என்னவெல்லாம் பண்ணுது தெரியுமா?' என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அம்மாக்களும், ஐந்து வயதுக் குழந்தைக்கு 'டேப்' (tab) வாங்கித் தரும் அம்மாக்களும், தங்கள் குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்' சொல்லித்தருவதில் அக்கறை காட்டுவதில்லை. பெற்றோர்கள் செய்யும் இந்தத் தவற்றால், அவர்களைவிட அவர்களது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது வேதனையான விஷயம்.
குழந்தைகளுக்கு எதிரான 80% பாலியல் குற்றங்கள், உறவு, நட்பு வட்டம் என்று நன்றாக அறிந்தவர்களாலேயே நிகழ்கிறது என்ற உண்மையை மூளையில் பதிய வையுங்கள். இன்றைய அவசர உலகத்தில் பணிக்குச் செல்லும் பெற்றோர்கள், 'நான் வர்ற வரைக்கும் பக்கத்து வீட்டுல இரு', 'ஸ்கூல் பஸ்ல இருந்து இறங்கினதும், பிக்-அப் பண்ண அம்மா வரலைன்னா அந்த தெருமுக்குக் கடையில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்திரு' என்றெல்லாம் யார் யாரையோ நம்பி தங்கள் குழந்தைகளை விடும் சூழலில் இருக்கிறார்கள். அதை வக்கிரபுத்தி கொண்டவர்கள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ இதற்குப் பெற்றோரும் காரணமாகிறார்கள்.
பாலியல் வன்முறைக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும், குட் டச், பேட் டச் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அது சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தால், தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே அறியாத அந்தச் சூழலில் இருந்து அவர்கள் தப்பித்திருக்கலாம். சமீபத்தில் என்னிடம் ஒரு ஆறு வயதுச் சிறுமியை அழைத்து வந்தார்கள். குழந்தையின் பக்கத்து வீட்டுப் பையன், அவள் அவன் வீட்டில் தனியாக விளையாடும்போது தவறான படங்களைப் போட்டுக்காட்டி, அதில் வருவது போல் செய்ய வேண்டும் என்று அவளை நிர்பந்தித்திருக்கிறான். அவளும் அதை ஏதோ விளையாட்டு என்றே நினைத்துச் செய்திருக்கிறாள். இதுவே அவளுக்கு 'டச்'கள் பற்றி அவள் அம்மா முன்கூட்டியே சொல்லியிருந்தால், 'இதெல்லாம் பேட் டச்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க. அப்படி டச் பண்றவங்களை எங்கம்மாகிட்ட வந்து சொல்லச் சொல்லியிருக்காங்க...' என்று அந்தக் குழந்தை பேசியிருந்தால், 'காப்பாத்துங்க' என்று கத்தியிருந்தால் அவன் பயந்து விலகியிருப்பான்.
குட் டச், பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கலாம்? அது பற்றிப் பேசும்போது, குழந்தைகளைத் தனிமையில் அழைத்து, ரகசியம் சொல்வது போல பேசத் தேவையில்லை. அப்படிச் சொல்லும்போது, 'அதுல ஏதோ இருக்கு...' என்ற குறுகுறுப்பு அவர்கள் மனதில் முளைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, டி.வி பார்க்கும்போது, பார்க் சென்றிருக்கும்போது என்று இயல்பான ஒரு பொழுதில், 'உனக்கு அம்மா ஒரு புது பேபி சோப் வாங்கியிருக்கேன். அப்புறம் செல்லம்... நீ குளிக்கும்போது அம்மா, அப்பாவைத் தவிர வேற யாரையும் பாத்ரூம்குள்ள விடக் கூடாது சரியா?' என்று பேச்சின் ஊடே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
'கன்னம், கை, உச்சந்தலைனு இங்கயெல்லாம் உன்னை யாராச்சும் செல்லமா, சாஃப்ட்டா, ஒரே ஒரு தடவை தொட்டா... அது குட் டச். அதுக்கு மேல மறுபடியும் மறுபடியும் தொட்டுட்டே இருந்தாலோ, மார்பு, இடுப்பு, பின்பக்கம், பிரைவேட் பார்ட், தொடையில் எல்லாம் யாராச்சும் உன்னைத் தொட்டாலோ... அதெல்லாம் பேட் டச். அப்படி யாராச்சும் செய்தா, சட்டுனு அவங்ககிட்ட, 'நீங்க என்னை பேட் டச் செய்றீங்க. எங்கம்மாகிட்ட சொல்லிடுவேன்'னு கோபமா சொல்லிடணும். அப்படி செஞ்சவங்களை வந்து அம்மாகிட்ட உடனே சொல்லணும். உனக்கு நல்லா தெரிஞ்ச பக்கத்து வீட்டு அண்ணா, ஸ்கூல் ஆட்டோ டிரைவர், எதிர் வீட்டுத் தாத்தா, சொந்தக்கார மாமானு யாரா இருந்தாலும், எல்லாருக்கும் இதே ரூல்தான்.
உன்னோட பிரைவேட் இடத்தை யாரையும் தொடவிடக்கூடாது. யாரையும் உதட்டுல முத்தம் கொடுக்க விடாதே. உன்ன யாராவது டிரெஸ் கழட்டச் சொன்னா, அதை செய்யவே கூடாது. கஷ்டப்படுத்தி கட்டிப்புடிச்சா, 'காப்பாத்துங்க'னு கத்தணும். யாரையும் உன்னைத் தொட்டுப் பேச அனுமதிக்கக் கூடாது. உன் கையைப் பிடிச்சு இழுத்து அவங்களை தொட வெச்சா, தொடாதே. தெரியாதவங்க யாராச்சும் உன்னைத் தொட்டுப் பேசினா, 'என்னைத் தொடாதீங்க'னு அவங்ககிட்ட சத்தமா சொல்லணும்; 'பாப்பா இங்க வாங்க'னு தனியா கூப்பிட்டா போகவே கூடாது.
