தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை என ஒரு பழமொழி உள்ளது. பொதுவாக ஒரு குழந்தையின் குணங்கள் தாய், தகப்பனை ஒட்டியே அமையும் என்பது நமது நம்பிக்கை. தாயின் குணங்களும் தந்தையின் குணங்களும் அவர்களுடைய மூதாதையரின் குணங்களும் மரபணு வழியாகக் குழந்தைக்குக் கடத்தப்படுகின்றன என்று மரபியல் சொல்கிறது.
நமது குணாதிசயங்கள் அனைத்தும் மரபணுவின் டிஎன்ஏவில் உள்ள குறிப்புகளின் பிரகாரமே அமையும் என்றும் அந்தக் குறிப்புகள் பெற்றோரின் மரபணுவிலிருந்து கடத்தப்படும் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் கெயித் காட்ப்ரே இந்த நம்பிக்கையின் ஆணிவேரை அசைத்துள்ளார்.
கருவிலுள்ள குழந்தையின் மரபணு, டிஎன்ஏ தொடர்பான ஆய்வொன்றை அவர் மேற்கொண்டுள்ளார். புற உலகம் சார்ந்து டிஎன்ஏவில் பதிவாகும் குறிப்புகளை ஆராய்ச்சி செய்துள்ளார். சீனர்கள் 131 பேர், மலேசியர்கள் 72 பேர், இந்தியர்கள் 34 பேர் ஆகியோர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கருவில் உள்ள குழந்தையின் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தாயின் வாழ்வியல் நடவடிக்கைகள் - உண்பது, குடிப்பது, உரையாடுவது உள்ளிட்டவை - முக்கியக் காரணங்களாக உள்ளன என்று அந்த ஆய்வு முடிவில் அவர் கண்டறிந்துள்ளார். இதைக் கேட்கும்போது அபிமன்யுவின் கதைதான் நமக்கு நினைவில் வருகிறது. கிருஷ்ணனின் தங்கை சுபத்திரைக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த மகன் அபிமன்யு.
இவன் வயிற்றிலிருக்கும்போதே அவனுக்குக் கதைகளாகச் சொன்னாள் சுபத்திரை என்று மகாபாரதம் சொல்கிறது. இதை வெறும் புராணம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பது போல் இந்த ஆய்வு அமைந்துள்ளது.
ஒரு வீணை இருக்கிறது. அதை யாராவது மீட்டும்போது அதிலிருந்து இனிமையான இசை வெளிப்படுகிறது. கருப்பையிலுள்ள குழந்தையின் மரபணுக்களை ஒரு வீணை போல நினைத்துக்கொள்ளுங்கள். அந்த மரபணு வெளி உலகில் நடக்கும் நடவடிக்கைகள் காரணமாக மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த மாற்றங்கள் குழந்தையின் குணாதிசயங்களை வடிவமைக்கின்றன, அதாவது ஒரு வீணையை மீட்டி மெல்லிசையைத் தவழவிடுவது போல.
இசைக்குத் தொடர்பே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய், கருவில் குழந்தை உள்ளபோது ஏதாவது ஒரு இசைக் கச்சேரிக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது குழந்தையின் டிஎன்ஏவில் இசை தொடர்பான பதிவுகள் உருவாகின்றன. இதனால் எதிர்காலத்தில் அந்தக் குழந்தை இசைத் துறைக்குள் நுழையக்கூடும்.
தாய், தந்தை மரபணு காரணமாகக் குழந்தையின் மரபணுவில் உருவாகும் குணாதிசயங்கள் வெறும் 25 சதவீத அளவிலேயே அமைகிறது என்றும் ஏனைய 75 சதவீதத்தைக் கர்ப்ப காலத்திலான தாயின் நடவடிக்கைகளே நிர்ணயிக்கின்றன என்றும் இந்தப் புதிய ஆய்வு மூலம் பேராசிரியர் கெயித் வலியுறுத்துகிறார்.
உடல் பருமன், இதய நோய் போன்றவை மரபணு வழியாகக் கருவிலுள்ள குழந்தைக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கலாம் எனும் நம்பிக்கையே இதுவரை நிலவிவந்தது. ஆனால் இத்தகைய மரபணு ரீதியான மாற்றங்கள் குழந்தையின் குணாதிசயங்களில் குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனப் பேராசிரியர் கெயித் தெரிவிக்கிறார்.
எதிர்காலத்தில் புற உலக நடவடிக்கைகள் மரபணுவில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான ஆராய்ச்சிக்கான முன்மாதிரி போல் இந்த ஆய்வு நடந்துள்ளது என்றும் தாயின் சத்துமிக்க உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை சார்ந்து ஆகியவை அவளுடைய குழந்தையின் உடல்நலனில் ஏற்படும் மாற்றத்தை இதன் மூலம் ஆராய்ந்துள்ளோம் என்றும் பேராசிரியர் கெயித் கூறுகிறார்.