பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்து பலியான இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதியைத் தொடர்ந்து, ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனுக்கு அடியில் சிக்கி பலி, பள்ளியில் உள்ள படிக்கட்டில் விழுந்து உயிர் இழந்த மாணவன், பேருந்தை வேகமாக ஓட்டிச்சென்று மழலையின் மரணத்துக்குக் காரணமான ஓட்டுநர் என்று ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காகத் தொடரும் துயரச் சம்பவங்கள் தமிழகப் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. 'காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மாலை நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுமே' என்ற கவலை பெற்றவர்களுக்கு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் உடல்நலத்துக்கும் எந்தக் குந்தகமும் இல்லாமல் அவர்களை எப்படிக் காப்பது?
''பள்ளிக்கூட நிர்வாகம், ஆசிரியர்கள், சமூகம் என்று பல்வேறு தரப்பினருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்றாலும், பெற்றெடுத்த குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அக்கறையும் பொறுப்பும் மற்ற எல்லோரையும்விட பெற்றோர்களுக்கே அதிகம் இருக்கிறது. பெற்றோர்கள் மனதுவைத்தால், பெரும்பாலான அபாயங்களைத் தவிர்க்க முடியும்'' என்று சொல்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் ராஜ முரளி மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லும் ஏழு பொன் விதிகள் இவை!
அருகில் உள்ள பள்ளியே அனுகூலம்
ஏழையாக இருந்தாலும், தன் பிள்ளை தனியார் பள்ளியில் படிப்பதைத்தான் இன்றைய பெற்றோர் விரும்புகின்றனர். பெரிய பள்ளிகளில் தன் பிள்ளைகள் படிப்பதையே பெருமையாக நினைக்கின்றனர். இது தேவையற்றது. அரசுப் பள்ளிகளில் படித்து மாநில அளவில் முதல் இடத்தில் தேறும் கிராமத்துக் குழந்தைகள் இல்லையா என்ன? தொலைதூரப் பள்ளியைத் தேர்ந்தெடுத்துவிட்டு, நெருக்கியடித்துப் பேருந்துகளில் படிகளில் நின்று அவர்கள் பயணிப்பதைப் பதற்றத்துடன் பார்ப்பதைவிடவும் அருகில் உள்ள பள்ளி பாதுகாப்பானது அல்லவா? கூடுமானவரை வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுங்கள் அல்லது உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் அருகே வீட்டை மாற்றிக்கொள்ளுங்கள். இது குழந்தைகள் நிதானமாகப் பள்ளிக்குச் செல்ல உதவுவதுடன் நீங்களே அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும் வழிவகுக்கும். நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படுவதால், வீட்டுக்கு வெளியே அவர்களுடைய பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் விஷயங்களை நீங்கள் உடனடியாக அறிந்துகொள்ளவும் அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் இது உதவும். தவிர, மழலைகளின் சின்ன நாசிக்குள் மாசுபட்டக் காற்று புகுவதன் மூலம் உடல்ரீதியான பிரச்னைகள் உருவாகின்றன. தொலைதூரப் பள்ளிகளுக்குத் தினமும் பயணம் மேற்கொள்வது இத்தகைய பிரச்னைகளை அதிகரிக்கும். ஐரோப்பிய நாடுகளில் பள்ளியில் இருந்து தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது.
கண்காணியுங்கள்
குழந்தைகள் பள்ளி வாகனத்தில் பயணம் செய்வதாக இருந்தால், அந்த வாகனம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா, வாகனத்தில் பயணிக்கும் எல்லாக் குழந்தைகளும் உள்ளே உட்கார்ந்து செல்ல இடம் இருக்கிறதா, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்கிறதா, ஓட்டுநர் குழந்தைகளை எப்படி அணுகுகிறார், அவருடைய செயல்பாடு எப்படி - உதாரணமாக பணியில் இருக்கும்போது செல்பேசி அழைப்பு வந்தால் என்ன செய்கிறார், வாகனத்தில் ஓட்டுநர் நீங்கலாக உதவிக்கு ஆட்கள் யாரும் இருக்கிறார்களா... இப்படியான விஷயங்களை எல்லாம் அவ்வப்போது கண்க£ணிப்பது அவசியம். அதேபோல, வகுப்பறையில் காற்றோட்டமானச் சூழல் இருக்கிறதா, கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா, மாடிப்படிகள் விசாலமாக இருக்கின்றனவா, பள்ளி மணி அடித்ததும் குழந்தைகள் அடித்துப் பிடித்து ஓடி வராமல் நிதானமாக வருகிறார்களா, சாலையில் போக்குவரத்தை ஒருங்கிணைக்க பள்ளி வாசலில் காவலாளியோ, ஆசிரியர்களோ நிறுத்தப்பட்டு இருக்கிறார்களா, பள்ளி அமைந்து இருக்கும் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருக்கிறதா... இப்படியான விஷயங்களை அடிக்கடி கவனியுங்கள்.
