Tuesday, June 30, 2015

குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கும் வழிகள்!

குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கும் வழிகள்!

புத்தகத்தின் பெயர்: கேரக்டர் மேட்டர்ஸ் (Character Matters)

ஆசிரியர்: தாமஸ் லிக்கோனா (Thomas Lickona)

பதிப்பாளர்: Touchstone


தாமஸ் லிக்கோனா எழுதிய 'கேரக்டர் மேட்டர்ஸ்' (Character Matters: How to Help Our Children Develop Good Judgment, Integrity, and Other Essential Virtues) என்னும் புத்தகம், குழந்தைகளுக்கு நல்ல பகுத்துணரும் திறன் (ஜட்ஜ்மென்ட்), நேர்மையாய் இருத்தல் மற்றும் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தேவையான இன்னபிற விஷயங்களைத் தெரிந்துகொள்ள நாம் எப்படி உதவுவது என்பது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட வழிகளைச் சொல்கிறது.



இன்றைக்கு நாம் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களான வன்முறை, பேராசை, லஞ்ச லாவண்யம், பணிவின்மை, லாகிரி வஸ்துகள் உபயோகம், செக்ஸ் கொடுமைகள் / அக்கிரமங்கள், பணியிடத்தில் நெறிமுறை தவறுதல் போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன தெரியுமா என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

'இவற்றுக்கெல்லாம் காரணம், நல்ல பண்புகள் இல்லாதது தான்' என்று சொல்லும் ஆசிரியர், அதனாலேயே நற்பண்புகளை வளர்ப்பதற்கு உதவுகிற கல்வி என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்றாகிறது. ஏனென்றால், குழந்தை கள் இன்றைக்கு இருக்கும் மொத்த ஜனத்தொகையில் சுமார் 25 சதவிகி தமே இருந்தாலும், எதிர்காலத்தில் இவர்களே நூறு சதவிகிதம் நாட்டின் குடிமக்களாவார்கள். நல்லதொரு குடிமக்கள் நிறைந்த நாடாக நாம் நம் நாட்டை மாற்ற நினைத்தோமே யானால், முதலில் நாம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தின் அவசியத்தைப் போதித்து, அவர்களை நல்ல குடிமக்களாய் ஆக்க முயற்சிக்க வேண்டும்.


இதில் இரண்டு வகையான பொறுப்பு நமக்கு இருக்கிறது. முதலாவதாக, அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் நாம் நடந்துகாட்ட வேண்டும். இரண்டாவதாக, சிறுவயதிலேயே நல்லொழுக் கங்களையும் பண்புகளையும் அவர்களிடத்தில் கொண்டுவர வேண்டும் என்பதை ஒரு பெரிய குறிக்கோளாக மனதில்கொண்டு செயல்பட வேண்டும்.


இந்தப் புத்தகம் ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நல்லொழுக்கம் என்பது தனிநபரின் நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கிறது என்பதில் தொடங்கி, நம்முடைய ஒட்டுமொத்த சமூகமும் ஒருங்கிணைந்து குழந்தைகளிடத்தில் நற்பண்புகளை எப்படி வளர்த்தெடுக்க முடியும் என்பது குறித்துச் சொல்கிறது.

நற்பண்புகள் என்றால் என்ன என்ற கேள்விக்கு நேரடியான பதில், தனிமையில் நேர்மைதான் என்று குறிப்பிடும் ஆசிரியர், இதுகுறித்த ஓர் ஆராய்ச்சியின் முடிவை புத்தகத்தில் கொடுத்துள்ளார்.


தொலைந்த பர்ஸ் என்ற இந்த ஆராய்ச்சி மிகவும் சுவையான முடிவுகளைத் தந்துள்ளது. ஐம்பது டாலர்கள் (அல்லது அதற்கு இணையான பணத்தினை) மணிபர்ஸ் உரிமையாளரின் விலாசம், தொலைப்பேசி எண் போன்ற விவரத்தை உள்ளே வைத்து சுமார் 2,500 மணி பர்ஸ்களைப் பல்வேறு நாடுகளில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டெலிபோன் பூத்துக்கள், நடைபாதைகள் போன்ற இடங்களில் போட்டுவிட்டு ஆராய்ச்சியாளர்கள் மறைந்திருந்தார்களாம். தனிமையில் நேர்மையைச் சோதித்த சோதனை இது.


இவற்றில் 56 சதவிகித மணிபர்ஸ்களே திரும்ப வந்ததாம். மீதமிருக்கும் 1,100 மணி பர்ஸ்களை எடுத்தவர்கள் உள்ளே உரிமையாளர் பெயர், விலாசம் மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருந்த போதிலும் அவற்றைக் கமுக்கமாக அமுக்கிக் கொண்டார்களாம்.


இதில் நாட்டுக்கு நாடு நியாயஸ்தர்களின் எண்ணிக்கை வேறுபட்டது என்கிறார் ஆசிரியர். நார்வே மற்றும் டென்மார்க்கில் 100 சதவிகிதம் பர்ஸ் திரும்பவந்ததாம். இத்தாலியில் 35 சதவிகிதமும், சுவிட்சர்லாந்தில் 35 சதவிகிதமும், ஹாங்காங்கில் 30 சதவிகிதமும், மெக்சிகோவில் 27 சதவிகிதமும், அமெரிக்காவில் 66 சதவிகிதமும் பர்ஸ்கள் திரும்ப வந்ததாம்.


