என்ன சாப்பிடுவது என்ற கேள்வி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எதிர்நின்று பயமுறுத்துகிறது.
லோ கொலஸ்ட்ரால், ஹை புரோட்டீன், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், பாலிபினைல், ஃபோலிக் ஆசிட், குட் கொலஸ்ட்ரால் என்று ஏதேதோ சொல்லி நம்மைப் பயமுறுத்துகிறார்கள்.
போன வாரம் வரை நல்லெண்ணெய் சாப்பிட வேண்டாம் என்று சொன்ன டாக்டர், இந்த வாரம் சூரியகாந்தி எண்ணெய் வேண்டாம்; நல்லெண்ணெய் சாப்பிடுங்கள் என்கிறார். ஒரு டாக்டர் வேர்க்கடலையை விரும்பி சாப்பிடுங்கள் என்கிறார். மற்றவரோ, வேர்க்கடலையைக் கண்ணால்கூட பார்க்கக் கூடாது என்கிறார்.
ஊடகங்கள் ஒருபக்கம் விதவிதமாக சமைத்துச் சாப்பிடுங்கள் என்கிறது. மறுபக்கம் எதைச் சாப்பிடுவதாக இருந்தாலும் இதய நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் என்று சொல்லிப் பயமுறுத்துகிறது.
என் வீட்டில் காகங்களுக்குச் சாப்பாடு வைப்பது வழக்கம். அதனால் காகங்களின் இயல்பை நெருக்கமாக அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. சென்னை காகங்கள் விநோதமானவை. இவை இட்லி, தோசை, சோறு போன்ற எதையும் சாப்பிடுவது இல்லை. நூடுல்ஸ், சிப்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை மட்டுமே சாப்பிடுகின்றன. பலமுறை தட்டில் சோற்றை வைத்து கா... கா... என அழைத்தாலும் நெருங்கி வந்து நுகர்ந்துகூட பார்ப்பது இல்லை. இதற்கு மாறாக எண்ணெய் பலகாரங்கள் எதை வைத்தாலும் உடனே பறந்துவந்து சாப்பிடுகின்றன. காகங்கள் கூடவா சென்னையில் துரித உணவுகளுக்குப் பழகிவிட்டன என்று ஆதங்கமாகவே இருக்கிறது.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவே போதுமானது என்கிறது தேரையர் எழுதிய பதார்த்த குண சிந்தாமணி. இது 15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மருத்துவ நூல். மூன்று வேளை உணவு தேவை என்றால், முதல் உணவை சூரிய உதயத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். இரண்டாவது உணவைச் சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரத்துக்குள்ளும் மூன்றாவது வேளை உணவைச் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்துக்குள்ளும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது இந்த நூல்.
பதார்த்த குண சிந்தாமணி, ஓர் அரிய மருத்துவ நூல். வாழ்வியலுக்கு வழிகாட்டும் இந்தப் புத்தகத்தில் தண்ணீரின் வகை, காய்கறிகளில் என்ன சாப்பிடலாம், ஏன் சாப்பிட வேண்டும், எப்போது எப்படி உறங்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இதோடு உணவின் வகைகள், பழங்களின் வகைகள், உலோக வகைகள், உடலுறவு கொள்வதற்கான நேரம், மனநிலை என சகலமும் ஆராயப்பட்டுள்ளது. உணவு முறைகளைப் பற்றிய நமது பராம்பரிய அறிவு இதுவரை தனித்து தொகுக்கப்படவில்லை. உணவு குறித்து ஆங்கிலத்தில் வெளியாகும் புத்தகங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை மரபான தமிழ் நூல்களுக்கு நாம் தருவது இல்லை.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நோய் வந்தால்... தேவைப்படும் பத்தியமோ, விலக்க வேண்டிய உணவுகளைத் தவிர்த்தோ சாப்பிடுவார்கள். இன்று நோய்வந்துவிடப் போகிறதே எனப் பயந்து பயந்து சாப்பிடுகிறோம். ஒன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவன்கூட கண்ணாடி அணிந்திருக்கிறான். சரிவிகித உணவு கிடைக்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.
மறுபக்கம் 10-ல் ஐந்து பள்ளிச் சிறுவர்கள் அதிக உடல் பருமன் கொண்டிருக்கிறார்கள். நாலு வயது பையனை டயட் இருக்கச் சொல்லி வீட்டில் மிரட்டுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்னொரு பக்கம் என்ன சாப்பிட்டால் ஞாபக சக்தி வளரும், எது சாப்பிட்டால் மெல்லிடை உருவாகும், எந்த உணவு உயரமாக வளரவைக்கும் என மருத்துவரை நாடிப் போய் கேட்கும் அவலம். மறுபக்கம் சக்கை உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, வீட்டு உணவு என்றாலே ஓடி ஒளியும் பிராயத்துப் பிள்ளைகள். சாப்பாட்டுப் பிரச்னை எல்லோரையும் பாடாய்படுத்துகிறது. நின்று நிதானமாக யோசிக்க ஆரம்பித்தால் அன்றைய வேலை கெட்டுவிடும் என்று, ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு ஓட ஆரம்பிக்கிறார்கள்.