குழந்தைகளுடன் பேசுங்கள்
தினந்தோறும் குழந்தைகளிடம் மனம் விட்டு அரை மணி நேரமாவது உரையாடுங்கள். அதாவது, குழந்தை வெளிப்படையாக உங்களிடம் பேச உகந்த சூழலை உருவாக்குங்கள். 'இன்னைக்குப் பள்ளிக்கூடத்துல என்ன நடந்துச்சு, டீச்சர் என்ன சொன்னாங்க, என்னென்ன படிச்சீங்க, என்னவெல்லாம் விளையாண்டீங்க?' - இப்படி எல்லாம் குழந்தைகளை அன்பாய் விசாரிக்கும்போது, 'ராமு கிரவுண்டுல ஓடும்போது பெரிய பள்ளத்துல விழுந்துட்டாம்மா... அடி பட்டுடுச்சு' எனக் குழந்தை சாதாரணமாக உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும். மைதானத்தில் உள்ள பெரிய குழியை அது உங்களுக்கு உணர்த்தும். 'இன்னைக்கு எங்க வேன்தான் ஃபர்ஸ்ட்' என்றால், வேன் ஓட்டுநர் வேகமாக ஓட்டும் அபாயத்தை உணர்ந்துகொள்ளலாம்.
உடனே செயல்படுங்கள்
பள்ளி சார்ந்தோ, குழந்தைகள் சார்ந்தோ ஏதோ ஒரு விஷயம் திருத்தப்பட வேண்டும் என்றால், உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உதாரணமாக, பள்ளிக் கழிப்பறை சரி இல்லை அல்லது பள்ளி வாகனம் பழையதாக இருக்கிறது என்றால், பள்ளி நிர்வாகத்திடம் பேசுங்கள். பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தில் வேகத்தடை அவசியம் என்று கருதினால், சம்பந்தப்பட்ட துறையினரிடம், மக்கள் பிரதிநிதிகளிடம் பேசுங்கள். உங்கள் கோரிக்கைகள் எடுபடாத சூழலில், மற்ற பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து உயர் அலுவலர்களைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வழிவகுங்கள்.
புத்தகச் சுமையும் பிரச்னைதான்
குழந்தைகளின் எடை, உயரத்தைத் தாண்டி பெரிய புத்தகப் பையை முதுகில் மாட்டிவிடுகின்றனர் பெற்றோர். ஒரு குழந்தையும், மற்றொரு குழந்தையும் அருகருகே நடக்க முடியாத அளவுக்குப் புத்தகப் பை இருப்பது நல்லது அல்ல. இது குழந்தைகள் நடந்து செல்லும்போது தடுமாற்றத்தையும் விபத்து வாய்ப்புகளையும் உருவாக்கும். மேலும், இடுப்பு வலி, கழுத்து வலி, கை, கால் வலியையும் உண்டாக்கலாம். தேவையான புத்தகங்களை மட்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்லவும், பள்ளியிலேயே புத்தகத்தைப் பாதுகாக்கவும் பள்ளி நிர்வாகத்துக்குப் பெற்றோர்களே யோசனை சொல்லலாம்.
குழந்தை அழுகைக்கு மதிப்பு அளியுங்கள்
குழந்தை பள்ளிக்குச் செல்ல மறுத்தாலோ, அழுதாலோ விசாரியுங்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உடன் படிக்கும் குழந்தைகளின் அச்சுறுத்தலோ, கண்டிப்பான ஆசிரியரின் அணுகுமுறையோ, சுமக்க முடியாத வீட்டுப்பாடங்களோகூட குழந்தைக்குப் பள்ளியின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். குழந்தையின் குறைகளைக் கேட்டறிந்து பிரச்னைகளைத் தீருங்கள். மன அழுத்தத்துடன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும் பாதுகாப்பின்மைதான் என்பதை உணருங்கள்.
விழிப்பு உணர்வை உருவாக்குங்கள்
முக்கியமாக குழந்தைகளிடம் விபத்துகுறித்த விழிப்பு உணர்வை உருவாக்குங்கள். பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் விபத்துச் செய்திகள் வெளியாகும்போது, குழந்தைகளை அழைத்து அவற்றைக் காட்டி எப்படி எல்லாம் விபத்துகள் நடக்கின்றன, யாருடைய அலட்சியம் காரணம், இதனால் என்னவெல்லாம் பின்விளைவுகள் ஏற்படுகின்றன, விபத்துகளை எப்படித் தவிர்த்து இருக்கலாம் என்று அவர்களுடன் பேசுங்கள். சாலையில் எப்படி நடப்பது என்பதில் தொடங்கி வாகனத்தில் எப்படிப் பாதுகாப்பாக அமர்ந்துப் பயணிப்பது என்பதுவரை சகல விஷயங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளியுங்கள். சின்ன வயதில் இருந்தே இத்தகைய விழிப்பு உணர்வை அவர்களிடத்தில் உருவாக்குவதன் மூலமே அவர்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முடியும்!