மூத்த குடிமக்கள் பெரும் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தும், அந்தச் சொத்துகளை எல்லாம் தங்கள் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு வயதான காலத்தில் கவனிப்பார் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு உயிரிழந்த கதைகளை நிறைய கேள்விப் பட்டிருக்கலாம்.
இத்தகைய அனுபவங்கள் காரணமாக, தனக்கென ஏதேனும் சொத்துக்கள் இருந்தால்தான் பிள்ளைகள் கடைசிவரை கவனித்துக் கொள்வார்கள் எனக் கூறிக்கொண்டு, உயிரிழக்கும் வரை தங்களுக்கென சில சொத்துக்களை வைத்திருக்கும் மூத்த குடிமக்களையும் பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் சொத்துக்களை பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டால்கூட தங்களுக்கான பராமரிப்பு கிடைக்காதோ என வயதானவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. பெற்றோரை கவனிக்காத பிள்ளைக்கு வழங்கிய சொத்தை மீண்டும் அந்தப் பெற்றோரே திரும்பப் பெறுவதற்கான உரிமையை வழங்கியுள்ளது 2007-ம் ஆண்டின் மூத்த குடிமக்கள் நலன்கள் மற்றும் பராமரிப்பு சட்டம்.
தனக்கிருந்த சொத்துக்களை எல்லாம் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்ட பிறகு, அந்த பிள்ளைகள் தன்னை கவனிக்காமல் விட்டுவிட்டால், நீதிமன்றத்தை நாடி தனது பராமரிப்புக்கு நிவாரணம் தேடிக் கொள்வது மட்டுமே இதுவரை மூத்த குடிமக்களுக்கு ஒரே வழியாக இருந்தது.
இந்நிலையில் 2007-ம் ஆண்டின் மூத்த குடிமக்கள் நலன்கள் மற்றும் பராமரிப்புச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சொத்துக்கள் தொடர்பான மிகப் பெரும் பாதுகாப்பை வழங்கியுள்ளது. தனது மகன், மகள் அல்லது வேறு சொந்தங்களுக்கு தனது சொத்துக்களை தானமாகவோ, வேறு வழிகளிலோ உரிமை மாற்றம் செய்த பிறகு, அந்த சொத்துக்களைப் பெற்றவர் மூத்த குடிமக்களின் பராமரிப்புக்கான முழு பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை, மூத்த குடிமக்களை பாதுகாத்து பராமரிக்க அவர் தவறினால், மூத்த குடிமக்களிடமிருந்து தவறான முறையில் சொத்துக்களை மிரட்டி பறித்துக்கொண்டதாகவே கருதப்படும்.
அத்தகைய சூழலில் தனது பிள்ளைகள் மற்றும் வாரிசுகளுக்கு தானமாகவோ, வேறு வழிகளிலோ சொத்துக்களை உரிமை மாற்றம் செய்த வயதானவர்கள், அந்த உரிமை மாற்றத்தை ரத்து செய்யவும், மீண்டும் அந்த சொத்துக்களுக்கான உரிமையை தாங்களே பெற்றுக்கொள்ளவும் 2007-ம் ஆண்டின் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களிடமிருந்து தானமாகவோ, வேறு வழிகளிலோ சொத்துக்களின் உரிமையைப் பெற்றவர்கள், அந்த வயதானவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களைக் கைவிடாமல் பராமரித்துப் பாதுகாக்கும் கடமையை கட்டாயம் நிறைவேற்றிட வேண்டும். இல்லையெனில் வயதானவர்களிடமிருந்து பெற்ற சொத்துக்களின் உரிமையை அவர்கள் இழக்க நேரிடும்.