எத்தனையோ தவறான செயல்களைச் செய்யும் மனிதர்களைப் பற்றிப் படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்,சந்திக்கிறோம். இவர்கள் இப்படிப் பாவம் செய்யக் காரணம் என்ன? மனிதர்கள் சக மனிதர்களுக்கெதிராக எவ்வளவோ பாதிப்புகளை ஏற்படுத்தக் காரணம் என்ன?
இந்தக் கேள்வி அர்ஜுனனின் மனதிலும் வந்தது. பகவான் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.
'கிருஷ்ணா ! மனிதன் பாவம் செய்வதை நோக்கி ஏன் இழுக்கப் படுகிறான்?' (கீதை 3.36)
'அர்ஜுனா ! காமம், க்ரோதம் இவைகளே மனிதன் பாவம் செய்வதற்குக் காரணம். நெருப்பைப் புகை மூடுவதுபோலவும், கண்ணாடியை அழுக்கு மூடுவது போலவும், கருவை கர்ப்பப் பை மூடுவதுபோலவும், காமத்தாலும் கோபத்தாலும் அறிவு மறைக்கப்படுகிறது. காமம் என்பது 'அறிஞனுக்கு சத்ரு. போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பு. இந்த்ரியங்கள், மனம் , புத்தி இவை காமத்தின் இருப்பிடங்கள். (கீதை - 3 - 38,39,40).
மகாகவி பாரதியும் இதைக் கூறுகிறார்.
பாரதி சொல்கிறார் ."மனம்தான் சத்ரு. வேறு நமக்குப் பகையே கிடையாது.
நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது. அடுத்துக் கெடுக்கிறது. மனம் தான் பகை. அதைக் கொத்துவோம் வாருங்கள். கிழிப்போம் வாருங்கள். வேட்டையாடுவோம் வாருங்கள்."
மகாபாரத்த்தில் இதுபற்றிய ஒரு கதை வருகிறது.
சுக்கிராச்சார்யார் தனது மகள் தேவயானியின் விருப்பத்துக்கிணங்க யயாதி மகாராஜாவைத் திருமணம் செய்து வைத்தார். யயாதி மகாராஜாவின் மனமோ, தேவயானியின் தோழி சர்மிஷ்டையிடம் சென்றது. தேவயானியை யயாதி மகாராஜாவுடன் அனுப்பும்போது, சுக்ராச்சார்யார் சொன்னார். 'மன்னா ! என் மகளுடன் இன்ப நிறைவுடன் வாழ்வாயாக. அவளது தாதியாக வரும் சர்மிஷ்டையையும் கௌரவமாக நடத்து. ஆயினும் அவளுடன் தனித்து உரையாடாதே. உடல் இன்பத்தையும் நாடாதே. தவறினால் உன்னை நீ இழப்பாய்'!
ஆனால் 'அடங்காத ஆசை போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பு அல்லவா?'. யயாதி தேவயானியின் மூலமாகவும் குழந்தைகளைப் பெற்றான். சர்மிஷ்டை மூலமாகவும் குழந்தைகளைப் பெற்றான். எவ்வளவு காலம் உண்மையை மறைக்க முடியும்? சர்மிஷ்டையின் குழந்தைகளுக்கும் யயாதியே தந்தை என்று தெரிந்ததும் தேவயானி கொதித்தெழுந்தாள். தந்தை சுக்கிராச்சார்யாருக்குத் தகவல் தெரிந்தது.
"மன்னா ! தர்மம் அறிந்த நீ , ஒழுக்கம் குன்றி, ஆசை என்ற நெருப்பின் வயப்பட்டு , உன்னை இழந்தாய். அதர்மம் செய்துவிட்டாய். உன்னை மூப்பு வந்து பீடிக்கட்டும்" என்று சாபம் விட்டார்.
யயாதியை உடனே இளமை அகன்று மூப்பு பீடித்தது. யயாதி மன்னித்துவிடும்படி கெஞ்சினான்.