இந்தக் கதையில் இருந்து அறியும் நீதி என்ன? கலாசாரம் நியாயஸ்தர்களை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது என்பதே. நியாயத்தை மதிக்கும் எண்ணத்தைக் கலாசாரமாக மாற்றிவிட்டால், அந்த இடத்தில் ஒழுங்கு நிலைத்து நிற்கும் என்பதுதான் என்கிறார் ஆசிரியர்.


சரி, நியாயமாய் இருப்பதைத் தூண்டுவது எது என்று கேட்கிற ஆசிரியர், இந்தத் தொலைந்த மணிபர்ஸ் சோதனையில் பர்ஸை திருப்பிக் கொண்டுவந்து தந்தவர்களிடம் எது உங்களை நியாயமாய் இருக்கத் தூண்டியது என்று கேட்டார்களாம்.


வயதில் சிறியவரானாலும் சரி, பெரியவரானாலும் சரி பலரும் சொன்னது, 'எங்களுடைய தாய் தந்தையர் நியாயமாய் நடந்துகொள்; அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைப்படாதே' என்று வலியுறுத்தியதுதான் என்றனராம்.


சிலர், என்னுடைய இறை நம்பிக்கை அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதே என்று சொல்வதால் என்றனராம்.

மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வேலையை இழந்து பொது இடங்களில் இருக்கும் பழைய பாட்டில்கள் மற்றும் டின்களைச் சேகரித்து விற்றுப் பிழைக்கும் ஒருவர், 'டெலிபோன் பூத்தில் கீழே உள்ள ட்ரேயில் பர்ஸ் இருந்ததைப் பார்த்து எடுத்தேன். நிறையவும் குறைவான உயரத்தில் இருக்கிறதே! ஒருவேளை உடல் ஊனமுற்ற வருடையதாய் இருக்குமோ என நினைத்தேன். கைகால் திராணியாய் இருக்கும் நம்மால் இதைச் சம்பாதிக்க முடியும். உடல் ஊனமுற்றவருக்கு இது நிறையப் பெரிய பணம் என நினைத்தே தேடிக் கண்டுபிடித்துத் திருப்பிக் கொடுக்க முயன்றேன்' என்றாராம்.


 'தன் நிலை மிகவும் தாழ்ந்திருந்த போதிலும் தனக்கும் கீழே இருந்து கஷ்டப்படுபவருடைய பொருளை எடுப்பது தவறு என நினைத்தது ஆச்சர்யமூட்டுவதாய் இருந்தது.'


''நீங்கள் பள்ளியில் ஆசிரியரா? நீங்கள் ஒவ்வொரு பாடத்துடனுமே நல்லொழுக்கங்களைச் சொல்லித் தரலாம். நல்ல மாணவனாய்/மாணவியாய் இருப்பதினால் என்ன பலன்கள் என்று சொல்லலாம்.


 எதிலும் உயர்ந்த நோக்கம் வேண்டும் என்று சொல்லுங்கள். எதிலும் நேர்த்தி முக்கியம் என்பதைப் புரியவையுங்கள். நீதி, நேர்மை, நியாயம் என்பதன் முக்கியத்துவத்தைப் புரியவையுங்கள்.


படிப்பதில் அவர்களால் பொறுப்பெடுத்துக் கொள்ள முடியும் என்பதை நெஞ்சார உணரும்படி நடந்துகொள்ளுங்கள். பேச்சு, பாடம் எடுத்தல், நடை, உடை, பாவனைப் போன்ற அனைத்திலுமே ஒழுக்கம் என்பது மிக முக்கியம் என்பது வெளிப்படும் அளவுக்குச் செயல்படுங்கள்.


 மிகவும் முக்கியமாக, ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் பள்ளி என்ற நிலையில் இருந்து மாற்றி ஒழுக்கமான பள்ளி என்ற நிலைக்கு உங்கள் பள்ளியை கொண்டுவர முயலுங்கள். பள்ளியில் இருக்கும் எல்லா பணியாளர்களையும் இந்த ஒழுக்கச் சிந்தனையை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.


எல்லாவற்றுக்கும் மேலாக நம் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் எந்த மாதிரியான நபராக எதிர்காலத்தில் உருவெடுப்பார்கள் என்பதை மனதில்கொண்டு செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள்.


 ஒழுக்கத்தைப் பயிற்று விற்பதிலும் கடைப்பிடிப் பதிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் பங்குதனை அதிகப்படுத்திக்கொண்டே செல்லுங்கள்.


மாணவர்களால் மாணவர்களுக்காக எனும்போது அதில் கிடைக்கும் ரிசல்ட்டே அலாதியானது'' என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.


பள்ளி, கல்லூரி சம்பந்தப்பட்ட அனைவருமே படிக்க வேண்டிய புத்தகம் இது என்றால் அது மிகையாகாது.