Saturday, May 3, 2014

கிரெடிட் கார்டு இருக்கிறதா...

கிரெடிட் கார்டுகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது. திரும்பின திசையெல்லாம் இலவசம் இலவசம் என்று அறிவிப்பு வைத்து, நம் சட்டைப் பையில் ஒரு பிளாஸ்டிக் அட்டையைத் திணித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால்...

 

  நிறைய கிரெடிட் கார்டு களோடு ஒரு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு வருகிறது. இலவச விபத்துக் காப்பீடுதான் அது. சரி, விபத்து ஏற்பட்டவுடனேயே இந்தக் காப்பீடு கிடைக்குமா? கிரெடிட் கார்டு ஆக்டிவ்வாக இருக்கவேண்டும். அதாவது, கிரெடிட் கார்டை பயன் படுத்தி பணம் எடுத்திருக்க வேண்டும். அப்போதுதான்,  இலவச காப்பீடு செல்லுபடி யாகும்.

   கிரெடிட் கார்டில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு போடப்படும் வட்டி, 2.95%. இது ஆண்டு வட்டியல்ல, மாத வட்டி. அதாவது, உங்களுக்குக் கிடைக்கும் சலுகை நாட்களுக்குப்பின், குறிப்பிட்ட தேதியில் பணத்தைக் கட்டவில்லையென்றால், இந்த வட்டி போடப்படும். அதுவும் பொருளை வாங்கிய முதல் நாளிலிருந்தே இந்த வட்டி கணக்கிடப்பட்டுவிடும்.

இது மாத வட்டி மட்டுமல்ல, கூட்டுவட்டியும்கூட. கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்து கணக்குப்போட்டுப் பாருங்கள். மாதத்துக்கு 2.95% என்றால், ஆண்டு ஒன்றுக்கு 35% முதல் 40% வரை அநியாய வட்டி!

    சரியான தேதிக்கு, கிரெடிட் கார்டு பணத்தைக் கட்டாத நிலையில், மேற்சொன்ன வட்டி மட்டுமல்ல, அதற்கு மேல் தாமதக் கட்டணம் என்று ரூ.250-யைத் போட்டுத் தாளித்துவிடுவார்கள்.அதையும் நீங்கள் கட்டத் தவறினால், அசல் தொகை, அதற்கு வட்டி, தாமதக் கட்டணம் எல்லாவற்றுக்கும் 2.95% வட்டி போட்டு அடுத்த ஸ்டேட்மென்ட் வந்துவிடும்.