"உன்னைப் பீடித்துள்ள இந்த மூப்பை உன் புதல்வர்களில் எவன் தனது இளமையை உனக்குத் தருவானோ, அவனிடம் நீ மாற்றிக்கொள்ளலாம். அவனே உனது ராஜ்யத்துக்கும் வாரிசாக ஆகட்டும்." என்றார் சுக்கிராச்சாரியார்.
இளமையில் மூப்பு
சர்மிஷ்டைக்குப் பிறந்த புரூ என்ற மகன் தந்தையின் கிழத்தனத்தைப் பெற்றுக்கொண்டு, அவனது இளமையை அவருக்குக் கொடுத்துவிடுகிறான். புரூ மூப்படைந்தான். யயாதி அவனுடைய இளமை நலன்களைப் பெற்று எழில்மிக்க வாலிபனாக மாறினான். ஆயிரம் ஆண்டுகள் இன்பங்களை அனுபவித்தான். மகனிடம் வந்தான். "மகனே ! ஆயிரம் ஆண்டுகள் இன்பத்தில் திளைத்தும் , ஆசை அடங்கவே இல்லை. அனுபவிக்க, அனுபவிக்க , ஆசைகள் விருத்தி அடைகின்றன. நெய்யை ஊற்ற ஊற்ற நெருப்பு அதிகமாக எரிவதுபோல, ஆசைகளும் அனுபவிக்க அனுபவிக்க அதிகம்தான் ஆகின்றன. எவ்வளவு அனுபவித்தாலும் பெண்ணும், பொன்னும், ஒருவனுக்குத் திருப்தியை உண்டாக்காது. அடங்காத ஆசை போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பு என நான் புரிந்துகொண்டுவிட்டேன்." எனச் சொல்லித் தனது 'இளமையை' பூருவுக்குத் திரும்பத்தந்துவிட்டு , தனது கிழத்தன்மையைப் பெற்றுக் கொள்கிறான். மகனுக்குப் பட்டம் சூட்டி விட்டு , தவம் செய்யப் புறப்பட்டுப் போய்விடுகிறான்.
நமக்கு இந்தப் புராண நிகழ்ச்சி புலப்படுத்துவது, ஆசை என்பது 'போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பு' என்பதைத்தான். தந்தையே தனது வெட்கத்தை விட்டு மகனிடம் இளமையைக்கூடக் கேட்கவைக்கும்.
அப்படியானால், ஆசைப்படுவதே தவறா! ஆசைதானே மனிதன் முன்னேறுவதற்கு அடித்தளமாக இருக்கிறது. திட்டம், முயற்சி , சிந்தனை, உழைப்பு , பலன் இப்படியே தானே மனித வாழ்க்கையும் , மனித இனமும் முன்னேறிச் செல்கிறது.
உண்மை தர்மமான ஆசைகள் தவறாகக் கருதப்படுவதில்லை. பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தில், தர்மத்துக்கு விரோதமில்லாத ஆசையும் நானே (தெய்வீகமே) என்கிறார்.
மகாகவி பாரதி, எது தர்மத்துக்கு விரோதமில்லாத தெய்வீக ஆசை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்:
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி !...
கடமையாவன - தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே
தன்னையாளும் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள வினாயகா ! வான்மறைத்தலைவா!
தன்னைத்தான் ஆளுந்தன்மைதான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
அசையா நெஞ்சம் அருள்வாய் !
'தன்னைத்தான் ஆளும் தன்மையே, நான்கு புருஷார்த்த பலன்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற பயன்களை நமக்குத் தரும். அவை 'போதுமென்ற திருப்தி இல்லாத நெருப்பாக' இருக்காது. ஏனெனில், அறம் சார்ந்த ஆசைகளாக ஆகிவிடுகின்றன.
அறம் சார்ந்த ஆசைகளுக்காகத் திட்டமிடுதலும் , முயற்சிப்பதும், வென்றடைவதும் அனுபவிப்பதும்தான் மனித குலத்துக்கு தர்மம். அதுவே தெய்விகம்.