'கொஞ்சம் எழுதுங்கள்; பின், தொலைதூரத்தில் உள்ள ஒரு பொருளைப் பாருங்கள். கண்களுக்கு நாம் தரக் கூடிய சிறந்த பயிற்சி இது...' என்ற கண் மருத்துவர் கூற்றுப்படி, அமீரகத்தில்(எமிரேட்ஸ்) ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த நான், தங்கியிருந்த அறையின் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்தபடி இருந்தேன்.
ஒரு புறா, மற்றொரு புறாவை கொத்தி, 'இந்த இடத்தை விட்டுப் போ...' என்று ஆக்ரோஷத்துடன் துரத்துகிறது. சிறிது நேரம் எழுதி முடித்து, திரும்ப வந்து பார்த்தால், இரு புறாக்களும் எங்களுக்குள் அப்படி ஒரு பகைப் போர் நடக்கவே இல்லை என்பது போல், அருகருகே சினேகமாய் அமர்ந்திருந்ததை பார்த்ததும், எனக்குள் வியப்பு மேலிட்டது.
ஒரு புறா, மற்றொரு புறாவை கொத்தி, 'இந்த இடத்தை விட்டுப் போ...' என்று ஆக்ரோஷத்துடன் துரத்துகிறது. சிறிது நேரம் எழுதி முடித்து, திரும்ப வந்து பார்த்தால், இரு புறாக்களும் எங்களுக்குள் அப்படி ஒரு பகைப் போர் நடக்கவே இல்லை என்பது போல், அருகருகே சினேகமாய் அமர்ந்திருந்ததை பார்த்ததும், எனக்குள் வியப்பு மேலிட்டது.
உணவிற்காக, காமத்திற்காக போரிடும் இரு மிருகங்கள், சற்று நேரத்திற்கெல்லாம் அமைதியாகி விடுகின்றன. எதுவுமே நடக்காதது போல் ஒன்றாக உலா வருகின்றன. ஐந்தறிவில் இப்படி ஒரு பக்குவமா?
ஆனால், ஆறறிவு படைத்த மனிதன், தன் தாயின் அறிவுரை; தன் மதத்தின் உயரிய சாரங்கள்; தான் கற்ற கல்வி; வாழ்வு முழுக்கப் பெற்ற அனுபவப் பாடம் இவ்வளவையும் மூளையில் பதித்து கொண்டபின், எவருடனாவது பகைமை ஏற்பட்டால், அதை விடாமல் பிடித்துக் கொள்கிறான்.
நெஞ்சில் மாறாத வன்மத்துடன், எப்போது எதிரியை மட்டம் தட்டலாம், எப்போது காலை வாரலாம், எப்படி வீழ்த்தலாம் என, மனக் கணக்கு போடுகிறான். சில நேரங்களில் இன்னும் ஒரு படி மேலே போகிறான்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், தம்மை ஒரு சொல் சொல்லி விட்டார் என்பதற்காக, 'எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வருமில்ல... அப்ப வச்சுக்கிறேன் அவனை...' எனக் கூறி, இதற்காக காலமெல்லாம் தருணம் தேடுகிறான்.
இவனுக்கு, இவனது ஓட்டுனர் உரிம எண் நினைவில் இல்லை; எவ்வளவு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டாலும், தன் பாஸ்போர்ட் எண் தெரியாது; வங்கிக் கணக்கு எண்களா... நிச்சயமாய் தகராறு தான். மனைவி, மகன்களின் தொலைபேசி எண்களோ... மொபைல் போனை உருட்டி தான் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பிறந்த நாள்... கிளீன் போல்ட்!
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன், எதிரியோடு நடந்த உரையாடலை சொல்லச் சொல்லுங்கள். கை தேர்ந்த நாடக நடிகன் போல, ஒரு வசனம் விடாமல் அப்படியே ஒப்பிப்பான்.
மனம் எதில் ஈடுபாடு கொள்கிறதோ அதில், மனிதனுக்கு, நினைவு நன்றாக இருக்கும் என்கிற விதிப்படி பார்த்தால், எதிரி மீது தான் இவனுக்கு கண், கருத்து எல்லாம் என்பது தெளிவாகிறது அல்லவா?
பகையுள்ளம் என்பது புகையுள்ளம்; மனம் என்பது பூக்கடை. அழகுடைய வாச மலர்களால் ஆன அதை, மேலும் அழகுறப் பராமரிக்காமல், கெட்ட எண்ணங்கள் எனும் சாக்கடையை அதில் ஊற்றலாமா?
எதிரிகளை பற்றிய நினைப்புகளை தூக்கி எறிந்து, ஆக வேண்டிய காரியங்களை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நம் வளர்ச்சி குன்றி, நாம் தேங்கிப் போவதற்கே வாய்ப்பு அதிகம்.
மும்பை ரிட்ஸ் ஓட்டலில் அறை மறுக்கப்பட்ட வள்ளல் அழகப்பர், அதை விலைக்கு வாங்கி, அதில் தங்கியதைப் போல், தனக்கு ஆங்கில நாளிதழை தர மறுத்த பெரியவரின் வாயால், பாராளுமன்றத்தில், ஆங்கிலத்திலான தன் கன்னிப் பேச்சை பாராட்ட வைத்த வலம்புரி ஜானைப் போல், எதிரி தந்த அவமானங்களை, உந்து சக்தியாக பயன்படுத்திக் கொண்டால், பகை உணர்வு நல்லது தான்!
- லேனா தமிழ்வாணன்