இனி இல்லை டென்ஷன்!
கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகள் என்றாலே காலை முதலே அதகளப்படும். 'குழந்தையைக் கொஞ்சம் குளிப்பாட்டுங்க!' என்று மனைவி சொல்வதும், 'அது என் வேலை இல்லை, நான் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணனும்' என்று கணவன் சண்டைக்கு வருவதும் தினமும் பார்க்கும் காட்சிகள். இந்த சண்டையால் மனவருத்தம் ஏற்பட்டு, கடைசியில் அது மன உளைச்சலாக மாறும். குழந்தைகள் மீது கோபப்பட வைக்கும். கணவன்-மனைவி இடைவெளி தோன்றும். இது வளர்ந்து பெரிதாகி, மனைவி என்பவள் வேலையை விடவேண்டிய கட்டாயம் உருவாகும். இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு, இதை எப்படி சமாளிப்பது
''இன்றைக்குப் பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடும்பமாகவே இருக்கிறது. கணவன், மனைவி உறவு குறித்த புரிதலை சொல்லித்தர இன்று பெரியவர்கள் யாரும் இல்லை. குடும்பத்தின் அஸ்திவாரமே கணவன், மனைவி உறவுதான். இந்த உறவு மிகவும் நெருக்கமானது. இதில் விரிசல் ஏற்பட்டால் அத்தனையும் வீணாகிவிடும். பிரச்னையை சமாளிக்கும் மனப்பக்குவத்தை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இருவருக்கும் இடையே நெருக்கம் குறையும். இருவரும் பேசிக் கொள்ளக்கூட நேரமிருக்காது. இப்படி பேசாமல் இருப்பதினாலேயே சின்னப் பிரச்னைகூட பெரிதாக வளர்ந்து பூதாகரமாக ஆகிவிடுகிறது. இன்றைய பரபரப்பான சூழலில் இருவரும் தனித்தனி இலக்குகளை வைத்து ஓடுகிறார்களே தவிர, ஒருவருக்காக இன்னொருவர் வாழும் வாழ்க்கை இப்போது இல்லை. இப்படி தனித்தனியாகச் செயல்பட ஆரம்பித்தாலே பிரச்னைதான்.
கணவன், மனைவி வேலை பார்க்கும் வீடுகளில் மிகப் பெரிய பிரச்னை நேரத்தை எப்படி மேலாண்மை செய்வது என்பதுதான். விடுமுறை நாட்கள் ஓய்வெடுப்பதற்காகவே விடப்படுகின்றன என்பது உண்மை என்றாலும், அந்த நாட்களில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, படம் பார்த்து அல்லது ஊர் சுற்றி பொழுதைக் கழித்தால், திங்கட்கிழமை காலை எழுந்தவுடன் போர் வெடிக்கத்தான் செய்யும். விடுமுறை நாட்களில் அலுவலக வேலைகளை கொஞ்சம் மறந்துவிட்டு, வேறு வேலைகளை விரும்பிச் செய்தாலே நம் மனம் புத்துணர்ச்சி அடைந்துவிடும். தவிர, அடுத்த வாரத்தை எதிர்கொள்ளும் தயாரிப்பாகவும் இது இருக்கும். இதற்கு என்னென்ன செய்யலாம்?
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை குழந்தைகளுக்குத் தேவையான யூனிஃபார்ம்களை துவைத்து, அயர்ன் செய்து வைத்துவிடலாம். வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடலாம். ஒன்றிரண்டு நாட்களுக்குத் தேவையான இட்லி மாவை அரைத்து வைத்துவிடலாம். இதனால் அலுவலக நாட்களில் ஏற்படும் தேவையில்லாத பரபரப்பை தவிர்க்கலாம்.
குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது பிரச்னை பெரிதாக இருக்கும். ஆனால், குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான வேலைகளை அவர்களே செய்துகொள்வார்கள் என்பதால் கணவன், மனைவி இருவருக்குமே பிரச்னை குறையும். இது தற்காலிகமானதுதான் என்பதைப் புரிந்துகொண்டாலே பதற்றப்பட வேண்டிய அவசியமிருக்காது.
முடிந்தவரை எந்தெந்த வேலையை யார் செய்வது என கணவன், மனைவி கலந்து பேசி வேலையை பிரித்துக் கொள்வது நல்லது. வேலை என்று வந்துவிட்டால் இந்த வேலையை நான் செய்வதா என்றெல்லாம் கணவன், மனைவி கௌரவம் பார்க்கக்கூடாது. குழந்தையைக் குளிப்பாட்ட கணவன் தயாராக இருக்க வேண்டும். துணிகளை இஸ்திரி செய்ய மனைவியும் தயாராக இருக்க வேண்டும். இதில் ஈகோ பார்த்தால் அமைதி கெடும்.
கணவன்மார்கள் காய்கறி வெட்டுவது, பாத்திரம் கழுவித் தருவது, வீட்டைப் பெருக்குவது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து தந்து மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கலாம். இந்த வேலை செய்தால் என் இமேஜ் என்னாவது என்று நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால், வீட்டு வேலையைச் செய்ய ஒரு பெண் உதவியாளரை நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
முக்கியமாக, வேலைக்குச் செல்லும் மனைவிக்கு ஆதரவாக கணவன் நடந்துகொள்ள வேண்டுமே ஒழிய, வேலைக்கும் சென்றுவர வேண்டும்; வீட்டு வேலைகள் அத்தனையும் செய்ய வேண்டும் என்று சொல்லக்கூடாது. வீட்டு வேலை அழுத்தத்தோடு, அலுவலக வேலையையும் பெண்கள் சுமக்க வேண்டிய அவசியம் இருப்பதால், வீட்டில் அவர்களை அதட்டி மிரட்டக்கூடாது. காலதாமதமாக வருவதை தேவை இல்லாமல் பெரிது படுத்தக் கூடாது.
அதேபோல, நான் சம்பாதிக்கிறேன்; எனவே, வீட்டு வேலையைச் செய்ய மாட்டேன் என மனைவியும் அடம் பிடிக்கக்கூடாது. நிறைய சம்பாதிப்பவர்கள் வாய்ப்பிருந்தால் வீட்டு வேலை செய்ய ஒரு உதவியாளரை நியமித்தாலும் தவறில்லை.
தவிர கணவன், மனைவி இருவரும் வாரக் கடைசியில் ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்று, மனதை இலகுவாக்கிக்கொண்டு வரலாம். இது முழுக்க முழுக்க மனம் சார்ந்த பிரச்னை என்பதால், மனம்விட்டுப் பேசினாலே, வீட்டிலும் சந்தோஷமாக இருக்கலாம்; அலுவலகத்திலும் கலக்கலாம்.''