சாப்பிடுகிறவருக்கு இவ்வளவு சிக்கல் என்றால், சமைப்பவருக்கு இதைவிட சிக்கல். சமைத்த உணவில் பாதி வீணாகிறது அல்லது ஃபிரிஜ்ஜில் வைத்து ஒரு வாரம் சாப்பிட வேண்டியிருக்கிறது. பசிக்கு சாப்பிடுகிறவர்களைவிடவும், சாப்பிடுகிற நேரம் வந்துவிட்டது என்பதற்காகச் சாப்பிடுகிறவர்கள், இன்று அதிகமாகியிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் உணவைப் பெரிதாக நினைப்பது இல்லை.
தனியாகச் சாப்பிடுவதுதான் உடல்நலக் கேட்டில் முதல் பிரச்னை. தனியாகச் சாப்பிடும்போது அதிகம் சாப்பிடுகிறோம் என்கிறது உணவு அறிக்கை. ஆகவே, கூடி ஒன்றாகச் சாப்பிடுவதே நல்லது. உணவு வீணாகிறதே என்று நினைத்தால், வயிறு வீணாகிவிடும். இல்லத்தரசிகளில் பலர் மிச்சம் இருக்கிற உணவை எல்லாம் சாப்பிட்டு உடலைப் பருமனாக்கிக்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
இரண்டுவிதமான உணவு வகைகள் நம் முன்னே இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய நவீன உணவு. அதில் அதிகம் துரிதவகை உணவுகள், செயற்கை சுவையூட்டிகளால் தயாரிக்கப்பட்டது. நார்ச்சத்து வைட்டமின் குறைவு, அதிக சர்க்கரை - உப்பு சேர்க்கப்பட்டது. இதனால் உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது.
மற்றொன்று நமது மூதாதையர் காலம் தொட்டு உண்ணப்பட்டு வரும் பாரம்பரிய உணவு. இது ஊருக்கு ஊர், சூழலுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. இதில் விதவிதமான சுவைகள், ருசிகள் கிடையாது. ஆனால், உடல்நலத்தை மேம்படுத்தக்கூடியது. இந்த உணவு வகைகள் பருவகால மாறுதல்களுக்கு ஏற்ப உடலைச் சீர்செய்யக் கூடியது.
உள்ளூர் காய்கறிகள், இறைச்சி கொண்டு தயாரிக்கப்படுவது. புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள், சிறு தானியங்கள், காய்கறிகள் பழங்கள் அதிகம் சேர்க்கப்படுபவை. இவை தலைமுறையாகச் சாப்பிடப்படுவதால் கெடுதல் செய்யாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இந்த இரண்டில் எதை நாம் தேர்வுசெய்வது என்பதை நாம் முடிவு செய்வதற்கு பதிலாக சந்தை முடிவு செய்கிறது. பகட்டான விளம்பரங்களும் போலி வாக்குறுதிகளும் கவர்ச்சியான பாக்கெட்டுகளும் மேற்கத்திய உணவே சிறந்தது என்று நம்மிடம் திணிக்கின்றன. இதுதான் இன்றுள்ள முக்கியப் பிரச்னை.
பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழும் மனிதர்கள் பலர் இந்தியாவில் இருக்கிறார்கள், சமண மதத்தில் உள்ள தீவிர சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள், மரத்தில் இருந்து தானே உதிரும் பழங்களை மட்டுமே உண்பார்கள். பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை சாப்பிட மாட்டார்கள்.
பச்சைக் காய்கறிகள் கொண்ட சாலட் உண்பது உலகெங்கும் நடைமுறையில் உள்ளது, சாலட் என்பது பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது, இதன் லத்தீன் மூலம் சாலடா, அதாவது உப்பிடப்பட்டது, 14-ம் நூற்றாண்டில் இந்த சொல் உருவாக்கப்பட்டது. காய்கறிகளை நறுக்கி அதில் உப்பும் வினிகரும் சேர்த்து தருவதால் அது சாலட் என அழைக்கப்படுகிறது.
கிரேக்கர்களும் ரோமானியர்களும் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சாலடுகளாகத் தயாரித்து சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். 19-ம் நூற்றாண்டில்தான் அமெரிக்காவில் க்ரீன் சாலட் சாப்பிடுவது புகழ்பெறத் தொடங்கியது. தேவையான காய்கறிகளை உடனடியாகத் துண்டுகளாக்கி சாலட் தயாரிப்பது போய், முன்னதாகவே துண்டிக்கப்பட்டு சுவையூட்டப்பட்ட ரெடிமேட் சாலடுகள் இப்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
உணவியல் அறிஞர் மைக்கேல் போலன் உணவு விதிகள் என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். நாம் எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான விதிகளை அவர் எளிமையாக வரையறை செய்திருக்கிறார். போலனின் வரையறைகளில் பல நாமும் பின்பற்ற வேண்டியதே.