இதெல்லாம்தான் பேட் டச். இதெல்லாம்தான் மிஸ்பிஹேவ் பண்றது. இப்படி எல்லாம் செய்றவங்ககிட்ட தைரியமா எதிர்த்து ரியாக்ட் செய்யணும். பயந்தா, 'இந்தப் பாப்பா பயப்படுது, அப்போ நம்மை யார்கிட்டயும் சொல்லிக் கொடுக்காது'னு அவங்களுக்குத் தைரியம் வந்துடும். அதுவே நீ தைரியமா, கோபமா, சத்தமா, 'இப்படி எல்லாம் யாராச்சும் செய்தா எங்கம்மாகிட்ட சொல்லச் சொல்லியிருக்காங்க. நீங்க செஞ்சதை நான் அம்மாகிட்ட சொல்லுவேன்'னு சொன்னா, 'என்னைத் தொடாதீங்க'னு கத்தினா, யாராச்சும் பேட் டச் செய்யும்போது, பக்கத்து ஹாலிலோ, ரூமிலோ இருக்கிறவங்களைக் கத்திக் கூப்பிட்டா, 'அய்யோ, இந்தப் பொண்ணு ரொம்ப தைரியசாலி!'னு அவன் பயந்துடுவான். நீ தைரியசாலியா இருப்பியா... சோட்டா பீம் மாதிரி, சூப்பர்மேன் மாதிரி! எப்பவும் யாருக்கும் பயப்படவே கூடாது. யார் என்ன சொன்னாலும், செஞ்சாலும் அப்போவே, அன்னிக்கே அம்மாகிட்ட வந்து சொல்லிடணும்!'' இப்படி விரிவாக, சகஜமாகப் பேசுங்கள். மேலும், 'குட்டிம்மா... அம்மா குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்தேனே ஞாபகம் இருக்கா? அதுக்கு அப்புறம் அப்படி யாராச்சும் உங்கிட்ட பிஹேவ் பண்ணினாங்களா..?' என்று அவ்வப்போது விசாரித்துக்கொள்ளுங்கள்.
'ஏம்மா பேட் டச் செய்யக் கூடாது?' என்று கேட்பது குழந்தைகளின் இயல்புதான்! 'அம்முக்குட்டி... ரோட்டுல ஒரு கல் இருந்தா, அத யாரு வேணும்னாலும் எடுத்து விளையாடலாம். அதுவே ஒரு வைரக்கல்லா இருந்தா அதை யாரும் தொடாம பத்திரமா வீட்டுக்குள்ள வெச்சு பாதுகாப்போம்ல?! நீ எப்பவும் எங்களுக்கு வைரம் மாதிரி. உன்னைப் பத்திரமா பார்த்துக்குறோம். சரியா?' என்றோ, அல்லது கதைகளாகவோ குழந்தை கன்வின்ஸ் ஆகும் பதிலைச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நாம் சொல்லும் விதம் மிகவும் முக்கியம். முடிந்தவரை, குழந்தைகளைக் குழுவாக வைத்து இதையெல்லாம் சொல்வது நல்லது. அமைதியாகக் கேட்பார்கள், மனதில் பதிவார்கள். 'இதெல்லாம் இந்த உலகத்துல எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானதுதான். ஏதோ நமக்கான ஸ்பெஷல் ரகசியமோ, விஷயமோ இல்லை' என்று அதை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள். குழந்தையின் 'இன்னோசன்ஸ்' பொக்கிஷம். அதைச் சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் பெற்றோரின் கடமை.
'குட் டச்.. பேட் டச்' சொல்லிக் கொடுப்பதில் தாமதம் வேண்டாம். 3 - 4 வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். நாளைய சமூகம் எப்படி இளைஞர் கையில் உள்ளதோ, அதேபோல் நாளைய இளைஞர்கள் பெற்றோர்கள் கையில் இருக்கிறார்கள்.
குட் டச், பேட் டச்... சில தகவல்கள்!
* குட் டச், பேட் டச் பற்றி சரிவர சொல்லிக்கொடுத்து வளர்க்கும் குழந்தைகளில் 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தவறான பாதையில் போகமாட்டார்கள். பாலியல் வன்முறையில் இருந்தும் தங்களைப் தற்காத்துக்கொள்வார்கள்.
* உங்கள் குழந்தையின் உடலிலோ, நடவடிக்கையிலோ சிறு மாற்றம் தெரிந்தாலும் தாமதிக்காமல் அதற்கான காரணத்தைக் கண்டறியுங்கள்.
* பள்ளிகளில் மாணவர்களை குழுவாக பிரித்தோ அல்லது மொத்தமாக உட்கார வைத்தோ 'குட் டச் பேட் டச்' பற்றி கற்றுக்கொடுக்கச் சொல்லி வலியுறுத்துங்கள்.
* குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தயங்காமல் நடவடிக்கை எடுங்கள். இதனால் அவர்கள் தண்டிக்கப்படுவதுடன், வேறு குழந்தைள் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படும்.