'அசுரர்கள், தேவர்கள் இவர்களில் நீங்கள் யார்?' என்ற கேள்வி எழுந்தால், நம் பதில், தேவர்கள் என்பதாக தான் இருக்கும். ஆனால், உண்மையில் நாம் யார் என்பதை, இக்கதையை படித்த பின், முடிவிற்கு வாருங்கள்.
சஹஸ்ர கவசன் எனும் அசுரன், இறைவனை நோக்கி கடுந்தவம் செய்து, வரம் பெற்றான். ஆயிரம் கவசங்களைக் கொண்ட அவன், 'என் ஒரு கவசத்தை எவன் உடைக்கிறானோ அவன் இறக்க வேண்டும்; கடைசி கவசமான ஆயிரமாவது கவசம் உடைந்தால் தான், என்னை மரணம் தழுவ வேண்டும்...' என்று கேட்டு, வரம் பெற்றான்.
இதன்பின், சஹஸ்ர கவசனின் அக்கிரமங்கள் அளவில்லாமல் போனது. அவனை எதிர்த்து, அவன் கவசத்தை உடைத்து இறப்பதற்கு, யாரும் தயாராக இல்லை.
இதனால், அவனது தொல்லைகள் தாளாமல், முனிவர்கள் நர - நாராயணர்களிடம் சென்று முறையிட்டனர்.
'உங்கள் துயரங்களை தீர்ப்போம்...' என்று வாக்களித்தனர் நர - நாராயணர். சஹஸ்ர கவசன் பெற்றுள்ள வரம் அவர்களுக்கு தெரியும். ஆனாலும், முனிவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி, முதலில், நரன் சென்று, சஹஸ்ர கவசனின் ஒரு கவசத்தை உடைத்து விட்டு, இறந்தார். நரனை உயிர்பித்த பின், நாராயணன், சஹஸ்ர கவசனுடன் போரிட்டு ஒரு கவசத்தை உடைத்து, இறந்தார். அவரை எழுப்பி, நரன் மறுபடியும் சஹஸ்ர கவசனின் இன்னொரு கவசத்தை உடைத்தார்.
இப்படியே மாறி மாறிக் கவசங்கள் உடைக்கப்பட்டன. கடைசியில், ஒரே ஒரு கவசத்துடன் இருந்த சஹஸ்ர கவசன், பயந்து, சூரிய பகவானிடம் அடைக்கலம் புகுந்து, உயிர் பிழைத்தான்.
ஒற்றைக் கவசத்துடன் இருந்த சஹஸ்ர கவசன் தான், சூரிய பகவானால், குந்திக்குப் குழந்தையாக அளிக்கப்பட்டான். அவன் பெயர், கர்ணன்!
அசுரனான அந்த சஹஸ்ர கவசன் தான் நாம். அவன் கடுமையாக தவம் செய்து வரங்களை பெற்றதைப் போல, நாமும் கடுமையாக உழைத்துப் படிப்பு, பதவி மற்றும் செல்வங்களை பெறுகிறோம். அதன்பின், அந்த அசுரனைப் போல ஆடக்கூடாத ஆட்டமெல்லாம் ஆடி, உழைத்து சேர்த்ததை உளுத்துப் போகச் செய்கிறோம்.
அந்த அசுரனை தண்டித்ததைப் போலவே, இறைவன் நம்மையும் தண்டிக்கிறார். ஆகையால், இதிகாசம் மற்றும் புராணங்கள் நம் சொந்தக் கதைதான்; தேவர்களாவதும், அசுரர்களாவதும் நம் செயல்களில் தான் உள்ளது.