போலன் 64 விதிகளை வரையறை செய்கிறார், அதில் 10 கட்டளைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.
ஒன்று... உணவுப் பொருட்கள் வாங்க கடைக்குப் போகும்போது, உங்கள் தாத்தா அல்லது பாட்டியை கடைக்கு அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் எதையெல்லாம் சாப்பிட அருகதை அற்றது என்று ஒதுக்குகிறார்களோ, அவற்றை வாங்காதீர்கள். டப்பாவில் அடைத்த தயிரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரசாயனப் பொருள் கலந்த ரெடிமேட் உணவை ஒதுக்கிவிடுவார்கள். பிளாஸ்டிக் பாக்கெட்டில் தயார் நிலையில் உள்ள சப்பாத்தியை ஒருபோதும் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஏன் அவர்கள் இந்த துரித உணவுகளை ஒதுக்குகிறார்கள் என்றால், அனுபவத்தில் சரியான உணவு எது என்பதை கண்டறிந்திருக்கிறார் என்பதால்தான். ஆகவே உங்கள் பாட்டியோ, தாத்தாவோ உங்களுக்கு சிபாரிசு செய்யாத எல்லா உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள், இதுவே உணவைத் தேர்வுசெய்வதில் முதல் படி.
இரண்டாவது விதி... உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவற்காகவே உருவாக்கப்பட்ட உணவு என்று பெரிதாக விளம்பரம் செய்யப்படும் உணவுகளைத் தேர்வுசெய்ய வேண்டாம். பெரும்பாலும் அவர்கள் இதை வெறும் விளம்பர உத்தியாகவே பயன்படுத்துகிறார்கள். போட்டி நிறுவனங்களைவிட தாங்கள் சிறந்தவர்கள் என்று காட்டுவதற்காகவே, அதிக விட்டமின், கார்போஹைட்ரேட், புரோட்டீன், ஃபைபர் உள்ளது என பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.
மூன்றாவது விதி... சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை ஒதுக்கி அதற்குப் பதிலாக பழங்கள், கொட்டைகள், பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகுங்கள்.
நான்காவது விதி... இயந்திரங்களால் சமைக்கப்படும் உணவுகளை ஒதுக்குங்கள். மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் உள்ள கவனமும் ருசியும் அக்கறையும் ஒருபோதும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உணவுகளில் இருக்காது. ஆகவே, இயந்திரங்கள் உருவாக்கும் உணவு வகைகளை ஒதுக்குங்கள்.
ஐந்தாவது விதி... அந்தந்தப் பருவ காலங்களில் விளைகின்ற பழங்கள், காய்கறிகள், கீரைகளை உண்ணுங்கள். எல்லாக் காலத்திலும் மாம்பழம் கிடைக்கிறது என்பது ஏமாற்று. அது உடல்நலத்துக்கு கெடுதல் செய்யும்.
ஆறாவது விதி... நான்கு காலில் உள்ள விலங்குகளை உண்பது செரிமானம் செய்ய நேரமாகும். ஆகவே, குறைவாக உண்ண வேண்டும். பறவைகளின் இறைச்சி சாப்பிடக்கூடியது. ஆனால், அளவோடு அறிந்து சாப்பிட வேண்டும். ஒற்றைக் கால் கொண்ட தாவரங்களில் இருந்து வரும் காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிறது சீனப் பழமொழி. இது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒன்று.
ஏழாவது விதி... இயற்கையாக விளையக்கூடிய தானியங்கள், காய்கறிகள், அரிசியைத் தேர்வுசெய்து சாப்பிடுங்கள். ரசாயன உரமிடப்பட்ட காய்கறிகளில் அதன் பாதிப்பு இருக்கவே செய்யும்.
எட்டாவது விதி... உப்பும் சர்க்கரையும் அதிகம் சேர்க்காத உணவாக தேர்வு செய்யுங்கள். இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒன்பதாவது விதி... செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, மோர், இளநீர் போன்றவற்றை குடியுங்கள்.
10-வது விதி... மருத்துவருக்குப் பணம் கொடுப்பதைவிட பலசரக்குக் கடைக்காரருக்கு கொடுக்கலாம் என்றொரு ஆங்கில பழமொழி உள்ளது. ஆகவே, தேவையான உணவுப்பொருட்களை தரம் அறிந்து தேடிப்பார்த்து வாங்க வேண்டும். அதற்கு சோம்பேறித்தனம் கொண்டால், மருத்துவரைத் தேட வேண்டிய அவசியம் வந்துவிடும். விவசாயியிடம் இருந்து நேரடியாக உணவுப்பொருட்களை பெற முடிந்தால் மிகவும் நல்லது.
போலனின் இந்த விதிகள் அவரது கண்டுபிடிப்பு இல்லை. இது பல்வேறு உணவுப் பண்பாட்டில் முன்பு பின்பற்றப்பட்டவைதான்.